search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.
    • சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஒகேனக்கல்:

    தை அமாவாசை நாளில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். வருடத்தின் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் முக்கிய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து தை அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதலைப் பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட வற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

    பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

    இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இன்றும் வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது.

    இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் அருவியிலும், காவிரி ஆற்றில் தேங்கிய உள்ள நீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

    • அதி.மு.க. ஆட்சியில் தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றோம்.
    • விவசாயிகளுக்கு மும்முணை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட கொங்கு இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்துறை பயிற்சி அளிக்கும் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம் அரூரில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய பண்பாலயத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது இருந்த எதிர்கட்சித் தலைவர்கள் என்னை ஏளனப்படுத்தி பேசினார்கள். 6 மாதங்கள் கூட அதி.மு.க. ஆட்சி நீடிக்காது என்றனர். ஆனால் எனது தலைமையில் நான்கு வருடம், 2 மாதங்கள் சிறந்த ஆட்சியை நடத்தினோம்.

    தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், தருமபுரி உள்பட 6 சட்டக் கல்லூரிகளை தொடங்கினோம். அதேபோல், நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதி.மு.க. தலைமையிலான ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்துள்ளது. இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதிகளை வழங்கினர்.


    ஆனால், தி.மு.க. 2 வருடங்கள், 8 மாத காலம் ஆட்சியில் இருந்தும் எந்த சிறந்த திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. நீட் விலக்குகோரி தி.மு.க.வினர் லட்சகணக்கானோரிடம் கையொப்பம் பெற்றனர். நீட் விலக்கு கோரி கையொப்பம் பெற்ற கையெழுத்து பிரதிகள் சேலத்தில் அண்மையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் சிதறி கிடந்தது தெரியவந்தது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதி.மு.க. ஆட்சியில் தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றோம். அதி.மு.க. ஆட்சியில் தடை இல்லா மின்சாரம் தந்தோம். விவசாயிகளுக்கு மும்முணை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை கீழ் வரும் 40 ஆயிரம் ஏரிகளில் குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு அதில் கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ள வகை செய்தோம்.

    தருமபுரி மாவட்டத்தில் அதி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் கே.ஈச்சம்பாடி அணைக் கட்டு நீரேற்றும் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.
    • விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பரிகம் காட்டுவளவு கிராமத்தில் தனியாக உள்ள புஷ்பாகரன் என்பவரின் விவசாயி வீட்டில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனை நடப்பதாக பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில், மருத்துவம் மற்றும் ஊராட்சிகளின் பணிகள் டி.எஸ்.பி. சரவணகுமார், ஏ.ஓ. கமலக்கண்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தருமபுரி சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில் திடீர் சோதனைக்கு சென்றனர். அப்போது மருத்துவக் குழு வருவதை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.

    இந்தநிலையில் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் வடிவேலுக்கு உதவிய தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கருவுற்ற பெண்களை காரில் அழைத்து வந்த டிரைவர் முருகன் ஆகிய இடைத்தரகர்கள் 2 பேரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், ஓசூர், பெங்களூர், பகுதிகளில் இருந்து வர வழைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்பட 15 பேரை மருத்துவக் குழுவினர் விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு, சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஏற்கனவே ஆணா, பெண்ணா என கண்டறிந்த சம்பவத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவருக்கு பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த 2 பேர் மூலம் கருவுற்ற பெண்களின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிய நினைக்கும் பெண்களை ஏற்கனவே கருவில் இருப்பது என்ன குழந்தை என்று கண்டறிந்து சென்ற கர்ப்பிணிப் பெண்களின் உதவியோடு கண்டறிந்தனர்.

    பின்னர் அவர்களை மாவட்டத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காத காட்டுப் பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக திருவிழா, கல்யாணம், காதுகுத்து, நடக்கும் பகுதிகளை பார்த்து அப்பகுதியில் ஒரு வீட்டை தேர்வு செய்து, விசேஷத்திற்கு வந்தது போல் கணவர்கள் சம்மதத்துடன் அவர்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் வைத்து கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என கண்டறிந்து உள்ளனர்.

    இதை கண்டறிய ஒரு நபரிடம் ரூ. 13 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுள்ளனர். ஒரு பெண்ணை அழைத்து வந்தால் இடைத்தரகரான வனிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக கொடுத்து உள்ளனர். இதே பாணியில் தான் நேற்று வனிதாவும் முருகனும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பரியம் காட்டுவளவு கிராமத்தில் உள்ள புஷ்பாகரன் வீட்டில் அரங்கேற்றி உள்ளனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், மேட்டூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து வரவழைத்த பெண்களை வீட்டில் தரையில் படுக்க வைத்து ஸ்கேன் மெஷின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என 12 பேருக்கு கண்டறிந்து உள்ளார்.

    மேலாண்மை குழு வருவதை அறிந்த வடிவேலு ஸ்கேனிங் மெஷினுடன் சொகுசு காரில் தப்பி சென்றுள்ளார். பின்னர் வனிதாவும் டிரைவர் முருகனும் ஒரே காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போது பாலின தேர்வை தடை செய்யும் குழுவினரிடம் சிக்கிக் கொண்டனர்.

    இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் உடன் சேர்ந்து இத்தொழிலை தொடர்ந்து செய்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து தொப்பூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சரக்கு வேனில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி:

    கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சரக்கு வாகனம், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் அடிக்கடி தமிழகத்திற்கு தருமபுரி வழியாக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக தருமபுரி மாவட்ட எல்லை பகுதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அவரது உத்தரவின்பேரில் தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், இளமதி ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று காலை 9 மணியளவில் கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையி்ல் புதிய ரவுண்டனா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது மைசூருவில் இருந்து வந்த சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே வேன் டிரைவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடகா மாநிலம் மைசூரு சி.வி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுல்லா செரிப் (50) என்பவர் மைசூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா பொருட்களை கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பானுசுஜதா, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 2 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வேனில் கடத்தி வந்த சம்பவம் போலீசாரால் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி ஆகியவை கண்டறியப்பட்டது.
    • 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட வனத்துறையின் சார்பாக வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ஆகியோர்களுடன் இனைந்து 27, 28 ந்தேதி ஆகிய நாட்கள் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

    அவ்வாறு நடந்து முடிந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பில் தருமபுரி வனக்கோட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் மற்றும் கோட்டப்பட்டி ஆகிய 8 வனச்சரகங்களில் 27 ஈர நிலங்களை அடையாளம் கண்டு, தேர்வு செய்து பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில் 109க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக பறவைகள் காணப்பட்டது. அதிலும், அழிந்து வருகின்ற இனமான சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி ஆகியவை கண்டறியப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கிளி, மயில், நாரை, கொக்கு, இரட்டை வால் குருவி, நீர் காகம், கழுகு, காகம், தூக்கனாங்குருவி, மீன்கொத்தி பறவை, நீர்கோழி, மைனா மற்றும் காட்டுக் காகம் ஆகியவை தோராயமாக 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது என மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.
    • பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.

    தருமபுரி:

    தமிழகத்திலேயே வேறு எங்கும் கண்டிராத வகையில் தருமபுரியில் பெண்கள் மட்டுமே தேரினை வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிர மணிய சாமி கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 21 ந்தேதியன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.

    இந்த தைப்பூசத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் தைசப்பூசத்தையொட்டி பெண் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சிவ சுப்பிரமணிய சாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    அதேபோல் ஆண் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் காவடி எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை கோலகலமாக நடைபெற்றது.

    விழாவில் சிவசுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானையுடன் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.

    தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.

    தேர் நிலை வந்தபோது பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு வீசி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். சிலர் சில்லறை காசுகளையும் தேரின் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவசுப்பிரமணிய சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் திருவிழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தருமபுரி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டியில் இருந்து இன்று காலை தனியார் பஸ்சில் அந்த கட்சியின் நிர்வாகிகள் 60-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.

    அப்போது பஸ் பொம்மிடி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ்சில் பயணித்த கட்சியின் மற்ற நிர்வாகிகள் திடீரென்று சம்பவ இடத்திலேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டி.எஸ்.பி மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் விபத்து அரங்கேறி உள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து நடக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் உயிர் தப்பினோம்.

    குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினர் அனைவரும் சத்தம் போட்டனர்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
    • பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி பத்திரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.

    அப்போது பொம்மிடி பகுதியில் தருமபுரி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் எதிரே வைக்கோல் பாரம் ஏற்றி லாரி வந்தது. அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பஸ்சில் பயணித்த கட்சியினர் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து பொம்மிடி போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது மாநாட்டுக்கு செல்லும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுப்போதையில் இருப்பது தெரியவந்தது. எதிரே வந்த லாரி டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    காயமடைந்தவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தனியார் பஸ் நிர்வாகத்தை கண்டித்து பஸ்சில் வந்த விடுதலை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் இன்று பொம்மிடியில் நடந்த விபத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    • சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

    இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று, மீட்பு பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

    • போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    • மாவட்டத்தில் உள்ள 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த 36 மாதங்கள் ஆகியும் நிறைவேறாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாளை வரை நடைபெறுகிறது.

    இந்த வேலை நிறுத்தத்தையொட்டி இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும், கடந்த 8 ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வெளியிடாத முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும், நெல்லை, சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு கடந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகுதி 5 சதவீத உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
    • வருகிற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

    தருமபுரி:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் நல்லானூரில் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-

    அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் இதர வேலைகள் இருப்பதால், கலந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு நாளில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லவுள்ளேன் என்றார்.

    திராவிட மாடல் ஆட்சி என்று சொல்பவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஏன் கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.


    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 94 லட்சம் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் உதவி செய்வதாக அறிவித்து உள்ளார்கள்.

    இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த புரிதல் இல்லை.

    வருகிற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது.
    • முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    தருமபுரி:

    தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் தருமபுரி அடுத்த முக்கல் நாயக்கன்பட்டியில் கயிறு இழுக்கும் போட்டி 2 கைகளிலும் செங்கல் தூக்கி நிற்கும் போட்டி, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் விளையாட்டுப் போட்டிகள், நடத்தப்பபட்டது.

    அதன் ஒருபகுதியாக, நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு 'சாப்பாட்டு ராமன் போட்டி' என்ற பெயரில் அதிக அளவில் சாப்பிட்டு சாதனை படைப்பவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில்,1 கிலோ சிக்கன் பிரியாணியை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் போட்டி நடந்தது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரையிலும், பெண்களுக்கான 25 பேர் பங்கேற்ற இப்போட்டியில் பிரியாணி குதுகலமாக சாப்பிடும் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஷாலினி (15) என்பவர் 1 கிலோ சிக்கன் பிரியாணி 4 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அதைத் தொடர்ந்து, 1 கிலோ சிக்கன் வருவலை குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.


    இதில் பச்சியப்பன் என்பவர் 1 கிலோ சில்லி சிக்கனை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். முனுசாமி என்பவர் 1 கிலோ சிக்கனை 7 நிமிடத்தில் சாப்பிட்டு 2-ம் பரிசு பெற்றார்.

    இறுதி நிகழ்வாக, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ் குடிக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதில் ராஜ்குமார் என்பவர் 2 நிமிடத்தில் 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடித்து முதல் பரிசை பெற்றார். இப்போட்டியால் முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    ×