search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை, நீலகிரியில் கனமழை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்
    X

    கோவை, நீலகிரியில் கனமழை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

    • வால்பாறையில் பெய்த மழைக்கு அட்டகட்டி 16-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் பாறைகள் விழுந்தன.
    • வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவை:

    கோவையில் கோடைமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தினமும் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

    நேற்று மாலை கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்தமழை பெய்தது.

    மழையால் திருச்சி சாலை, அவினாசி சாலை, சத்தி சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலத்தின் கீழ்பகுதி, கிக்கானி பள்ளி அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதி உள்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. லங்கா கார்னரில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டது.

    கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வந்த பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.


    கொட்டி தீர்த்த கனமழைக்கு ஆர்.எஸ்.புரம் பால்கம்பெனி, போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் உள்பட பல்வேறு இடங்களிலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது. அவற்றை தீயணைப்புத்துறையினர் உடனடியாக அகற்றினர்.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான ஊஞ்சவேலம்பட்டி, புளியம்பட்டி, ஏரிப்பட்டி, சுந்தரகவுண்டனூர், தீப்பம்பட்டி, சிஞ்சுவாடி பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழைக்கு விவசய நிலங்களில் தண்ணீர் ஆறுபோல தேங்கியது.

    ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள ஸ்ரீ ஜெய்கணபதி நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

    வால்பாறையில் பெய்த மழைக்கு அட்டகட்டி 16-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் பாறைகள் விழுந்தன. இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், விரைந்து சென்று பாறைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கனமழை பெய்தது. மழை காரணமாக சாலையில் மழைநீர் வழிந்தோடியது. அங்குள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அத்துடன் கைதகொல்லியில் சாலையோரம் மண்சரிவும் ஏற்பட்டது.

    இதேபோல் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழைக்கு சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரம் உள்ள மரப்பாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    மலைரெயில் பாதையில் பாறை விழுந்ததால், ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×