search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது.
    • நிகழ்ச்சியான ரோகிணி தீபம் ஏற்று விழா நாளை ( 27 -ந்தேதி நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது. மேலும் காலையில் சந்திர சேகர் சாமி வீதியுலா, மாலையில் பஞ்சமூர்த்தி வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய விழாவான கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வாமன புரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலையில் வாமனபுரீஸ்வரர் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் சாமிக்கு சிறப்பு தீபாரதனை காண்பித்து தேர்த்திருவிழா நடைபெற்றது.

    அப்போது திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து முக்கிய மாடவீதியில் உலா வந்து மீண்டும் தேர் நிலை அடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலை பஞ்சமூர்த்தி வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. கார்த்திகை மாதம் பிரம்ம உற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியான ரோகிணி தீபம் ஏற்று விழா நாளை ( 27 -ந்தேதி )நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற உள்ளது. பின்னர் நடராஜர் தேரடி பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கோவில் எதிர்புறத்தில் உள்ள மலை மீது சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று பக்தி முழக்கத்துடன் ரோகிணி தீபம் ஏற்றப்படும் . இதில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு ரோகிணி தீபத்தை சுற்றி வந்து வழிபடுவார்கள். 29 -ந் தேதி பிரம்ம உற்சவ விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
    • இரண்டாம் தளங்களுடனும், விடுதி கட்டிடம் 4 தளங்களு டனும் அமைய உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான புதிய மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் கட்ட ரூ.56.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான புதிய மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    இந்த கட்டிடத்தில் மாதிரி பள்ளிக் கட்டிடம் தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடனும், விடுதி கட்டிடம் 4 தளங்களு டனும் அமைய உள்ளது.விழாவில் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பிரமிளா, எம்.கே.எம். எஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ் பஷிருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
    • கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள சிதம்பரம் சாலையில் கார்கூடலூர் அணைக்கட்டு ரோடு உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஞானஜோதி - கோப்பெருந்தேவி தம்பதியர் கூரை வீடுகட்டி வசிக்கின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு 12 மணியளவில் ஞானஜோதி குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்த போது பலத்த சத்தத்துடன் பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டது. அலறியடித்து எழுந்து பார்த்தபோது இவரது வீட்டின் ஓரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் கவிழ்ந்து கிடந்தது. இதில் அவரது கூரை வீட்டின் ஒரு பகுதி சேதமானது. இதேபோல பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்தெழுந்து வெளியில் வந்தனர். கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்தவர்களை விரைவாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். அதன் மூலம் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி மக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலை யில் செல்லும் வாகனங்கள் திடீரென வழுக்கி கவிழ்கி றது. இதனால் தங்களின் வீடுகள் சேதமடைகிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துகளினால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. குறிப்பாக மழை நேரத்தில் இந்த சாலை மேலும், வழு வழுப்பாகி அடிக்கடி விபத்து நடக்கிறது.

    எனவே, இந்த சாலையை சொரசொரப்பாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தினர். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று போலீசாரிடம் கூறினார்கள். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் விடு முறையில் இருப்பார்கள். விருத்தாசலம் போலீசார் நாளை திங்களன்று அதி காரிகளிடம் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பர். எனவே, மறியலை கைவிடுங்கள் என்று பொதுமக்களிடம் கூறினார். இதையேற்ற அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேனில் வந்தவர்கள் யார்? இதனை ஓட்டிவந்த டிரைவர் யார்? விபத்து எவ்வாறு நடந்தது? விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்ன? என அனைத்தும் மர்மமாகவே உள்ளது. இது தொடர்பான தகவலை விருத்தாசலம் போலீசார் கூற மறுப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
    • வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீ முஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.

    விடியற்காலை 6 மணிவரை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 17 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு தனது முழுக் கொள்ளளவான 7.5 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால் பொதுப்பணித் துறை நீர்ப்பாசனப் பிரிவினர் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அணைக்கட்டில் 20 மதகுகள் உள்ளன. இதில் 4 மதகுகளை மட்டும் திறந்து விநாடிக்கு 600 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    மேலும், கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரியாகும். 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.

