என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சென்னை
- வரிப்பகிர்வுக் கொள்கை வளர்ச்சியடைந்த மாநிலங்களை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது.
- கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது.
சென்னை:
தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வரிப் பகிர்வுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள 16-ம் நிதி ஆணையத்தின் தலைவர் முனைவர் அர்விந்த் பனகாரியாவுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மத்திய அரசின் வரிவருவாயை மத்திய - மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசுடன் விவாதிப்பதற்காக தங்களின் தலைமையிலான 16-ம் நிதி ஆணையத்தின் குழு 4 நாள் பயணமாக சென்னைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. வரிப்பகிர்வில் தமிழ்நாட்டிற்கு உரிய பொருளாதார நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே, மாநில நிதி உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்காக குரல் கொடுத்துவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் இக்கடிதத்தை எழுதுகிறேன்
இந்தியா விடுதலையடைந்து, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் 1952-ம் ஆண்டு முதல் நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவை அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாயில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே மத்திய அரசின் வரிப் பகிர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை ஆகும். இந்த நிலை என்றாவது ஒரு நாள் மாற வேண்டும். ஆனால், 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, 73 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி போக்கப்படவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் வளர்ச்சியடையாத மாநில மாநிலங்களுக்கு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு தான் நிதி வழங்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், வரிப்பகிர்வுக் கொள்கை வளர்ச்சியடைந்த மாநிலங்களை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட 10 விழுக்காடு ஆகும். ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் 41 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் தமிழ்நாட்டிற்கு வெறும் 4.079 சதவீதம் மட்டும் தான் கிடைக்கிறது. அதாவது தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெறப்படும் ஒரு ரூபாயில் 29 காசுகள் மட்டும் தான் வரிப்பகிர்வின் பங்காக திரும்ப அளிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவு ஆகும். இது எந்த வகையிலும் நியாயம் அல்ல.
1952-ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதலாம் நிதி ஆணையத்தின் அறிக்கைப்படி, இன்றைய தமிழ்நாட்டை உள்ளடக்கியுள்ள அன்றைய சென்னை மாகாணத்திற்கு 15.25 சதவீதம் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் இப்போது வரை தமிழகத்திற்கான பங்கு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தாராளமயமாக்கள் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்திற்கான வரிப்பகிர்வு பங்கின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. 1957-ஆம் ஆண்டில், இரண்டாவது நிதி ஆணையத்தின் அறிக்கைப்படி 8.40% ஒதுக்கப்பட்டது. அதன்பின் முறையே 8.13 சதவீதம், 8.34 சதவீதம், 8.18 சதவீதம், 7.94 சதவீதம், 8.05 சதவீதம், 7.56 சதவீதம், 7.93சதவீதம், 6.63 சதவீதம், 5.38 சதவீதம், 5.31 சதவீதம், 4.96 சதவீதம், 4.02 சதவீதம் எனக் குறைந்து பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.09 சதவீதம் ஆகக் குறைந்து விட்டது.
ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி வருவாயில் 7.931சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது. இந்த வகையில் மட்டும் தமிழ்நாட்டிற்கு கடந்த 30 ஆண்டுகளில் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்பது மத்திய அரசு வரையறுத்துள்ள சில அளவீடுகளின் அடிப்படையிலானது தானே தவிர, உண்மையாக தமிழ்நாடு வளர்ச்சியடையவில்லை.
2024-25-ம் ஆண்டில் பள்ளிக்கல்விக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.44,042 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 1.39 சதவீதம் மட்டும் தான். அதேபோல், சுகாதாரத்துறைக்கு நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.20,198 கோடி மட்டுமே.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 0.64 சதவீதம் தான். ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கான ஒதுக்கீடு 6 விழுக்காடாகவும், சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு 3 சதவீதம் ஆகவும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிதி ஒதுக்க முடியாத நிலையில் இருக்கும் தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறிக் கொண்டு, அதன் நிதியை பிற மாநிலங்களுக்கு ஒதுக்குவதை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டுவசதி, சாலைகள், பிற கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அதற்கான முதன்மைக் காரணம் தமிழக அரசிடம் நிதி இல்லாதது தான். 2017-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மது, எரிபொருள் தவிர்த்து மீதமுள்ள பொருட்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
அதனால், மாநிலங்களின் வருவாய் ஆதாரம் குறைந்து விட்ட நிலையில், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கையும் குறைப்பது பெரும் தண்டனையாகி விடும். மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் வரிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதேபோல், செஸ் மற்றும் கூடுதல் தீர்வைகளை வசூலிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசும், நிதி ஆணையமும் கருதினால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பகிர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- 2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசியர்கள் மறுநியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நிதிக்குழுவுக்கு தமிழக அரசு முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டது.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மானியம், குறைந்தபட்சம் 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
சென்னையில் இன்று 16வது நிதி ஆணைய குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா, நிதிக்குழு உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, அன்னி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது நிதிக்குழுவுக்கு தமிழக அரசு முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டது.
