search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பகுதிகளில் செடியிலேயே கருகும் கருவேப்பிலை
    X

    மேட்டுப்பாளையம் பகுதிகளில் செடியிலேயே கருகும் கருவேப்பிலை

    • செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.
    • கருவேப்பிலைக்கு குறைந்த பட்ச விலையாக கிலோவுக்கு ரூ.20 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேட்டுப்பாளையம் தாலுகா உள்ளது.

    இதில் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம், தேக்கம்பட்டி, சிறுமுகை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி பகுதிகளில் கத்திரி, வெண்டை, புடலங்காய், சுரக்காய், முள்ளங்கி, தங்காளி, வெண் பூசணி உள்ளிட்ட பல்வேறு நாட்டு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.

    இதுபோக பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர், கிட்டாம்பாளையம், மங்களக்கரைபுதூர், ஜடையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வாழை மற்றும் நாட்டுகாய்களுக்கு இணையாக கருவேப்பிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் கருவேப்பிலை திருச்சி, கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, சென்னை, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    இப்பகுதியில் விளையும் செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும் ஒரு சில விவசாயிகள் கருவேப்பிலையை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே தற்போது கருவேப்பிலைக்கு 1 கிலோவிற்கு ரூ.4 மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் வெட்டு கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே உரிய விலை கிடைக்காததால் பெள்ளோபாளையம், பட்டக்காரனூர், பெள்ளாதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கருவேப்பிலைக்கு களைக்கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர். இதனால் கருவேப்பிலைகள் செடியிலேயே கருகி உதிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

    இதுகுறித்து கிட்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பாலமுருகன் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் தாலுகாவில் நாட்டு காய்கள், வாழைக்கு அடுத்த படியாக கருவேப்பிலையும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் இப்பகுதியில் விளையும் கருவேப்பிலைக்கு நல்ல மணம் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது.

    இதனிடையே கருவேப்பிலை நடவு செய்து 1 வருடத்தில் அறுவடைக்கு தயாராகும். அதன்பின் 4 மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 1 ஏக்கருக்கு சுமார் 4 முதல் 6 டன் வரை கருவேப்பிலை கிராப் தரும்.

    இதன்படி 1 கிலோவிற்கு குறைந்த பட்சம் ரூ.20 விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் இதில் குறைந்த பட்ச லாபம் பார்க்க முடியும். ஆனால் தற்போது கிலோவிற்கு ரூ.4 மட்டுமே விலை கிடைத்து வருகிறது.

    இதனால் செயவதறியாமல் விவசாயிகள் சிலர் இதனை காட்டுக்கு உரமாக போட்டு வருகின்றனர். ஒரு சிலர் களைக்கொல்லி மருந்து அடித்து வருகின்றனர்.

    இதனிடையே அரசு கருவேப்பிலைக்கு குறைந்த பட்ச விலையாக கிலோவுக்கு ரூ.20 நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறினர்.

    Next Story
    ×