search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார்.

    ஈரோடு:

    தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடையில் தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு பதிவு பெட்டியில் 3-வது இடத்தில் நமது உதயசூரியன் சின்னம் உள்ளது. ஆனால் ஜூன் 4-ந்தேதி நாம் முதலிடத்திற்கு வர வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும்.

    ஈரோடு பாராளுமன்ற முன்னாள் எம்.பி. கணேசன் மூர்த்தியை கடந்த தேர்தலில் 2.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்தீர்கள். இந்த முறை நமது வேட்பாளர் கே.இ. பிரகாஷை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 2021-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியை நாம் இழந்தோம். இருந்தாலும் நமது முதலமைச்சர் அந்த தொகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி கூறினார்.

    இங்கு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சோலாரில் உலகத்தரம் மிக்க விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இன்னும் எண்ணற்ற பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது. தற்போது எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளனர்.

    ஆனால் இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இதேபோல் பெட்ரோல் விலை ரூ.75-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். டீசல் விலையும் 65-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். கண்டிப்பாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    நமது முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். யார் காலையும் பிடிக்கவில்லை. தவழ்ந்து தவழ்ந்து வரவில்லை. அப்படி முதலமைச்சர் ஆனவர் யார் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு பாதம் வாங்கிய பழனிசாமி என்று பெயர் வைத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று தான் முதல்வரானார்.

    பா.ஜ.க.வுடன் 4 வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார்.

    கலைஞர் இருந்த போது நீட் தமிழகத்திற்கு வரவில்லை. பிறகு ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். இதன் விளைவு இதுவரை 7 ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலைமைகள் இருந்தது. இதற்கு முதல் பலி அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1200-க்கு 1170 மதிப்பெண் எடுத்தார். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒரு டாக்டர்.

    திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    நான்கு பேர் மட்டுமே பாரளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்கள். தி.மு.க. தலைவர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை ஆகியவை குறைத்தார். பி.எம். மூலம் கொரோனா காலத்தில் பிரதமர் 32 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இதுவரை கணக்கு காட்டவில்லை.

    சென்னை, தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது 2500 கோடி ரூபாய் மாநில அரசு நிதி வழங்கியது ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால் பிரதமரை 29 பைசா என்று சொல்லி தான் அழைக்க வேண்டும்

    ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யப்படும் மத்திய அரசு முறையாக சரிசமமாக மாநிலத்திற்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. கடந்த முறை தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல இந்த முறை 40/40வெற்றி பெற்று தமிழர்கள் மானமிக்க சுயமரியாதை உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார்.

    2019-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டு நான் சென்று பார்த்த போது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது இது வடிவேலு திரைப்பட பாணியில் கிணற்றை காணவில்லை என்பது போல உள்ளது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால் கோபம் வருகிறது விட்டால் என்னை அடித்து விடுவார் போல இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதை விட்டு மோடியிடம் பல்லை காட்டுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி அடிமை ஆட்சி நடத்திவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் பாஜக- அதிமுக கூட்டணி இல்லை என்று நாடகம் ஆடுகிறார்கள்.

    ஆளுநர் பாஜகவின் கைபாவையாக உள்ளார். தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் முக்கியம் என்று சொன்ன தலைவர் நம் தலைவர் ஸ்டாலின். அண்ணா வைத்த தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என சொன்னவர் ஆளுநர்.

    மத்திய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்து கொண்டு இவ்வளவு நல்லது செய்யும் நிலையில் தேவையான நிதியை வழங்கும் ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு எப்படியெல்லாம் நலத்திட்டங்களை செய்யலாம் என்று நினைத்து பாருங்கள்.

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அடிமை அ.தி.மு.க.வை விரட்டி அடித்தது போல இந்த முறை அ.தி.மு.க. எஜமானர்கள் பா.ஜ.க. விரட்டி அடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை.
    • விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையிலான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடிகள் உட்பட மொத்தம் 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் 191 வாக்குச்சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் பாதிக்கப்பட கூடிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 1476 வாக்குச்சாவடிகளும், ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1,112 வாக்குச்சாவடிகளும் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுவதுடன் நுன்பார்வையாளர்கள் மூலமாகவும் நேரடியாக கண்காணிக்கப்படும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லவும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்லவும், சிறப்பு நிர்வாக நடுவர் அதிகாரம் பெற்ற மண்டல மற்றும் காவல்துறை அலுவலர்களை கொண்ட 198 குழுக்கள் ஈரோடு மாவட்டம் முழுமைக்கும், 146 குழுக்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 131-ன் படி காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்திய 72 மணி நேரத்தில் (3 நாட்களுக்கு முன்னர்) பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினரின் சோதனை தீவரப்படுத்தப்படும்.


