search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.
    • வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள அப்துல்ரசித் வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.

    இத்தகவலின் படி சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு தலைமையில் வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    அங்கிருந்த முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு உடனடியாக மாற்றினர்.
    • வன ஆர்வலர் செல்லா டெங்கு வார்டுக்கு வந்து கழிவறையில் இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் நோயாளி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அலறி அடித்து அங்கிருந்த ஊழியர்களிடம் பாம்பு இருப்பது குறித்து தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக கழிவறை கதவை மூடிவிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு உடனடியாக மாற்றினர். இதனை தொடர்ந்து வன ஆர்வலர் செல்லா டெங்கு வார்டுக்கு வந்து கழிவறையில் இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிக்கப்பட்ட பாம்பை பாதுகாப்பாக பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு திடீர் பரபரப்பு நிலவியது.

    • அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.

    ஹங்கேரி நாட்டுப் பெண் அதிபராக இருந்தவர் கடாலின் நோவக். இவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருக்கு மன்னிப்பு வழங்கினார்.

    அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அந்த நிர்வாகிக்கு அதிபர் கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கு நீதித்துறை மந்திரி ஜூடிட் லர்கா அனுமதி அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.

    இந்த நிலையில் கடாலின் நோவக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் கூறும்போது நான் ஒரு தவறு செய்துவிட்டேன். குழந்தைகள் இல்ல நிர்வாகி, துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று நம்பி மன்னிப்பு வழங்க முடிவு செய்தேன்.

    ஆனால் அதில் நான் தவறு செய்துவிட்டேன். இன்று நான் உங்களை அதிபராக சந்திப்பது கடைசி நாள் என்றார்.

    அதேபோல் நீதித்துறை மந்திரி வர்காவும் பதவி விலகினார்.

    • மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார்.
    • சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரம் போத்திரமங்கலத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கேட்டறிந்தார்.

    அப்போது கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக கொளஞ்சி என்ற மூதாட்டி அமைச்சரிடம் அழுத படி முறையிட்டார். அவரை அழைத்து கண்களை துடைத்து விட்டு, அழ வேண்டாமென கூறிய அமைச்சர், அதிகாரிகளை அழைத்து இந்த இடத்தை முறையான அளவீடு செய்து, பின்னர் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமாறு உத்தரவிட்டார்.

    மேலும் அதே பகுதியில் வைரம் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமானதை கண்ட அமைச்சர், உடனடியாக ரூ.50 ஆயிரம் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். பொதுமக்கள் கூறிய புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமரலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

    • குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இருந்து தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று காலை மாம்பட்டு கிராமத்துக்கு சென்றது. வேனை மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த கயலங்குமார் (வயது 35) என்பவர் ஒட்டி வந்தார்.

    மேல் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் என்ற சவுந்தர்ராஜன். முந்திரி வியாபாரி. இவர் வீட்டின் முன்பு வேன் நின்றது. முந்திரி வியாபாரியின் மனைவி வசந்தி யு.கே.ஜி. படிக்கும் தனது மூத்த மகன் ரவிக்குமாரை வேனில் பத்திரமாக ஏற்றினார். ரவிக்குமார் ஏறியவுடன் பள்ளி வேன் அங்கிருந்து புறப்பட்டது.

    அப்போது எதிர்பாராத விதமாக தாயாரோடு அங்கு நின்று கொண்டிருந்த 2-வது மகன் ஒன்றரை வயது குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான். இதில் படுகாயமடைந்த சிறுவன் ரக்க்ஷினை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தன் கண்முன்னே உடல் நசுங்கி பலியான குழந்தையை பார்த்து தாய் கதறி அழுத காட்சி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    • முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து தமிழகத்திற்கு வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
    • தேர்தல் தொடர்பாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவுகள் வெளியிடப்படும்.

    கடலூர்:

    கடலூர் நீதிமன்றத்தில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜரானார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு கூட்டணி கட்சி தலைமையுடன் சேர்ந்து வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம். கடலூர் நாடாளுமன்ற தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து தமிழகத்திற்கு வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் சட்டமன்றத்தில் எங்கள் கட்சியின் குரலாக எனது குரல் ஒலித்து வரும் நிலையில், பாராளுமன்றத்திலும் எங்கள் கட்சி குரல் ஒளிரட்டும் என்ற அடிப்படையில் வாய்ப்பு கேட்டுள்ளோம். அது கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தற்போது தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த குழுவில் கலந்து பேசுவோம். இந்தியா கூட்டணியில் இருந்து தற்போது நிதீஷ் குமார் வெளியேறி உள்ளார். ஆனால் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வரும் வரை அரசியலில் எது வேண்டுமானால் நடக்கலாம்.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பன்முகத் தன்மையாக உள்ள சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என தொடர்ந்து வலுவான கருத்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் சர்வாதிகாரம் நோக்கி பா.ஜ.க. இந்தியாவை அழைத்து செல்கிறது என குற்றச்சாட்டு உள்ளது. பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கையை சர்வாதிகாரம் மூலம் எடுத்து வருகிறது.

    பன்முக தன்மை கொண்ட இந்தியாவை ஒரு மதத்தின் அடையாளத்தின் கீழும், ஒற்றை மொழியான இந்தி ஆட்சியின் கீழும் வரவேண்டும் என பா.ஜ.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வருமானவரித்துறை அதிகாரிக்கு இந்தி தெரியாது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காரணத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு இந்தி தெரியாது என கூறியதால் வட மாநிலத்தினர்கள் விமர்சித்து உள்ளனர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் தமிழ் அலுவல் மொழி இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளது. வேறு எந்த கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. தேர்தல் தொடர்பாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் தற்போது வரை தி.மு.க.வின் தலைமையின் கீழ் வெற்றி கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளது.