மாநில பேரிடர் மேலாண்மை நிதியை 2026-27ம் ஆண்டு காலகட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று நிதி ஆணைய குழுவுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை காலத்தில் செயல்படுத்த நிதி அளவுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவிலிருந்து 10 சதவீத என்ற அளவில் உயர்த்தப்பட வேண்டும்.
நகர்ப்புற வெள்ளம், வறட்சி நிவாரணம், கடலோர மேலாண்மை மேற்கொள்ள குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மானியம், குறைந்தபட்சம் 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
கடற்கரையின் நீளம், நகரமயமாக்கல் போன்ற வரையறை உள்ளிட்ட புதிய குறியீடுகளுடன் பேரிடர் குறியீடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50:50 என்ற விகிதத்தின் அடிப்படையில் மானியம் ஒதுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான பகிர்வானது மாநிலங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
- தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆலிசாவுக்கு ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
- முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.
பாஜகவின் திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக இருப்பவர் ஆலிசா அப்துல்லா.
இவர், தனக்கு தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த நபரை அவர் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அழைத்து வந்து போலீசிடம் ஒப்படைத்து அதிரடி காட்டியுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதையில் இருந்த அந்த நபர், அலிசாவிடம் தன்னுடன் படுக்கவும், தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆலிசா, அந்த நபர் தங்கியிருந்த ஓட்டலுக்கே சென்று, கையும் களவுமாக பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையே, இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் ஆலீசா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், பெரிய கட்சியில் பதவியில் உள்ள தன்னை போன்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களுக்கு என்ன நிலைமை எனவும் ஆலிசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
I got many calls with texts msgs asking me to sleep with him and asking me for body massages and abusive words. I waited for hours with no proper response from the police nor the hotel authorities "Ginger hotel omr" I made sure I brought him down put in my car, taking him… pic.twitter.com/8vh9DkqFv8
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) November 18, 2024
- சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கஸ்தூரியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- நடிகை கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசுகையில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவானார்.
பின்னர் கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகை கஸ்தூரியிடம் விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில், தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருப்பதாக எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர். கைது செய்ய சென்றபோது நடிகை கஸ்தூரி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். 'எனது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறேன். நான் பேசியதற்கு ஏற்கனவே மன்னிப்பும் கேட்டு விட்டேன். அப்படி இருக்கும்போது கைது செய்வதற்கு ஏன் இப்படி அவசரம் காட்டுகிறீர்கள்' என்றார்.
அதற்கு போலீசார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உடனே கைது செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று அவருக்கு விளக்கினார்கள். அதன் பிறகு அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 1½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் பேசிய வீடியோ ஆதாரங்களை காட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர், 'எதிர்பாராத விதமாக உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசிவிட்டேன். நான் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். தெலுங்கு பேசும் பெண்களை நான் மதிப்பவள்' என்று தெரிவித்தார்.
விசாரணை முடிந்ததும் நடிகை கஸ்தூரியை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் சாப்பாடு வேண்டாம், ஜூஸ், சாண்ட்விச் போதும் என்றார். இதையடுத்து அவற்றை போலீசார் வாங்கி கொடுத்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது கஸ்தூரி, தனக்கு 12 வயதில் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதாகவும், அவனை நான் தான் கவனிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு மாஜிஸ்திரேட்டு, 'மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் நாங்கள் உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது.
