என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை, நீலகிரியில் கனமழை: 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன
- மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கோவை:
கோவையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்றுமுன்தினம் மாலையில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று மாலையும் கோவை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
கோவை மாநகரில் வடவள்ளி, மருதமலை, தடாகம், கவுண்டம்பாளையம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. மற்ற இடங்களில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் கொட்டி தீர்த்தது.
மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனியில் இருந்து, சிவானந்தா காலனி வழியாக காந்திபுரம் வரும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது.
பலத்த மழை காரணமாக அந்த சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வது தடைபட்டது.
இதற்கிடையே கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 24 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பஸ் பாலத்தில் சிக்கியது. பஸ்சுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், பயணிகள் வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.
தீயணைப்பு துறையினர் வந்து, பயணிகளை மீட்டனர். பஸ்சை கிரேன் மூலம் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
இந்த மழைக்கு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாரதி பார்க் ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லாததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று முறிந்து சாலையில் நின்றிருந்த 2 கார்கள் மீது விழுந்தது.
தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி கார்களை மீட்டனர்.
காந்திபுரம் பகுதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
கனமழைக்கு தடாகம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள செங்கல் சூளையில் வைக்கப்பட்டிருந்த புகைபோக்கி இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் ஆனைகட்டி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகளும் சேதம் அடைந்தன. பல்வேறு துறை ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் கிடந்த செங்கல்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலையில் கனமழை பெய்தது. மழையால் விஜயபுரம், புளியம்பட்டி பகுதிகளில் சாலையோரம் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியாறு போலீஸ் நிலையம் அருகே மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளம், குட்டைகள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பல குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர் அருகே உள்ள சின்ன வண்டிச்சோலை- பேரட்டி சாலையில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம் அடைந்தது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி, நல்லப்பன் தெருவில் பால்ராஜ் என்பவர் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது.
பெள்ளட்டி மட்டம், கேத்தி பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் ஊட்டியில் காலநிலையும் மாறி விட்டது. இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. வாகன ஓட்டிகளுக்கு சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்