search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது.
    • பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் சர்வதேச அமைப்பதை கைவிட்டு, வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இன்று காலை இறங்கினர். வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்ககூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • நாளை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
    • 23-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    10-ந் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14-ந் தேதி பாஞ்சாலி பிறப்பும், 17-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.

    21-ந் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. 22-ந்தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 24-ந் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏப்ரல் 25-ந் தேதி விடையாற்றியும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி:

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பண்ருட்டியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமிரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பண்ருட்டி-கடலூர் சாலை திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், போலீஸ்காரர்கள் ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.88 ஆயிரத்து 100 எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவதிகை கண்ணகி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

    • சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
    • மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா போட்டியிடுகிறார்.

    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடந்து வரும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    2, 3 தலைமுறைகளாகத்தான் நம் வீடுகளில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வருகிறார்கள். முன்பெல்லாம் அத்திபூத்தார்போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உருவாவார்கள். இப்போது அப்படியல்ல. இப்போது நிறைய பேர் பதவிக்கு வருகின்றனர்.

    இதெல்லாம் பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. 'இந்த வேலைக்கு இவர்களெல்லாம் வந்துடறாங்களே' என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா... அந்த ஃபேனை போடு'என கதறுவார்கள்.

    இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க, என்ன என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன்தான் - பாமக கூட்டணி அமைத்துள்ளது

    இந்தியா கூட்டணி, மக்களுக்கான கூட்டணி. இந்தியா கூட்டணிதான், சமூக நீதி கூட்டணி.

    வளர்ச்சி அடைந்த நாடு உருவாக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    மோடிக்கும், சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. பலரின் தியாகத்தால் கிடைத்தது தான் சமூக நீதி. இட ஒதுக்கீட்டை பறிக்க பா.ஜ.க பல வழிகளில் முயற்சித்து வருகிறது.

    மதச்சார்பின்மை பற்றி மோடி பேசுவதில்லை. பன்முகத்தன்மையை மாற்ற நினைக்கும் மோடி வேண்டாம். பா.ஜ.க-பா.ம.க சந்தர்ப்பவாத கூட்டணி.

    மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. மோடி மீண்டும் பிரதமரானால் மக்களை சிந்திக்கவிட மாட்டார்கள்.

    பா.ஜ.க.வின் திட்டங்கள் மிகவும் மோசமானது, ஆபத்தானது.

    இரண்டாம் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்தியா கூட்டணி என தெரிவித்தார்.

    • கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சூரியன்பேட்டை சேர்ந்தவர் கந்தன். (வயது 48). இவருக்கு ரமாவள்ளி (வயது 40 ) என்ற மனைவி இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை கந்தனுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இதனால் கந்தனின் மனைவி ரமாவள்ளி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடனடியாக ரமா வள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் இன்று அதிகாலை ரமாவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
    • இரவு பிரசாரத்தை முடிக்கும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.

    கடலூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி நேற்று கடலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் அருகே வி.சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, அங்கிருந்து கார் மூலம் கடலூர் வந்தடைந்தார். அவருக்கு மாவட்டசெயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் இரவு கடலூரில் தங்கி ஓய்வு எடுத்தார். 

    சிதம்பரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்ட மேடை.

    சிதம்பரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்ட மேடை.

    இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இரவு பிரசாரத்தை முடிக்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.

    அங்கு அவர் அக்கார்டு ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், சிதம்பரம் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார்.
    • விஷ்ணு பிரசாத் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பண்ருட்டி:

    கடலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் செல்ல காரில் வந்தார். அப்போது பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். வாகன சோதனயில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை குழு அதிகாரி தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் விஷ்ணு பிரசாத்தின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று பண்ருட்டிபகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
    • தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

    அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

    ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

    ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.

    இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

    தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.
    • கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான்.

    கடலூர்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர், பண்ருட்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.

    கடலூர் தொழிற்பேட்டை ரசாயனக் கழிவு பாதிப்பு குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த நான் போராட்டம் நடத்தினேன். தி.மு.க., அ.தி.மு.க. மாறிமாறி ஆட்சியில் இருந்தும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.

    தனது தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடும் தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பாருங்கள். முந்திரி விலை வீழ்ச்சிக்கு தற்போதைய தி.மு.க. எம்.பி. ரமேஷ்தான் காரணம்.