எனவே உங்கள் மகனை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என்றார். இதையடுத்து நடிகை கஸ்தூரி தனது மகனை உறவினர்களிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு அவர் புழல் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் ஜெயிலுக்கு அழைத்து வரப்படும் கைதிகள் முதல் நாளில் அங்குள்ள ஹாலில் மொத்தமாக வைக்கப்படுவது வழக்கம். நேற்று சுமார் 15 பெண் கைதிகள் வந்திருந்தனர். அவர்களுடன் ஹாலில் நடிகை கஸ்தூரி வைக்கப்பட்டு இருந்தார்.
கஸ்தூரி சினிமா நடிகை என்பதால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அதனால் அவர் நேற்று இரவு ஜெயிலில் தூக்கமின்றி அவதிப்பட்டார். நேற்று பிற்பகலில் ஜெயிலுக்கு சென்றபோது சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
நேற்று மதியம் அவர் ஜெயிலில் சாப்பிடவில்லை. நேற்று இரவு கலவை சாதம் வழங்கப்பட்டது. அதை குறைந்த அளவிலேயே அவர் சாப்பிட்டார். இன்று காலையில் பொங்கல், கிச்சடி வழங்கப்பட்டது. அதையும் அவர் விரும்பாததால் குறைவாகவே சாப்பிட்டார்.
சக கைதிகளுடன் அடைப்பு ஜெயிலில் முக்கிய பிரமுகர்களுக்கு ஏ1 வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். நடிகை கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர் முறைப்படி கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அதுவரை அவர் சக பெண் கைதிகளுடனேயே அடைக்கப்படுவார்.
அதன்படி நேற்று ஜெயிலில் உள்ள ஹாலில் சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டு இருந்த கஸ்தூரி இன்று வேறு அறைக்கு மாற்றப்பட்டு சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டார்.
- 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன.
- சிறப்பு முகாம் வருகிற 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன.
அந்தந்த பகுதிகளுக்ககு உட்பட்ட பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று திருத்தம் செய்வதற்கான மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதியேற்ற நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 46,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 31,279 மனுக்கள் 18 வயது நிரம்பிய இளம் வயதினர் ஆவர். அவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளனர்.
657 பேரின் பெயரை நீக்கவும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்வதற்காக 14,231 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக 3,531 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில் 3,187 பேர் மனு கொடுத்தனர்.
சிறப்பு முகாம் வருகிற 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
- சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
- அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக பாரிமுனை - முகப்பேர், வடபழனி, தரமணி வழித்தடங்களில் ஆய்வு செய்து மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 4.079 சதவீதமாக தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழ்நாடு பெரும் பேரழிவினை சந்தித்து வருகிறது.
சென்னை:
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்து அளிக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 280-ன் படி மத்திய அரசு நிதி கமிஷன் அமைத்துள்ளது.
உயரிய அதிகாரங்கள் படைத்த நிதி கமிஷன் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்துவது வழக்கம். அடுத்த 5 ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வருவாய் திட்டம் எப்படி இருக்க வேண்டும். என்னென்ன பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் தரவுகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று நிதிக்குழு விவரங்களை சேகரித்து வருகிறது.
அதன் அடிப்படையில், 16-வது நிதி கமிஷன் தலைவர் அரவிந்த் பன காரியா தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் சிறப்பு விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். இந்த குழுவின் உறுப்பினர்களான அஜய் நாராயணன் ஷா, ஆனிஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சாமியா காண்டி கோஷ், செயலாளர் ரித்விக் பாண்டே, இணைச் செயலாளர் ராகுல் ஜெயின் உள்ளிட்ட 12 பேரும் அவருடன் வந்திருந்தனர்.
கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கி இருந்த இவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்று விருந்து அளித்தார்.
இன்று அதே நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நிதிக்குழு தலைவர், மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்குவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றிய அரசுக்கும், பல்வேறு மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புகளை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கனவே வரையறுத்து தந்திருக்கிறது.
அத்தகைய வழிகாட்டுதலின்படி நாம் கடைபிடித்து வரும் கூட்டாட்சி தத்து வத்தை பின்பற்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தமது மாநிலங்களின் உரிய தேவைகளை நிறைவேற்றுவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் உரிய பங்காற்றி வருகின்றன.
எனினும், சுகாதாரம், கல்வி, சமூகநலம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்துக்கான பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள்தான், நிறைவேற்றி வருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதற்கு மாறாக இந்த பொறுப்புக்களை எல்லாம் நிறைவேற்ற தேவையான வருவாயை பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளது.
