search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுவடை செய்த குறுவை நெல்லை காய வைக்க தினமும் போராட்டம்
    X

    சாலையில் நெல்லை கொட்டி காய வைக்கும் விவசாயிகள்.

    அறுவடை செய்த குறுவை நெல்லை காய வைக்க தினமும் போராட்டம்

    • மழையையும் கடும் வெயிலையும் தாக்குப்பிடித்து வளர்ந்து குறுவை பயிர் 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்து.
    • பகலில் ஓரளவு வெயில் அடித்து காய வைக்கப்பட்ட நெல் குவியல்கள் இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் மழை.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 1.81 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வப்போது பெய்த மழையையும் கடும் வெயிலையும் தாக்குப்பிடித்து வளர்ந்து வந்த குறுவை பயிர் 80 சதவீதம் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

    மனையில் நனைந்தன

    குறுவைப் பருவத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து கொள்முதல் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தொடங்கியது.

    முன்கூட்டியே கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டதால் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை எளிதாகவும், விரைவாகவும் நேரடி கொள் முதல் நிலையங்களில் விற்பனை செய்து விடலாம் என்று எண்ணினார்கள்.

    இதற்கு மாறாக குறுவை நெருப்பயிரில் ஈரப்பதம் அளவு 17.5 சதவீதம் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்ததால், விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிடைக்கும் இடத்தில் எல்லாம் காய வைத்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    காய வைக்க போராட்டம்

    ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி முன்கூட்டியே நடவு செய்த விவசாயிகள் ஓரளவு பாதிக்காத அளவிற்கு தங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து விட்டனர்.

    வாய்க்கால்களில்தண்ணீர் வந்து அந்த தண்ணீரைக் கொண்டு நாற்றுப் பாவி அதன் பின்னர் நடவு செய்த விவசாயிகள் தற்போது தீவிரமாக அறுவடை செய்து கொண்டுள்ளனர்.

    அறுவடை செய்யும் சமயங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழ் அடுக்கு சுழற்சியினால் தினந்தோறும் பெய்யும் மழையால் விளைந்த நெல்லை காய வைக்க முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் சுழன்று கொண்டுள்ளனர்.

    பண்டிகை கேள்விக்குறி

    பூதலூர் தாலுகா பகுதியில் அறுவடை செய்யப்பட்டுள்ள குறுவை நெற்மணிகள் பூதலூர் -செங்கிப்பட்டி சாலையிலும் பூதலூர்- தஞ்சை சாலையிலும் கொட்டி வைக்கப்பட்டு தினந்தோறும் காய வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பகலில் ஓரளவு வெயில் அடித்து காய வைக்கப்பட்ட நெல் குவியல்கள் இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் ஈரப்பதம் அதிகமாகி மீண்டும் காய வைக்கவேண்டிய சூழ்நிலையால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    குறுவை அறுவடை செய்து அந்த நெல்லை விற்றுதீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த விவசாயிகள் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 48 மணி நேரமே இருக்கும் நிலையில் 25 கிலோ மீட்டர் தொலைவுசாலை முழுவதும் நெல்லை காய வைக்கும் நிலை தொடர்ந்து கொண்டுள்ளது.

    ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினந்தோறும் 800 முதல் 1000 சிப்பங்கள் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கோரிக்கை

    இரவு நேரங்களில் கொள்முதல் செய்வது நிறுத்தப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    காலச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் வேலை செய்ய விரும்பும் இடங்களில் சுழற்சி முறையில் எடையாளர்களையும் சுமை தூக்குப வர்களையும்பணியில் அமர்த்தி இருக்கின்ற 48 மணி நேரத்தில் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்து, விவசாயிகளை தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×