search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டம்   ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க.   ஆர்ப்பாட்டம்
    X

    சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
    • தஞ்சாவூரில் போலி மதுபானங்களால் பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் நடந்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசே காவல்துறையை கையில் எடுத்துக் கொண்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி உள்ளது. கள்ளச்சாராயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலர் இறந்துள்ளனர். தஞ்சாவூரில் போலி மதுபானங்களால் பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ., படுகொலை செய்யப்பட்டுள்ளார். கரூரில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திய போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். சி.பி.ஐ., ரெய்டு குறித்து போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியவில்லை என கூறுகிறார்.

    இதற்கெல்லாம் பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

    ஏற்கனவே மின்கட்டணம், சொத்து வரி, பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. தற்போது தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் இது போன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தற்போது ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×