    தற்போது பெய்த மழையில் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்.எஸ். மதகு, பாழ் வாய்க்கால்கள் மூலம் தலா 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு குமார உடைப்பு வழியாகவும் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பல்வேறு வாய்க் கால்கள் வழியாக பரங்கிப் பேட்டைக்கு சென்று வங்கக் கடலில் கலக்கிறது.

    நீர் வரத்தை பொறுத்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து வெளி யேற்றப்படும் நீரின் அளவு கூடுதலாவதற்கு வாய்ப்பு உள்ளதாக செயற்பொறியாளர் அடைக்காப்பான் கூறினார். மேலும், வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார். 

    குடோனை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் தவ்லத் நகர், தண்டபாணி நகர், தவ்லத் நகர் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள குடோனுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை இறக்கி வைக்கும் போது தானியங்கள் சிதறி கீழே விழுகின்றன. மேலும், மழைக்காலங்களில் குடோனை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதால், ஏற்கனவே சிதறி கிடந்த பருப்பு, அரிசி அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் குடோனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று காலை மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திரண்டு சென்றனர். அங்கிருந்த அதிகாரிகளிடம், அழுகி கிடக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதால் உடனே குடோனை இடமாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அப்போது அங்கிருந்து அதிகாரிகள் மண்டல மேலாளர் இல்லாததால் திங்கட்கிழமை வந்து மண்டல மேலாளரை சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்படி கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், அதிகாரிகளை அழைத்துச் சென்று மழை நீர் தேங்கி நிற்பதையும், அதில் அழுகி கிடக்கும் அரிசி, பருப்புகளில் இருந்து அதிக அளவில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதையும் காண்பித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    முதுகலை ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றிட வேண்டும். 2004- 2006 இடைப்பட்ட கல்வி ஆண்டுகளில் தொகுப்பூ தியத்தில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை கணக்கில் கொண்டு தேர்வு நிலை மற்றும் ஊதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஜோதி முத்து, சட்ட செயலாளர் பாலமுருகன், மகளிர் அணி செயலாளர் உஷா, கல்வி மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மணிவாசகன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் துணைத் தலைவர் ராமலிங்கம், துணைத்தலைவர் செல்வகணபதி, இணை செயலாளர் வேல்முருகன், விருத்தாசலம் கல்வி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் கழகம் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

    போலீசார் அந்தோணி ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் தெய்வ சகாயம். இவரது மகன் அந்தோணி ராஜ் (வயது 23). மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று அந்தோணி ராஜ் வீட்டில் இருந்தவர் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அந்தோணி ராஜை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதே பகுதியில் தரை கிணறு உள்ளது.

