search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கனமழை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X

    கோவையில் கனமழை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
    • 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது.

    6 மணிக்கு தொடங்கிய மழையானது இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த இந்த மழையால் கோவையில் உள்ள முக்கிய சாலைகளான திருச்சி சாலை, சத்தி சாலை, அவினாசி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போன்று கொட்டியது. அதில் வாகன ஓட்டிகள் நனைந்தவாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.

    பணிமுடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்ததால் ஏராளமானோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு செல்ல முடியாமல் தவித்தனர். மழையில் இருந்து தப்பிக்க பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    குறிப்பாக அவினாசி சாலையில் சென்றவர்கள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு அடியில் மழைக்கு ஒதுங்கினர். எல்.ஐ.சி சந்திப்பு பகுதியில் ஏராளமானார் தங்களது மோட்டார் சைக்கிளுடன் ஒதுங்கியதாலும், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.

    இதுதவிர லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம், சிவானந்தா காலனி ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றினர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இந்த பகுதிகளில் போக்குவரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் பாலத்தின் கீழ் வழியாக செல்வதை காண முடிந்தது.

    புறநகர் பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    பாலமலை பகுதியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக மலையில் இருந்து உற்பத்தியாகி பெரிய நாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், கோட்டைப்பிரிவு வழியாக செல்லும் ஏழு எருமைப் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மத்தப்பாளையத்தில் இருந்து ஒன்னிப்பாளையம் வழியாக செல்லும் இந்த சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    மழையால் இந்த பாலத்தில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் தண்ணீர் செல்வது தெரியவில்லை. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களில் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டன.

    இதனால் அதிர்ச்சியான காரில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர். 2 கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இன்று காலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள்.

    தொண்டாமுத்தூர் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழைக்கு புதுப்பாளையம் என்ற இடத்தில் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கி தீ பிடித்து எரிந்தது.

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வாகனங்களில் சாலையில் ஊர்ந்தபடியே சென்றன. பல இடங்களில் வெள்ளநீருடன் சாக்கடை நீரும் கலந்தது. மழையால் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. போக்குவரத்து மட்டும் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.

    மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கோவையில் பெய்த கனமழையால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு விமான நிலையம் பகுதியில் 8 செ.மீ மழையும், கோவை தெற்கு தாலுகாவில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

    விமான நிலையம்-87.60, வால்பாறை பி.ஏ.பி-74, சோலையார்-72, வால்பாறை தாலுகா-71, கோவை தெற்கு-70, பெரியநாயக்கன் பாளையம்-58, வேளாண் பல்கலைக்கழகம்-47, மேட்டுப்பாளையம-31, மாக்கினாம்பட்டி-39.

    Next Story
    ×