search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழை காரணமாக சதுரகிரிக்கு செல்ல திடீர் தடை
    X

    தொடர் மழை காரணமாக சதுரகிரிக்கு செல்ல திடீர் தடை

    • கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கோடை மழை கொட்டி வருகிறது.
    • சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதத்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாளை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    மலைமேல் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசனம் செய்ய மேற்கண்ட நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகிறார்கள். அதன்படி வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று (20-ந் தேதி) முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கோடை மழை கொட்டி வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


    பாப்பநத்தன் ஓடை, வழுக்குபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது. நேற்று மாலையில் இருந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் 5 மணி நேரம் கனமழை பெய்ததால் ஓடைகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பை கருதி பவுர்ணமி தரிசனத்துக்கு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை சதுரகரி செல்ல கார், பஸ் மூலம் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவேரிப்பாக்கம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் 70 பேர் வரை அடிவாரமான தாணிப்பாறைக்கு வந்தனர். ஆனால் மழை காரணமாக அவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதையடுத்து அவர்கள் நுழைவுவாயிலில் சூடம் ஏற்றி வழிபட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

    Next Story
    ×