என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்துக்கு 50 சதவீத வரி பகிர்வு தர வேண்டும்- மு.க.ஸ்டாலின்
- கடந்த 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 4.079 சதவீதமாக தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழ்நாடு பெரும் பேரழிவினை சந்தித்து வருகிறது.
சென்னை:
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்து அளிக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 280-ன் படி மத்திய அரசு நிதி கமிஷன் அமைத்துள்ளது.
உயரிய அதிகாரங்கள் படைத்த நிதி கமிஷன் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்துவது வழக்கம். அடுத்த 5 ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வருவாய் திட்டம் எப்படி இருக்க வேண்டும். என்னென்ன பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் தரவுகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று நிதிக்குழு விவரங்களை சேகரித்து வருகிறது.
அதன் அடிப்படையில், 16-வது நிதி கமிஷன் தலைவர் அரவிந்த் பன காரியா தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் சிறப்பு விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். இந்த குழுவின் உறுப்பினர்களான அஜய் நாராயணன் ஷா, ஆனிஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சாமியா காண்டி கோஷ், செயலாளர் ரித்விக் பாண்டே, இணைச் செயலாளர் ராகுல் ஜெயின் உள்ளிட்ட 12 பேரும் அவருடன் வந்திருந்தனர்.
கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கி இருந்த இவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்று விருந்து அளித்தார்.
இன்று அதே நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நிதிக்குழு தலைவர், மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்குவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றிய அரசுக்கும், பல்வேறு மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புகளை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கனவே வரையறுத்து தந்திருக்கிறது.
அத்தகைய வழிகாட்டுதலின்படி நாம் கடைபிடித்து வரும் கூட்டாட்சி தத்து வத்தை பின்பற்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தமது மாநிலங்களின் உரிய தேவைகளை நிறைவேற்றுவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் உரிய பங்காற்றி வருகின்றன.
எனினும், சுகாதாரம், கல்வி, சமூகநலம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்துக்கான பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள்தான், நிறைவேற்றி வருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதற்கு மாறாக இந்த பொறுப்புக்களை எல்லாம் நிறைவேற்ற தேவையான வருவாயை பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளது.
அந்த வகையில் கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு பகிர்ந் தளிக்க கூடிய வரி வருவாய் பங்கினை 41 சதவீதமாக உயர்த்தியதை நாங்கள் உளமாற பாராட்டுகிறோம் என்னும் இந்த பரிந்துரைக்கு மாறாக, கடந்த 4 ஆண்டுகளில், ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில், 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் இடம் பெற்றிருக்கும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை, ஒன்றிய அரசு இக்காலக்கட்டத்தில் பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம்.
அதுமட்டுமின்றி ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகை, தொடர்ந்து உயர்ந்து வருவது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலைமையை மேலும் பாதிக்கின்றது.
ஒருபுறம் ஒன்றிய அரசில் இருந்து வரவேண்டிய வரி பகிர்வு குறைவதால், மாநில அரசுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிகநிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.
எனவே ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரி பகிர்வு பங்கு 50 சதவீதம் உயர்த்தப்படுவது தான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு 50 சதவீதம் பகிர்வு வழங்கப்பட்டால் மட்டுமே, மாநிலங்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும்.
எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு உரிய அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள் வாயிலாக ஒரு உச்சவரம்பை இந்த நிதிக்குழு பரிந்துரைத்தது. மாநில அரசுகளுக்கான 50 சதவீத வரிப்பகிர்வை உறுதி செய்திடும் என்று நான் நம்புகிறேன்.
மாநிலங்களுக்கு இடையேயான வரிப் பகிர்வை முறைப்படுத்துவதில், சமச்சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது. 9-வது நிதிக்குழு பரிந்துரைத்த 7.931 சதவீதத்தில் இருந்து கடந்த 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 4.079 சதவீதமாக தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது.
நாட்டிற்கே வழி காட்டும் வகையில் பல முன்னோடி நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, செம்மையான நிர்வாகத்தை தொடர்ந்து நல்கி வரும் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை தொய்வடைய செய்து தண்டிப்பதை போல, தற்போதைய வரிப் பகிர்வு முறை அமைந்து உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
எனவே சமச்சீரான வளர்ச்சியையும், திறமையான நிர்வாகத்தையும், இந்த வரிப் பகிர்வு முறையில், நம் குறிக்கோளை கருதி இந்த நிதிக்குழு தனது பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம்.
நாட்டின் சமச்சீரான வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில் வளர்ச்சி குன்றிய பகுதிகளுக்கு தேவையான நிதியை வழங்குவது அவசியம் என்றாலும், அதே வகையில் பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை அளிப்பதின் மூலமாகவே, அவற்றின் வளர்ச்சியை தக்க வைப்பதுடன், அந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பாதைக்கும் வழிவகுக்க முடியும் என் பதையும் நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியைக் குறைத்து வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்கும் வரிப்பகிர்வும் குறைந்துவிடும் என்பதே உண்மை.
குறுகிய காலக் கண்ணோட்டத்தோடு செயற்கையாக உருவாக்கப்படும் நிதி மறுபகிர்வுமுறை எதிர்காலத்தில் எதிர்பார்த்த பலன்களை தராது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு சிறந்த நிர்வாக அமைப்புடன் திறம்பட செயலாற்றி வரும் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வகையில் நிதிப் பகிர்வு முறையை மாற்றுவதன் மூலம் இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்களிப்பு செய்திட முடியும்.
முந்தைய நிதிக் குழுக்களின் பரிந்துரைகளைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது, கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து அதிக நிதியை வழங்கிய போதும், பல மாநிலங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த 45 ஆண்டுகளாக நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் மறுபகிர்வு முறையின் மூலம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, 16-வது நிதிக் குழு இத்தகைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து நாட்டின் பின்தங்கிய மாநிலங்களுக்கு உரிய நிதி ஆதாரங்களை வழங்கிடும்போது, வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியைப் பாதிக்காத அளவில், தேவையான நிதியை வழங்குவதற்கான ஒரு புதிய அணுகுமுறையை வடிவமைப்பதற்கான தேவை இன்று உருவாகி இருப்பதாகவே நம்புகிறேன்.
இந்நிலையில், தமிழ்நாடு சந்தித்து வரும் மூன்று குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழ்நாடு பெரும் பேரழிவினை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு புயல்கள் மற்றும் இடைவிடாத மழைப் பொழிவு மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களின் உயிர், உடமை மற்றும் வாழ்வாதாரம் மட்டுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இயற்கைப் பேரிழிவுகளினால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்வதற்கு பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் இதன்காரணமாக மாநில மக்கள்தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்தரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம். 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முடிவடையும் பொழுது தமிழ்நாட்டின் சராசரி வயதானது
38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதான வர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.
தமிழ்நாடு இதுவரை பெற்று வந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு, தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது. அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்னால், முதியவர்கள்அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது. இந்த மிகமுக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நகர்ப்புர கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவதும் தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது. குறைவான நில வளம் மற்றும் நீர் வளம் ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள்தொகை மறுபுறம்-இவற்றுக்கு இடையே சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்திடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கிடவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் மானியங்களை வழங்கிட நிதிக்குழு பரிந்துரை செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களின் செலவினங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உயர்ந்து வரும் வேளையில் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்த பின்னர் மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் பல தடைகளை சந்தித்து வருகின்றன. இதனால் ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வை மாநிலங்கள் மிகவும் சார்ந்திருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில் 16-வது நிதிக்குழுவின் பங்கும், அதன் பரிந்துரைகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
தமிழ்நாட்டின் 8 கோடி மக்களும் இந்த நிதிக்குழுவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்திடும் நோக்கில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு அரியவாய்ப்பை காலம் நமக்கு வழங்கி இருக்கிறது. இதைக் கருத்திற்கொண்டு 16-வது நிதிக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழ்நாடு அரசின் சார்பாக நிதிக்குழுவின் பரிசீலனைக்கு வழங்கப்பட இருக்கும் விரிவான அறிக்கையினை கவனத்துடன் பரிசீலித்து, கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை 16-வது நிதிக்குழு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். சமச்சீரான வாய்ப்புகளை வழங்கும் முற்போக்கான அணுகுமுறையின் மூலமாகவே இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை அடைந்திட இயலும் என்பது எங்களுடைய திடமான நம்பிக்கை. ஒவ்வொரு மாநிலமும் அவற்றின் முழு திறனுக்கு ஏற்றவகையில் வளர்ச்சியை எட்டுவதன் மூலமாகவே இந்தியத் திருநாட்டை உலக அரங்கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலைநிறுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து தொழில்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இறுதியாக மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களை நிதி ஆணைய குழுவினர் சந்தித்து விரிவாக பேச உள்ளனர்.
இதைத் தொடர்ந்து நாளை காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலிக்கு சென்று கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை பார்வையிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று ஏற்றுமதி தொடர்புடைய யூனிட்டுகளை பார்வையிடுகின்றனர்.
அதன்பிறகு நாளை மதியம் சிறப்பு விமானம் மூலம் மதுரை செல்கின்றனர். அங்கிருந்து ராமேசுவரம் செல்லும் நிதி ஆணைய குழுவினர் இரவு ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.
20-ந் தேதி காலையில் தனுஷ்கோடி செல்லும் இக்குழுவினர் பின்னர் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் சென்று பார்வையிடுகின்றனர். அதன்பிறகு கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை பார்த்துவிட்டு சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்