    இவ்வாறு கூறினர்.

    அப்போது அமைப்புக்குழு கண்ணன், ஆனந்த், மாவட்ட செயலாளர் லெனின், கவுன்சிலர் அருள் பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    • டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர், உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார்.

    விருத்தாசலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலை உளுந்தூர்பேட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலக்கொல்லை வரை நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் அவர், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு பணியில் இருந்த ஒரு சில செவிலியர்களிடம் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன் டாக்டர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் எனவும் கேட்டார். அதற்கு 2 டாக்டர்கள் பணியில் உள்ளதாக செவிலியர் கூறினார்.

    தொடர்ந்து அவர், வட்டார மருத்துவ அதிகாரி யார், அவர் எத்தனை முறை இந்த மருத்துவமனைக்கு வருவார், மாவட்ட துணை சுகாதார இயக்குனர் யார், அவர் எத்தனை முறை வருவார் எனவும் செவிலியரிடம் கேட்டறிந்தார்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரைசெல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார். அதற்கு டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.

    அப்போது மா.சுப்பிரமணியன், டாக்டரிடம் மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க கடிதம் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன், காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் எனவும் கூறினார்.

    • சித்தி வளாகத்தில் (மேட்டுக்குப்பத்தில்) பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    வடலூர்:

    வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153-வது ஆண்டு தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனத்தையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி (பேழை) மற்றும் உருவப்படத்தை பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே மேளதாளம் முழங்க ஊர்வலம் தொடங்கியது.

    இதனை கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சமூகத்தினர் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் கொண்டு சென்ற போது வழியில் வடலூர், பார்வதிபுரம் கிராம மக்களும் இதைத்தொடர்ந்து செங்கால் ஓடையில் நைனார்குப்ப கிராமத்தை சேர்ந்தவர்களும், பூக்கள், பழங்களுடன் வரவேற்றனர்.

    இவர்கள் செல்லும் வழியில் கருங்குழி கிராமத்தினரும் பழங்களுடன் வரவேற்றனர். கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவிலிலும், பொதுமக்கள் சார்பில் வழிபாடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த ரெட்டியார் இல்லத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு பின்னர் வள்ளலார் வழிபாடு செய்த லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் வரவேற்பளிக்கப்பட்டது.

    மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்கம் படையாட்சி குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள் தாம்பாளதட்டில் பழம் பூக்களுடன் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

    பின்னர் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையினுள் கொண்டு செல்லப்பட்டது. அறைக்கும் முன்வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் தொடங்கியது,

    பகல் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதனை பல ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

    திரு அறை தரிசனத்தை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நெய்வேலி போலீஸ் சரகத்தின் சார்பில் டி.எஸ்.பி. சபிபுல்லா, மேற்பார்வையில் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கள், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சித்தி வளாகத்தில் (மேட்டுக்குப்பத்தில்) பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்.

    பண்ருட்டி:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 3-வது நாளான நேற்று பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ் நிலையம் அருகில் நடைபயணத்தை முடித்தார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தில் சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். மதத்தை மையப்படுத்தி அரசியல் நடக்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா ஆட்சி நேர்மையான முறையில் நடக்கிறது. ஆகவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடியை 3-வது முறையாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வரவில்லை. சேமிப்பு கிடங்கு அமைக்கவில்லை. குளிர்பதன கிடங்கு அமைக்கவில்லை. மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க இல்லை.

    இங்குள்ள எம்.பி. மீது கொலை வழக்கு உள்ளது. அவருக்கு எந்த தகுதியும் இல்லை. இங்குள்ள எம்.எல்.ஏ. தன்னை தி.மு.க. அமைச்சர்கள் மதிப்பதில்லை. கூட்டணி கட்சியை மதிக்கவில்லை என்கிறார். பிறகு எதற்கு தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். பண்ருட்டி தொகுதியில் உள்ள கோரிக்கையையே நிறைவேற்றவில்லை. பிறகு எப்படி 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்.

    மறைந்த விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தவர் பிரதமர் நரேந்திரமோடி. ஆனால் தி.மு.க.வினர் அவருக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர்.

    கடந்த 9 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை தமிழக வளர்ச்சிக்கு மத்தியஅரசு வழங்கி உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் பா.ஜனதா உங்கள் அன்பை பெற்று ஆட்சிக்கு வரும்போது, முதல் நாள் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    குடியரசு தினத்தையொட்டி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை படைவீட்டம்மன் கோவில் தெருவில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக அண்ணா மலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா கூட்டணி சீட்டு கட்டு போல், ஒவ்வொரு முறை குலுக்கிபோடும் போதும் ஜோக்கர் வெளியே வருவது போல, ஒவ்வொரு தலைவர்களாக வெளியேறி வருகிறார்கள். நிதிஷ்குமாரும் வெளியேறுகிறார். மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக மக்கள் மனநிலைக்கு எதிராக நடந்தால் இதுதான் நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது.
    • தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு 153-வது தைப்பூச விழா நடைபெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது.

    20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

    நேற்று (24-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது.

    ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும், பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது. இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    தைப்பூச திருவிழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.

    அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் "அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி" என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர். மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட அறநிலையத்துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, 1 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணி, 10 மணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கும் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.

    வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது. அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் வடலூரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன.

    • சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், நேற்று நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த காரில் இருந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர், தியாகதுருகத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி விஜயா (43) என்பதும், புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×