search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட தயங்கும் பக்தர்கள்
    X

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட தயங்கும் பக்தர்கள்

    • அக்னி தீர்த்தக்கடலில் மூழ்கி எழுந்தால் மற்றவர்கள் விட்டுச்சென்ற ஆடைகளுடன் எழும் நிலை உருவாகுகிறது.
    • பலர் கடலில் புனித நீராடுவதை தவிர்த்து தலையில் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்ட கையோடு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தென்னிந்தியாவின் காசி என்று போற்றப்படும் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படுவதால் நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தை விட வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலின் பெருமைகளை அறிந்து இங்குள்ள அக்னி தீர்த்தக்கடல் மற்றும் 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசித்து செல்கிறார்கள்.

    மேலும் அக்னி தீர்த்த கடற்கரையோரம் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு வழிபாடு நடத்துபவர்கள் விதிகளை மீறி தங்களுடைய ஆடைகளையும் கடலிலும், ஆங்காங்கேயும் விட்டு செல்வதால் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி சுகாதார சீர்கேடுகளுடன் முகம் சுழிக்க வைப்பதாக அமைகிறது.

    இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் சார்பில் அக்னி தீர்த்தக்கடலில் கழிவுநீரும் கலக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக பாவங்களை தொலைத்து புண்ணியங்களை தேட வரும் பக்தர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது. அக்னி தீர்த்தக்கடலில் மூழ்கி எழுந்தால் மற்றவர்கள் விட்டுச்சென்ற ஆடைகளுடன் எழும் நிலை உருவாகுகிறது. பல இடங்களில் பக்தர்கள் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்த தயங்குவதில்லை.

    தூய்மையற்று அதன் புனித தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறும் பக்தர்கள், மன வருத்தமும் அடைவதாக ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். இன்னும் பலர் கடலில் புனித நீராடுவதை தவிர்த்து தலையில் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்ட கையோடு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

    கோடிக்கனக்கான இந்துக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக்கடலின் புனித தன்மையை பாதுகாக்கவும், பக்தர்கள் சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகம் தயக்கமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×