    அங்கு சென்று பார்த்த போது தண்ணீரில் மூழ்கி அந்தோணி ராஜ் பிணமாக கிடந்தார். இத்தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தோணி ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுக்குப்பத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த குழந்தைகள் மையத்தில் 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் குழந்தைகள் மையம் இயங்கி வந்தது. அங்கு இருந்த பணியாளர் சத்து மாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அலறிய பணியாளர் "பாம்பு பாம்பு" என அலறிக்கொண்டு அங்கிருந்த குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து பணியாளர்கள் தங்கள் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் மேல் அதிகாரிகள் கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர். இதனை பார்த்த பிறகு தான் பணியாளர்கள் பெரும் மூச்சுவிட்டபடி அமைதி நிலைக்கு வந்தனர். தற்போது மழைக்காலங்கள் என்பதால் கட்டிடங்களுக்குள் பாம்புகள் வருவதால் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் பொதுமக்களும் பெற்றோர்களும் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத பழைய பிணவறையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், காலா வதியான மருத்து வமனை பொரு ட்கள். மருத்துவமனையில் தேவையற்ற பொருட்களை வைத்திருந்த அறை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.அரசு மருத்துவமனை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்யாத வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்ததாக மாவட்டம் முழுவதும் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் தூங்கா நகரம் என்று கூறும் அளவிற்கு 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். அதனால் வடலூர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி, அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய ராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார் பிறந்த பகுதி வடலூராகும். இங்கு அமைந்துள்ள ஞானசபை உலகளவில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த நகரின் மையப்பகுதியில் ராகவேந்திரா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு செல்வந்தர்களும், வசதி படைத்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும், வயதானவர்களும், பெண்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களது குடும்பத்தார் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணி செய்கின்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணா நகருக்கு 2 மர்நபர்கள் வந்தனர். ஆஜானு பாகுவான இளைஞர்களாகிய இருவரும் கால்சட்டை மட்டும் அணிந்திருந்தனர். தங்களின் செறுப்பினை இடிப்பில் கட்டியிருந்த கயிறில் தொங்கவிட்டிருந்தனர். மேலும், கண்களை தவிர வேறெதும் தெரியாத அளவிற்கு முகமூடி அணிந்திருந்தனர்.அண்ணாநகரில் இருந்த ஒரு வீட்டின் பின்புறம் சென்ற அவர்கள், பின்பக்க கதவினை உடைத்து உள்ளே நுழைந்தனர். அறையில் படித்திருந்த கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக் கயிறை பறித்தனர். இதனால் பதறிப்போய் எழுந்த கர்ப்பிணி, வாலிபர்களை எட்டி உதைத்து கூச்சலிட்டார்.மருமகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த மாமனார் வாலிபர்களை தாக்கினார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மர்மநபர்கள் தப்பிக்க முயன்றனர். மாமனாரும், மருமகளும் அவர்களை விரட்டியபோது, கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பக்கத்து தெருவிற்கு சென்ற மர்மநபர்கள், மற்றொரு வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டிற்குள் இருந்த மனநலம் குன்றிய பெண்ணின் காதில் இருந்த கம்மலை திருடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தாரிடம் இருந்து 2 வாலிபர்களும் தப்பி விட்டனர்.அண்ணாநகரை விட்டு வெளியேறி 2 வாலிபர்களும் அருகில் உள்ள ராகவேந்திரா நகருக்கு சென்றனர். நகரின் கடைசி வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். பின்பக்க கதவை உடைக்க முயற்சித்தனர். சுமார் ஒன்னரை மணி நேரம் போராடியும் கதவினை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து 2 வாலிபர்களும் வெளியேறினர். இது அந்த வீட்டிலிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியது.இந்த 3 குடும்பத்தாரும், நேற்று காலை வடலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரிடம் புகார் கொடுத்தனர். 3 பேரும் கூறிய அங்க அடையாளங்கள் ஒன்றாக இருந்தது. இதையடுத்து ராகவேந்திரா நகரில் இருந்த வீட்டில் பதிவாகிய சி.சி.டி.வி. கேமிரா பதிவினை மற்றவர்களுக்கு போலீசார் காட்டினர். அவர்களும் தங்களது வீட்டிற்கு வந்தவர்கள் இவர்கள் தான் என்று உறுதிபடுத்தினர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் வடலூர் நகரின் மையப்பகுதியில் மூகமூடி அணிந்த 2 வாலிபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக புகாரினை பெற்ற வடலூர் போலீசார், முகமூடி அணிந்த மர்மநபர்களை பிடித்த பிறகு வழக்கு பதிவு செய்கிறோம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டனர்.

    இந்த சம்பவம் வடலூர் நகரில் வசிப்பவர்களுக்கு மிகவும் வேகமாக பரவியது. இதனால் இரவு நேரங்களில் வடலூர் நகரில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடலூர் போலீசாரை பொறுத்தவரையில் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மட்டுமே பணி செய்கின்றனர். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, கடலூர் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் இதில் தலையிட வேண்டும். வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும். முகமூடி கொள்ளையர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும். வடலூர் மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடலூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
    • கஞ்சா போதையில் தாயை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் சேவாக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (45) கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது பெரிய மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் சேவாக் (வயது 21) போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்தார். தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் கடந்த 21-ந் தேதியன்று கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டிலிருந்த கஸ்தூரியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் சேவாக்கிற்கும் கஸ்தூரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தாய், மகன் இருவரையும் காணவில்லை. அவர்களது வீடும் பூட்டியிருந்தது. அவர்களது உறவினர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டிற்குள் கஸ்தூரியின் உறவினர்கள் சென்றனர். அங்கிருந்த பாயில் ரத்தக்கரை படிந்திருந்தது. அதற்கடியில் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இது குறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும், கஞ்சா போதையில் தாயை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் சேவாக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×