search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருங்கைக்காய் விலை அதிரடி உயர்வு
    X

    முருங்கைக்காய் விலை அதிரடி உயர்வு

    • ஒரு முருங்கைக் காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரிரு நாட்களில் முருங்கைக்காய் விற்பனைக்கு வர உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 10 லாரிகளில் சுமார் 100டன் வரை விற்பனைக்கு வரும்.

    இந்த நிலையில் தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் முருங்கைக்காய் வரத்து 5-ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது. இன்று 2ஆயிரம் மூட்டைகளில் மட்டுமே முருங்கைக்காய் விற்பனைக்கு வந்து உள்ளது.

    அதிலும் பெரும்பாலான முருங்கைக்காய்கள் தரமற்ற நிலையில் உள்ளதால் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கிறது. வரத்து குறைவு மற்றும் தரமற்ற முருங்கைக்காய் வரவால் அதன் விலை அதிரடியாக எகிறியது.

    கடந்த 10நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரகத்தை பொறுத்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.250வரை விற்கப்படுகிறது.

    இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு முருங்கைக் காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சமையலுக்கு முருங்கைக்காயை பயன் படுத்துவதையே பெரும்பாலான இல்லத்தரசிகள் நிறுத்தி விட்டனர்.

    இதுகுறித்து முருங்கைக்காய் மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக முருங்கைக்காய் செடிகள் சேதமடைந்து வீணாகி போனது. இதனால் அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய்கள் பெரும்பாலும் கருத்த நிறத்தில் தான் உள்ளது.

    இதை வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் யாரும் ஆர்வம் காட்ட வில்லை. இதனால் பச்சை நிறத்தில் உள்ள தரமான முருங்கைக்காய்ககள் வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை திடீரென பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரிரு நாட்களில் முருங்கைக்காய் விற்பனைக்கு வர உள்ளது. இதன் பின்னர் விலைகுறையும் என்றார்.

    Next Story
    ×