search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கனமழை எச்சரிக்கை எதிரொலி: நெல்லையில் பேரிடர் மீட்பு குழு உதவி கமிஷனர் ஆய்வு
    X

    கனமழை எச்சரிக்கை எதிரொலி: நெல்லையில் பேரிடர் மீட்பு குழு உதவி கமிஷனர் ஆய்வு

    • மற்ற 2 குழுக்கள் நெல்லை மாநகர் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற வீரர்களும் தயார்படுத்தப் பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, களக்காடு தலையணை உள்ளிட்ட பிரதான சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கும், நீர் நிலைகளில் பொது மக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்படையும் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த உதவி கமிஷனர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 90 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வர வழைக்கப்பட்டுள்ளனர்.

    அதிவிரைவாக செல்லும் பைபர் படகுகள், வெள்ள பாதிப்புகளில் சிக்கி உள்ளவர்களை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள், மரங்கள் அறுவை எந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மருந்து உபகரணங்கள் என அதிநவீன உபகரணங்களுடன் வந்துள்ள மீட்பு படையினர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

    மாவட்டத்தில் ஏதேனும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான இந்த குழு கண்காணித்து வருகிறது.

    இந்த குழுவின் செயல் பாடுகளை இன்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் உதவி கமிஷனர் முத்து கிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு ஒரு குழுவை சேர்ந்த அதிகாரிகள் அனைத்து வகை உபகரணங்களுடன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரத்திற்கும், மற்ற 2 குழுக்கள் நெல்லை மாநகர் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநகர் பகுதியில் உள்ள குழுவினர் பாதிப்பு குறித்த தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கட்டுப்பாட்டு மைய உதவி எண்களும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தவிர்த்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற வீரர்களும் தயார்படுத்தப் பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் வெள்ள பாதிப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×