search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈச்சம்பள்ளம் பகுதியில்   தொங்கும் சூரியமின்வேலியை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    ஈச்சம்பள்ளம் பகுதியில் கலெக்டர் சாந்தி மரக்கன்று நட்டபோது எடுத்தப்படம். 

    ஈச்சம்பள்ளம் பகுதியில் தொங்கும் சூரியமின்வேலியை ஆய்வு செய்த கலெக்டர்

    • தொங்கும் சூரிய மின்வேலியை கலெக்டர் சாந்தி பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.
    • ஈச்சம்பள்ளி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் வனம் நிறைந்த மாவட்டமாக உள்ளது. ஒகேனக்கல் பென்னாகரம் பாலக்கோடு உள்ளிட்ட வனப்பகுதிகள் யானைகள் அதிகமாக வசிக்கிறது. கோடைகாலங்களில் உணவு தண்ணீர் தேடி வானத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானை, காட்டு பன்றிகள், எலிகள் உள்ளே புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பாலக்கோடு வட்டம் பேவுஅள்ளி பஞ்சாயத்து ஈச்சம்பள்ளம் பகுதியில் யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தியதை அடுத்து பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஒதுக்கிய நிதியிலிருந்து உடனடியாக 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.16 லட்சம் மதிப்பில் தொங்கும் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டு பணிகள் முடிந்ததை அடுத்து பேவுஅள்ளிபஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் மற்றும் ஊர் கவுண்டர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முதல் சூரிய மின்வெளி செயல்பட தொடங்கியது.

    இந்த நிலையில் பேவுஅள்ளி பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி வந்தார். அப்போது அவர் ஈச்சம்பள்ளி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள தொங்கும் சூரிய மின்வேலியை கலெக்டர் சாந்தி பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பாலக்கோடு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருவதாக பலமுறை என்னிடம் ஈச்சம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மனு கொடுத்தனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த சோலார் ஹாக்கிங் மின்வேலி அமைக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதியளித்தோம். இந்த நிலையில் இந்த மின்வேலி ரூ.16 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்வேலி அருகே வனவிலங்குகள் ஏதும் வந்தால் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொட்டால் ஒருமுறை மட்டும் குறைந்த அளவிலான மின்சாரம் பாய்ந்து எச்சரிக்கை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு வராமல் தடுக்கப்படுகிறது. மேலும், இந்த மின்வேலியால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஈச்சம்பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட வனஅலுவலர் அப்பலோநாயுடு, பாலக்கோடு வனத்துறை அதிகாரி நடராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×