search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழை: கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு
    X

    கனமழை: கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

    • பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
    • வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை முதல் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது விட்டு மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் மாலையில் பணி முடிந்து திரும்பியவர்கள் மழையில் நனைந்த படியே சென்றனர்.

    இரவில் பலத்த மழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் சிரமம் அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    சில நிமிடங்கள் பலத்த மழை பெய்த நிலையில் தொடர்ந்து சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது. இன்று காலை முதலே கோவை மாநகரில் உள்ள பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக இதமான காலநிலை காணப்படுகிறது.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், சூலூர், காரமடை, கருமத்தம்பட்டி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குளங்கள், குட்டைகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியார் அருகே உள்ளது கவியருவி.

    இந்த அருவிக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலும் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது பெய்து வரும் மழை காரணமாக கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பில்லூர் அணை-20, சின்கோனா-18, சின்னக்கல்லார், சிறுவாணி அணை-17, வால்பாறை தாலுகா-16, சோலையார்-13, பெரியநாயக்கன் பாளையம்-11, கோவை தெற்கு-11.80 வால்பாறை, மதுக்கரை-9.

    Next Story
    ×