search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 20) மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சரவண குமார் (18) ஆகிய இருவரும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மனோஜ் மற்றும் சரவண குமார் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் வேட சின்னனூர் என்ற இடத்தில் இருவரும் எல்.பி.பி கால்வாயில் இறங்கி குளிக்க சென்றனர்.

    அப்போது மனோஜ் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அதைப் பார்த்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.

    அதில் சரவணகுமார் என்பவரை காப்பாற்றி விட்டனர். மேலும் மனோஜ் என்பவர் நீரின் ஆழமான பகுதியில் மூழ்கி விட்டதால் மனோஜ் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தனி பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த மனோஜின் பிரேதத்தை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரபி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.94 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணை நீர்மட்டம் 48.20 அடியாக குறைந்து இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் 48 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே நீர்வரத்து இன்றி பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தற்போது பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தேர்தல் விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை 24 மணி நேரத்தில் 58 விதி மீறல் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு 39 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 19 புகார் என மொத்தம் ஒரே நாளில் 58 புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் 58 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.62 லட்சத்து 86 ஆயிரத்து 948-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதை அடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வரை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.66 லட்சத்து 45 ஆயிரத்து 797 கைப்பற்றி உள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ. 58 லட்சத்து 11 ஆயிரத்து 390-ம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670-ம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.21 லட்சத்து 41 ஆயிரத்து 280-ம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.18 லட்சத்து 78 ஆயிரத்து 800-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850-ம், கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.62 லட்சத்து 86 ஆயிரத்து 948-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கைப்பற்றப்பட்ட தொகை மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 97 ஆயிரத்து 385 ஆகும்.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ரூ.1 கோடியை 71 லட்சத்து 89 ஆயிரத்து 595 உரிமையாளர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.89 லட்சத்து 7 ஆயிரத்து 790-ஐ மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • சின்னியம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு என தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

    அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு. இது பரப்புரை கூட்டமா அல்லது மாநில மாநாடா என கேள்வி எழும் அளவுக்கு திரண்டு வந்திருக்கிறீர்கள்.

    நாடு காக்கும் ஜனநாயக போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன். இங்கு வரமுடியாவிட்டாலும் தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களில் இடம்பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி.

    தமிழ்நாட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதோ ஒரு திட்டத்தில் பயன் கிடைக்கும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறோம். மக்கள் பயன்பெறும் நல்லாட்சியை வழங்கிவருகிறோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிருக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மக்களுக்கான அரசாக தி.மு.க. ஆட்சி நடந்துவருகிறது. குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, பெண்களுக்கு பணமும் கொடுக்கிறீர்கள் என தாய்மார்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். புதிய தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்து செயல்படுத்துகிறோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அரசை குறைகூறுகின்றனர். அரசை குறை கூறுவதாக நினைத்து, திட்டங்களால் பயன் பெறும் மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள். தாங்கள் நிறைவேற்றியதை கூறாமல், அவதூறு குதிரையில் அ.தி.மு.க., பா.ஜ.க. பயணம் செய்கின்றனர். நல்ல விமர்சனம் வைத்தால் மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே அவதூறுகளைப் பரப்புகின்றனர்.

    தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களை எதிர்க்கின்றனர். தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்யும் கட்சி தி.மு.க. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க. என குறிப்பிட்டார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.
    • கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பி.ஆக இருந்த கணேசமூர்த்தி (77) கடந்த 24-ந்தேதி ஈரோடு பெரியார் நகர் வீட்டில் வைத்து சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ந்தேதி கணேசமூர்த்தி எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த குமாரவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் எரியூட்டப்பட்டது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்டத்து வீட்டிற்கு சென்றார். அங்கு கணேசமூர்த்தி எம்.பி. படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்த முதலமைச்சர் பின்னர் மீண்டும் தான் தங்கி இருக்கும் பயணியர் மாளிகைக்கு கிளம்பி சென்றார்.

    • உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.
    • திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம்.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பத் நகர் சாலை வழியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவர் சந்தைக்கு சென்றார்.

    அப்போது, உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.

    தொடர்ந்து, முதலமைச்சருடன் பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.
    • காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பவானிசாகர் அணையில் தினந்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

    இந்நிலையில் பவானிசாகர் அணை பகுதியில் தண்ணீரை தேடி வந்த 3 காட்டுயானைகள் பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.

    பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்த சின்டெக்ஸ் டேங்க் மற்றும் போர்வெல், தென்னை மரங்களை இழுத்து சேதப்படுத்தியது. அருகே குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக தேடி வரும் காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிகள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
    • வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட த்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது.

    இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தபால் வாக்கு படிவத்தில் போலீசார் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி, வாக்குச்சாவடி எண், தொகுதி வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கி வருகின்றனர்.

    இதனை அவர்கள் சார்ந்துள்ள மாவட்டத்தின் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தேர்தல் அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டு அவர்கள் தபால் வாக்கினை பதிவு செய்வார்கள்.

    போலீசார்கள் தபால் வாக்கினை செலுத்திட தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கினார்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பிரசாரம் தொடங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம் என தெரிவித்தார்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும்.
    • திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பங்குனி மாதம் என்பதால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நடக்கும் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட எந்த வகையான நிகழ்ச்சிகள் நடத்தினாலும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கோவில், சர்ச், மசூதிகளில் விழாக்கள் நடத்திட அனுமதி பெற அதன் நிர்வாகிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து அனுமதி பெற்று செல்கின்றனர்.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும். கோவில் நிர்வாகிகள் அனுமதிகேட்டு விண்ணப்பிக்கும்போது, அதன் உண்மை தன்மை ஆராய்ந்து உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்று கோவில் விழாக்கள் நடத்தும்போது, அவர்கள் எப்போது போல ஒலி பெருக்கிகள் வைத்து நிகழ்ச்சி நடத்தலாம்.

    ஆனால் அங்கு எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்தோ அல்லது வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல் திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இதுவரை சர்ச், ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதியில் சிறப்பு தொழுகை நடத்துவது, ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
    • 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் சினிமா கோட்டை வீதியில் ஒரு வீட்டில் அரசின் மதுபானங்களை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வீட்டில் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தானம் (48) என தெரிய வந்தது. சந்தானம் பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி அதை வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிகின்றது.

    இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தனத்தை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்த 100 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    ×