    அதேப்போல் 48 மணி நேரத்துக்குள் மேலும் சோதனை தீவிர படுத்தப்படும். ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது. கூட்டம் கூட கூடாது.

    மாவட்ட அளவில் இலவச தொலைபேசி எண், சி-விஜில் ஆப் மூலமாக 118 புகார்கள் பெறப்பட்டு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை. 100 மீட்டருக்குள் வாகனங்களை நிறுத்துதல், பிற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணி, கை குழந்தையுடன் வருவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்களித்திட அனுமதிக்கப்படுவார்கள்.

    மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரில் 3001 பேரில் தபால் வாக்கு செலுத்த படிவம் 12 டி வழங்கப்பட்டது. அதில் 2,800 பேருக்கும் அதிகமானோர் வாக்கு பதிவு செய்துள்ளனர். முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழற்குடை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் இப்படி அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள மையத்தில் வழி காட்டுவதற்கு ஒருவர் செயல்படுவார்.

    தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 970 அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தவிர ஒருங்கிணைப்பு பணியில் சுமார் 2500 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் பணியாற்றுகின்றனர். வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். வாக்குப்பதிவுக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும். அது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

    வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில் நடைபெறும். முகவர்கள் வர தாமதமானால் 15 நிமிடம் காத்திருந்து மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும்.

    அப்போதும் முகவர்கள் வரவில்லை எனில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரே மாதிரி வாக்குப்பதிவை நடத்துவார். 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்படும். முகவர்கள் இருந்தால் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கு என மாதிரி வாக்கு பதிவு செய்யலாம். மலைப்பகுதி வாக்கு சாவடியில் அங்கு பணியாற்றுபவர்களே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தொலைபேசி இன்டர்நெட் வசதி தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் கிடைக்காத வாக்கு சாவடிகளுக்கு வனத்துறையினர் மைக் மூலமாக தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மலைப்பகுதியில் மட்டும் 120 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கத்திரி மலை, மல்லியம்மன் துர்க்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்ல மண் சாலைகளை உள்ளன இருப்பினும் கூடுதல் வசதி அலுவலர்களுடன் அங்கு வாக்குப்பதிவு நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உடன் இருந்தார்.

    • பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 090 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 8 சட்டமன்றத் தொகுதியில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் மக்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தமிழகத்தில் ஒரு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.

    ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 31 பேர் களத்தில் உள்ளனர். 31 பேர் களத்தில் இருந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முக்கிய அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சினிமா நட்சத்திர பேச்சாளர்கள் என பலர் போட்டி போட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக 104 டிகிரி வரை பதிவாகி வருகிறது. கொளுத்தும் வெயில் காரணமாக தேர்தல் களம் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும் பிரசாரம் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தற்போது ஈரோடு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    முக்கிய கட்சி வேட்பாளர்கள் காலை 6 மணிக்கு தங்களது பிரசாரத்தை தொடங்கி விடுகின்றனர். ஒவ்வொரு நாளாக குறிப்பிட்ட பகுதியை சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காலை 12 மணி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அவர்கள் பின்னர் வெயிலின் தாக்கம் காரணமாக சற்று நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு வரை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டு தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வரும் 17-ந் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய உள்ளதால் தற்போது ஈரோட்டில் உச்சகட்ட அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதியில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் மக்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    • தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது.
    • அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார்‌.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் வந்து கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி ஆறுதல் கூறினர்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருப்பது புதிதாக (டெஸ்ட்) சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது.

    இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்த போது எட்டி பார்க்காத பிரதமர் எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

    நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருடம் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாய பணி பாதிக்கப்பட்டுள்ளது.
    • கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது.

    தாளவாடி சுற்று வட்டார கிராமம் திகனாரை, கெட்டவாடி, அருள்வாடி, தெட்டகாஜனூர், தலமலை, காளிதிம்பம், ஆசனூர், மாவள்ளம் குளியாட, கேர்மாளம் என 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். தாளவாடி பகுதி முழுவதும் ஆழ்குழாய் கிணறு மூலம் தான் விவசாயம் செய்து வருகின்றனர். ஆற்று நீர் பாசனம் எதுவும் கிடையாது.

