search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்- 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    X

    (கோப்பு படம்)

    சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்- 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    • விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பு.
    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகள் புறப்படும் இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரையில் போலீசார் உடன் சென்று பாதுகாப்பு அளிக்கின்றனர். விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்படும் வாகனத்துடன் போலீஸ் வாகனம் ஒன்றும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பாதைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதி, காசிமேடு, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை கடலோர பகுதி ஆகிய 4 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் 4 இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக 4 இடங்களிலும் ராட்சத கிரேன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சிலைகளை கரைக்கும்போது கடலில் யாராவது மூழ்கி விட்டால் அவரை காப்பாற்றுவதற்கு ஏதுவாக பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களும் தயாராக உள்ளனர்.

    Next Story
    ×