search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையில் செத்து மிதந்த மீன்கள்
    X

    அணையில் செத்து மிதந்த மீன்களை படத்தில் காணலாம்.

    கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையில் செத்து மிதந்த மீன்கள்

    • கருப்பாநதி அணை கடையநல்லூர் நகராட்சி, சொக்கம்பட்டி ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
    • ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 2 டன் மீன்கள் இறந்துவிட்டதாக குத்தகை எடுத்த முருகன் வேதனையுடன் தெரிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் கருப்பாநதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 72 அடியாகும்.

    இந்த அணை கடையநல்லூர் நகராட்சி, சொக்கம்பட்டி ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்த அணையில் இருந்து பெருங்கால்வாய், பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், இடைகால் கால்வாய், கிளாங்காடு கால்வாய், ஊர்மேலழகியான் கால்வாய் ஆகியவற்றின் மூலம் 72 குளங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு அதன் மூலம் சுமார் 9,514.7 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் மழை பொய்த்ததால் கருப்பாநதி அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக அணை வறண்டு விட்டது. இதன் காரணமாக கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே மீன்பாசி குத்தகைக்காக அணையில் வளர்க்கப்பட்ட மீன்கள் நீர் இல்லாத காரணத்தால் செத்து மிதந்தன. ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 2 டன் மீன்கள் இறந்துவிட்டதாக குத்தகை எடுத்த முருகன் வேதனையுடன் தெரிவித்தார்.

    தற்போது இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×