    இந்த வருடம் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாய பணி பாதிக்கப்பட்டுள்ளது. குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் அனைத்தும் காய்ந்து கிடைக்கிறது. வாழை, கரும்பு, தக்காளி மற்றும் முட்டைகோஷ் பயிர் செய்த விவசாயிகள் நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் காய்ந்து வருகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்குழாய் கிணறு கை விட்டதால் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20 குடம் வரை தண்ணீர் வந்த நிலையில் தற்போது ஒரு வீட்டிற்கு 2 முதல் 3 குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதாகவும், ஒரு சில இடங்களில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு மாதத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டும் நிலை உள்ளது. மழை காலங்களில் ஓடைகளில் செல்லும் தண்ணீரை தடுத்து தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்தால் மட்டுமே நிலத்தடிநீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • முட்புதரில் பெட்டி, பெட்டியாக ஆங்கில மருத்து கொட்டப்பட்டுள்ளது.
    • தனியார் மருந்து விநியோக நிறுவனம் சார்பில் இப்படி கொட்டப்பட்டதா என தெரியவில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, சிப்காட் பொது சுத்திரிப்பு நிலையம் அருகே குட்டப் பாளையத்தில் இருந்து குமாரபாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் முட்புதரில் பெட்டி, பெட்டியாக ஆங்கில மருத்து கொட்டப்பட்டுள்ளது.

    இது ஒரே இடத்தில் இல்லாமல் விட்டு, விட்டு 4 இடங்களில் கொண்டப்பட்டுள்ளது. இதில் பாதி மருந்துகள் காலவதியானது. மீதி மருந்துகள் இன்னும் காலாவதி தேதி உள்ளது. இது அரசு மருத்துவனைக்கு வழங்கப்பட்டதா அல்லது ஈ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு அரசால் வழங்கப்பட்டதா அல்லது தனியார் மருந்து விநியோக நிறுவனம் சார்பில் இப்படி கொட்டப்பட்டதா என தெரியவில்லை.

    இதை இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். பள்ளி விடுமுறை தினமாக உள்ளதால் அப்பகுதி சிறுவர்கள் இந்த மருந்து பற்றி அறியாமல் எடுத்து விளையாடி வருகின்றனர்.

    இந்த மருந்துகள் எதற்காக இங்கு கொட்டப்பட்டது. இதை யார் கொண்டு வந்து கொட்டியது என அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் இந்த பகுதியில் சாய ஆலை கழிவு நீரால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி, இங்கு எதற்காக கொட்டப்பட்டது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    • பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வீரப்பன்சத்திரத்தில் இருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்த ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இன்று ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்ப ரூ.67 லட்சம் கொண்டு சென்றதாகவும், அதில் ரூ.64 லட்சம் ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவர் கொடுத்த ஆவணங்களின்படி ரூ.3 லட்சம் மட்டுமே மீதம் இருக்க வேண்டிய நிலையில் ரூ.10 லட்சம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழைய மார்க்கெட் அருகே ஜின்னா வீதியை சேர்ந்தவர் சிராஜூ தீன் (வயது 70). இவரது மனைவி லைலா பானு. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

    மூத்த மகள் மட்டும் தந்தை வீட்டு அருகே திருமணமாகி வசித்து வருகிறார். சிராஜூதீன் டெக்கரேஷன் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சிராஜூதீன் மற்றும் குடும்பத்தினர் விடுமுறையை கழிக்கும் வகையில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டனர்.

    இதையடுத்து நள்ளிரவு 12:30 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து அனைவரும் உள்ளே சென்றனர். அப்போது நடுவீட்டில் ஓடு பிரிந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோ இருக்கும் அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. சிராஜூதீன் சொந்தமாக நிலம் வாங்குவதற்காக ரூ.20 லட்சம் பணத்தை பீரோவில் வைத்திருந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. சோதனை சாவடி அருகே வந்த ஒற்றை யானை போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்குவது போன்று வந்தது.

    இதை கண்ட போலீசார், வனத்துறையினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதியில் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். வாகனங்களும் சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியை ஆசிரியர்களுக்கு கடந்த 7-ந் தேதி நடந்த 2-ம் கட்ட பயிற்சியின் போது தபால் வாக்குப்பதிவு நடந்தது. இதில் அவர்கள் தங்களது வாக்கினை தபால் மூலமாக ஓட்டு பெட்டியில் போட்டனர்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

    பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடும் 2,050 போலீசாருக்கு ஏற்கனவே தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தொகுதிக்கான வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதில் போலீசார்களுக்கான தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள போலீசார் தங்களது தபால் வாக்கினை செலுத்த உள்ளனர். தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தால் முறைப்படி அனைத்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்படும். இது தவிர பிற தொகுதிகளில் வாக்குரிமை உடைய போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தபால் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
    • தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.

    காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.

    இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.

    தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ×