search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேட்டுப்பாளையம் அருகே வரலாற்று சின்னமாக மாறும் கல்லாறு தூரிப்பாலம்
    X

    மேட்டுப்பாளையம் அருகே வரலாற்று சின்னமாக மாறும் கல்லாறு தூரிப்பாலம்

    • 100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது.
    • இப்பாலத்திற்கு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வர்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனப்பகுதி வழியாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு பகுதியில் ஆறு சென்றது. இதையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1924-ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.

    அதன்பின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் நீலகிரி மாவட்டம் கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து கல்லாறு பகுதியில் தூரிப்பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது. அதன்பின் இப்பகுதியிலுள்ள தொங்கு பாலமான தூரிப்பாலம் பயன்பாடில்லாமல் இருந்தது.

    இருப்பினும் 100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது.

    இதையடுத்து இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.

    இதையடுத்து ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேலு தூரிப்பாலத்தை புனரமைத்து இதனை நினைவு சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஊராட்சி தலைவர் தங்கவேலு கூறியதாவது:-

    கல்லாறு பகுதியில் பழமை வாய்ந்த தூரிப்பாலமாக இது உள்ளது. இதனை பாதுகாப்பது ஊராட்சி சார்பில் எங்களுக்கும் கடமை உண்டு. இதனிடையே பாலத்தின் அருகில் ஊராட்சிக்கு சொந்தமாக அரை ஏக்கர் நிலம் உள்ளது. இதனை பராமரித்து இப்பகுதியில் பூங்கா அமைக்க அரசிடம் ஆலோசனை கேட்டு வருகிறோம். முதல் கட்டமாக இப்பாலத்திற்கு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வர்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அரசு அனுமதியுடன் இப்பாலத்தை நினைவு சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×