search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை, நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: கடும் குளிரால் மக்கள் அவதி
    X

    கோவை, நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: கடும் குளிரால் மக்கள் அவதி

    • விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
    • குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவி வந்தது. இரவிலும் கடுமையான அனல் காற்றடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    கடந்த 2 நாட்களாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் மிதமான வெயிலும், மாலை நேரத்தில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வந்தது.

    நேற்று காலை முதலே கோவை மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவியது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்ய தொடங்கின.

    கோவை பாப்பநாயக்கன்பாளையம், ரெயில் நிலையம், அவினாசி சாலை, உப்பிலிபாளையம், காந்திபுரம், காந்திபார்க், சிங்காநல்லூர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்பட மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே மாலை முதல் இரவு வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இரவில் மாநகரில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டியதும். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன்பின்னர் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது.

    இந்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி, லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சூலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை மழை பெய்யாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது. மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    குன்னூர் மற்றும் கிராமப்புற பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, எல்லநள்ளி, சேலாஸ், குன்னக்கம்பை, தூதூர் மட்டம், கொலக்கம்பை, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    மழையால் மேகமூட்டம் அதிகரித்துள்ளதால் இன்று காலை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாக சென்றனர். கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில், ஜூன் மாதம் 37.2 மி.மீ மழையும், ஜூலையில் 43.8 மி.மீ மழையும், ஆகஸ்டில் 47.3 மி.மீ மழையும், செப்டம்பரில் 69.2 மி.மீ மழையும் சராசரியாக பெய்யும்.

    நடப்பாண்டில் ஜூனில் சரிவர மழை பெய்யவில்லை. ஜூலையில் அதிகளவில் மழை பதிவாகியது. அதன்படி ஜூனில் 2 மழை நாளில் 27 மி.மீ மழையும், ஜூலையில் 8 நாளில் 89.3 மி.மீ மழையும் பெய்தது.

    ஆகஸ்டில் 31 மி.மீ மழையும், செப்டம்பரில் 11.2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது 197.5 மி.மீ பெய்ய வேண்டும். ஆனால் நடப்பாண்டு 159.3 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரியை விட 19 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.

    Next Story
    ×