    என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிலத்தடி நீர் 800 அடிக்கும் கீழாக சென்று விட்டது. நிலக்கரி சுரங்கங்கள் கடலூர் மாவட்டத்தை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

    தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.

    கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான். ஆரணி பாராளுமன்ற உறுப்பினரான அவர் ஏன் இங்கு வந்து போட்டியிடுகிறார்? அவருக்கு இங்கு என்ன வேலை? அங்கு சீட் கொடுக்காததால் இங்கு வந்துள்ளார். அவர் போட்டியிடுவதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு பா.ம.க.வும், கூட்டணியும்தான் முக்கியம்.

    தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வாக இருந்த போது, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தங்கர்பச்சானை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர் மனதில் ஆழமான சமூக நீதிக் கருத்துகள் உள்ளன.

    நாம் துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் உயிர் கொடுத்துள்ளோம். பா.ம.க. ஆள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி. உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து பார்ப்பதற்காக இல்லை.

    இடஒதுக்கீடு, டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தோம். 2026-ல் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை அமைப்போம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆக போவதில்லை. உங்களின் எதிரி தி.மு.க.

    தி.மு.க.வை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.
    • தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் வட்டம் சாத்துக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (வயது22). பி.ஏ. பட்டதாரி. இவர் அதே ஊரை சேர்ந்த தனாதிபதி மகன் அரிதாஸ்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் காதலித்து வந்த நிலையில், அரிதாஸ் சரண்யாவிடம் ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த சரண்யா தம்மை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அரிதாசை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அரிதாஸ், பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தியுள்ளார்.

    திருமணத்திற்கு தொடர்ந்து சரண்யா வற்புறுத்தி வந்த நிலையில், 5 மாதம் கர்ப்பமடைந்திருந்த சரண்யாவை தொழுதூர் அடுத்த கழுதூரில் உள்ள மருந்து கடைக்கு அழைத்துச் சென்று சத்து மாத்திரை என பொய் கூறி கர்ப்பத்தை கலைப்பதற்கான மாத்திரையை அரிதாஸ்கொடுத்துள்ளார். இதனால் சரண்யாவின் கர்ப்பம் கலைந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அரிதாஸ் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்ததையடுத்து, அரிதாசுக்கும் சரண்யாவுக்கும் 11.07.2021 அன்று சாத்துக்குடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். வெளியூர் சென்ற கணவன் நீண்ட நாட்களாக திரும்பி வராதது குறித்து அரிதாசின் பெற்றோரிடம் சரண்யா கேட்டபோது மாமனார் தனாதிபதியும் மாமியார் தமிழரசியும் அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் சரண்யாவை வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளனர்.

    இதனையடுத்து கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து சரண்யா கூறுகையில்,

    தன்னை காதலித்து கர்ப்பமாகி விட்டு திருமணம் செய்து விட்டு தலைமறைவான அரிதாஸ் உடன் தன்னை சேர்த்து வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தனது கணவருடன் சேர்த்து வைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை எனவும் கூறினார். மேலும் தன்னை தாக்கிய மாமனார் தனாதிபதி மற்றும் மாமியார் தமிழரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    • விருத்தாசலம் பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த குப்பைகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் காப்புக்காடு உள்ளது. இதில் கார்மாங்குடி காப்புக்காட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.

    இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து இரவு 8 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விளைந்திருந்த மரங்கள் தீயில் சேதம் அடைந்தன. தீ விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போன்று, விருத்தாசலம் பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த குப்பைகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தபகுதியில் புகை மண்டலமாக மாறியதுடன், அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.

    • கடலூரில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் தனியார் பஸ் சுமார் 30 பயணிகளுடன் கிளம்பி விருத்தாச்சலம் வந்து கொண்டிருந்தது.
    • பஸ் கண்டக்டர் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் விருத்தாச்சலம் சாலையில் சபை பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    கடலூரில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் தனியார் பஸ் சுமார் 30 பயணிகளுடன் கிளம்பி விருத்தாச்சலம் வந்து கொண்டிருந்தது.

    காலை 7.10 மணி அளவில் வடலூர் சபை பஸ் நிலையம் அருகே பஸ் வந்தபோது எதிர் திசையில் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பகுதியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை வடலூர் நோக்கி ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பஸ் நேருக்கு நேர் மோதியதில் பஸ் மற்றும் லாரியின் முன்பக்கம் கண்ணாடிகள் உடைந்து முழுவதும் சேதமானது.

    இதில் பஸ் கண்டக்டர் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பஸ்சும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×