search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
    X

    ரெயில நிலையத்தில் சோதனை நடத்திய போலீசார்

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

    • சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் முயற்சிகள் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    திண்டுக்கல்:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் முயற்சிகள் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுமுதல் வருகிற திங்கட்கிழமை வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னை, கோவை உள்பட பல்வேறு நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

    இதனால் நேற்று இரவு முதலே அனைத்து ரெயில்நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதேபோல் அரசு மற்றும் ஆம்னி பஸ்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து பயணிகளிடமும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. இதேபோல் ரெயில் நிலையத்திற்கு வந்த பார்சல்களும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் பஸ்நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் , வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பழனி மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கலெக்டர் விசாகன் கொடியேற்றி தியாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார். இதற்காக இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×