அந்த வகையில் கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு பகிர்ந் தளிக்க கூடிய வரி வருவாய் பங்கினை 41 சதவீதமாக உயர்த்தியதை நாங்கள் உளமாற பாராட்டுகிறோம் என்னும் இந்த பரிந்துரைக்கு மாறாக, கடந்த 4 ஆண்டுகளில், ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில், 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் இடம் பெற்றிருக்கும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை, ஒன்றிய அரசு இக்காலக்கட்டத்தில் பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம்.
அதுமட்டுமின்றி ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகை, தொடர்ந்து உயர்ந்து வருவது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலைமையை மேலும் பாதிக்கின்றது.
ஒருபுறம் ஒன்றிய அரசில் இருந்து வரவேண்டிய வரி பகிர்வு குறைவதால், மாநில அரசுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிகநிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.
எனவே ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரி பகிர்வு பங்கு 50 சதவீதம் உயர்த்தப்படுவது தான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு 50 சதவீதம் பகிர்வு வழங்கப்பட்டால் மட்டுமே, மாநிலங்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும்.
எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு உரிய அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள் வாயிலாக ஒரு உச்சவரம்பை இந்த நிதிக்குழு பரிந்துரைத்தது. மாநில அரசுகளுக்கான 50 சதவீத வரிப்பகிர்வை உறுதி செய்திடும் என்று நான் நம்புகிறேன்.
மாநிலங்களுக்கு இடையேயான வரிப் பகிர்வை முறைப்படுத்துவதில், சமச்சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது. 9-வது நிதிக்குழு பரிந்துரைத்த 7.931 சதவீதத்தில் இருந்து கடந்த 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 4.079 சதவீதமாக தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது.
நாட்டிற்கே வழி காட்டும் வகையில் பல முன்னோடி நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, செம்மையான நிர்வாகத்தை தொடர்ந்து நல்கி வரும் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை தொய்வடைய செய்து தண்டிப்பதை போல, தற்போதைய வரிப் பகிர்வு முறை அமைந்து உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
எனவே சமச்சீரான வளர்ச்சியையும், திறமையான நிர்வாகத்தையும், இந்த வரிப் பகிர்வு முறையில், நம் குறிக்கோளை கருதி இந்த நிதிக்குழு தனது பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம்.
நாட்டின் சமச்சீரான வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில் வளர்ச்சி குன்றிய பகுதிகளுக்கு தேவையான நிதியை வழங்குவது அவசியம் என்றாலும், அதே வகையில் பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை அளிப்பதின் மூலமாகவே, அவற்றின் வளர்ச்சியை தக்க வைப்பதுடன், அந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பாதைக்கும் வழிவகுக்க முடியும் என் பதையும் நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியைக் குறைத்து வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்கும் வரிப்பகிர்வும் குறைந்துவிடும் என்பதே உண்மை.
குறுகிய காலக் கண்ணோட்டத்தோடு செயற்கையாக உருவாக்கப்படும் நிதி மறுபகிர்வுமுறை எதிர்காலத்தில் எதிர்பார்த்த பலன்களை தராது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு சிறந்த நிர்வாக அமைப்புடன் திறம்பட செயலாற்றி வரும் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வகையில் நிதிப் பகிர்வு முறையை மாற்றுவதன் மூலம் இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்களிப்பு செய்திட முடியும்.
முந்தைய நிதிக் குழுக்களின் பரிந்துரைகளைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது, கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து அதிக நிதியை வழங்கிய போதும், பல மாநிலங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த 45 ஆண்டுகளாக நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் மறுபகிர்வு முறையின் மூலம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, 16-வது நிதிக் குழு இத்தகைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து நாட்டின் பின்தங்கிய மாநிலங்களுக்கு உரிய நிதி ஆதாரங்களை வழங்கிடும்போது, வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியைப் பாதிக்காத அளவில், தேவையான நிதியை வழங்குவதற்கான ஒரு புதிய அணுகுமுறையை வடிவமைப்பதற்கான தேவை இன்று உருவாகி இருப்பதாகவே நம்புகிறேன்.
