search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தி.மு.க. கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியை விட்டு நீக்கம்: முதலமைச்சர் நடவடிக்கை
    X

    தி.மு.க. கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியை விட்டு நீக்கம்: முதலமைச்சர் நடவடிக்கை

    • குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக வழக்கு.
    • 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    சென்னை:

    மதுரவாயல், வி.ஜி.பி. அமுதா நகர் கூவம் கரையோரம் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 2019-ம் ஆண்டு முதல் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    அங்கு சென்னை மாநகராட்சி 144-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஏ.ஸ்டாலின், தனது ஆதரவாளர்களை வைத்து, இந்த இடத்தில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என நேரிலும், தொலைபேசியிலும் குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி மற்றும் உதவி பொறியாளர் கலைச் செல்வி ஆகியோர் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கோயம்பேடு போலீசார் தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் உள்பட 3 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவுன்சிலர் ஸ்டாலினை தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்குப்பகுதி, 144-வது வட்டச்செயலாளரான சென்னை மாநகராட்சி உறுப்பினர் ஏ.ஸ்டாலின் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.

    Next Story
    ×