search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட காண்டிராக்டரை காரில் கடத்தி பணம் பறிப்பு- பெண் உள்பட 3 பேர் கைது
    X

    கட்டிட காண்டிராக்டரை காரில் கடத்தி பணம் பறிப்பு- பெண் உள்பட 3 பேர் கைது

    • மணிகண்டன் கோவை புதூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.
    • விசாரணையில் வனிதா என்ற பெண் 4 பேருடன் சேர்ந்து மணிகண்டனை காரில் கடத்தியது தெரியவந்தது.

    குனியமுத்தூர்:

    கோவை சுந்தரபுரம் அருகே மாச்சம் பாளையம் அனீஸ் கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று மணிகண்டன் கோவை புதூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.

    அவரது மனைவி மகேஸ்வரி வீட்டில் தனியாக இருக்கும்போது, பெண் உள்பட 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் மகேஸ்வரியிடம் அவரது கணவரை பற்றி விசாரித்து மிரட்டல் விடுத்தனர். உடனே மகேஸ்வரி திருமணத்துக்கு சென்று இருந்த தனது கணவர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார்.

    மணிகண்டன் வந்ததும், அந்த பெண் செல்போனில் பேசி விட்டு, 2 பேரின் செல்போனை பறித்து சுவிட்ச் ஆப் செய்தனர்.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து மணிகண்டனை கட்டாயப்படுத்தி ஒரு காரில் ஏற்றினர். அவரை காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அழைந்து சென்று ஒரு விடுதியில் அடைத்து வைத்தனர்.

    அங்கு அவரை அடித்து உதைத்து மிரட்டி பணம் கேட்டனர். உடனே மணிகண்டன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சத்தை பரிமாற்றம் செய்தார்.

    மேலும் பத்திரத்தில் ரூ.15 லட்சத்திற்கு கையெழுத்து வாங்கிக் கொண்டனர். பின்னர் மணிகண்டனை விடுவித்து சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வனிதா என்ற பெண் 4 பேருடன் சேர்ந்து மணிகண்டனை காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மணிகண்டனை கடத்தி பணம் பறித்த மதுக்கரையை சேர்ந்த வனிதா, சீர்காழியை சேர்ந்த முருகன், முருகனின் உறவினர் ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    முருகன் கிணத்துக்கடவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாவது:-

    மணிகண்டன், முருகனின் உறவினர்களுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி அவர்களும் பல லட்சம் பணத்தை மணிகண்டனிடம் கொடுத்தனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. கேட்டால் இழுத்தடித்து வந்தார். இதனால் நாங்கள் அவரை காரில் கடத்தி பணத்தை பறித்தோம் என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×