இந்நிலையில், தமிழ்நாடு சந்தித்து வரும் மூன்று குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழ்நாடு பெரும் பேரழிவினை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு புயல்கள் மற்றும் இடைவிடாத மழைப் பொழிவு மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களின் உயிர், உடமை மற்றும் வாழ்வாதாரம் மட்டுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இயற்கைப் பேரிழிவுகளினால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்வதற்கு பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் இதன்காரணமாக மாநில மக்கள்தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்தரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம். 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முடிவடையும் பொழுது தமிழ்நாட்டின் சராசரி வயதானது
38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதான வர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.
தமிழ்நாடு இதுவரை பெற்று வந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு, தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது. அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்னால், முதியவர்கள்அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது. இந்த மிகமுக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நகர்ப்புர கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவதும் தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது. குறைவான நில வளம் மற்றும் நீர் வளம் ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள்தொகை மறுபுறம்-இவற்றுக்கு இடையே சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்திடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கிடவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் மானியங்களை வழங்கிட நிதிக்குழு பரிந்துரை செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களின் செலவினங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உயர்ந்து வரும் வேளையில் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்த பின்னர் மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் பல தடைகளை சந்தித்து வருகின்றன. இதனால் ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வை மாநிலங்கள் மிகவும் சார்ந்திருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில் 16-வது நிதிக்குழுவின் பங்கும், அதன் பரிந்துரைகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
தமிழ்நாட்டின் 8 கோடி மக்களும் இந்த நிதிக்குழுவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்திடும் நோக்கில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு அரியவாய்ப்பை காலம் நமக்கு வழங்கி இருக்கிறது. இதைக் கருத்திற்கொண்டு 16-வது நிதிக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழ்நாடு அரசின் சார்பாக நிதிக்குழுவின் பரிசீலனைக்கு வழங்கப்பட இருக்கும் விரிவான அறிக்கையினை கவனத்துடன் பரிசீலித்து, கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை 16-வது நிதிக்குழு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். சமச்சீரான வாய்ப்புகளை வழங்கும் முற்போக்கான அணுகுமுறையின் மூலமாகவே இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை அடைந்திட இயலும் என்பது எங்களுடைய திடமான நம்பிக்கை. ஒவ்வொரு மாநிலமும் அவற்றின் முழு திறனுக்கு ஏற்றவகையில் வளர்ச்சியை எட்டுவதன் மூலமாகவே இந்தியத் திருநாட்டை உலக அரங்கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலைநிறுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து தொழில்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இறுதியாக மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களை நிதி ஆணைய குழுவினர் சந்தித்து விரிவாக பேச உள்ளனர்.
இதைத் தொடர்ந்து நாளை காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலிக்கு சென்று கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை பார்வையிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று ஏற்றுமதி தொடர்புடைய யூனிட்டுகளை பார்வையிடுகின்றனர்.
அதன்பிறகு நாளை மதியம் சிறப்பு விமானம் மூலம் மதுரை செல்கின்றனர். அங்கிருந்து ராமேசுவரம் செல்லும் நிதி ஆணைய குழுவினர் இரவு ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.
20-ந் தேதி காலையில் தனுஷ்கோடி செல்லும் இக்குழுவினர் பின்னர் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் சென்று பார்வையிடுகின்றனர். அதன்பிறகு கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை பார்த்துவிட்டு சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
- சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நவம்பர் 24-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை வரை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் 24-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு திருவிழா நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
- 2025-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு திருவிழா நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
மாமல்லபுரத்தில் ஏற்கனவே நடத்திய மாநாட்டில் கலவரம் ஏற்பட்டதால் 12 ஆண்டுகள் சித்திரை திருவிழா நடைபெறவில்லை.
வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் சித்திரை திருவிழா நடத்த கோரிய நிலையில் காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
2025-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்ப் பற்று-ஈகையுணர்வு-விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பர் கப்பலோட்டிய தமிழன்.
- இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
தமிழ்ப் பற்று-ஈகையுணர்வு-விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்ப் பற்று - ஈகையுணர்வு - விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் அவர்களது நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது… pic.twitter.com/MSe6XKKOU2
— M.K.Stalin (@mkstalin) November 18, 2024
- தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது.
- தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.
தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆடசி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.
எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்புதமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி…
— TVK Party Updates (@TVKHQUpdates) November 18, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்