search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் பிறந்தநாள்: விருதுநகரில் காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
    X

    காமராஜர் பிறந்தநாள்: விருதுநகரில் காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

    • காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • கைத்தறி சங்கம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது.

    விருதுநகர்:

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.

    அதோடு, காமராஜரின் நூற்றாண்டு மணிமண்டபமும் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மணிமண்டபம் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இன்று காலை காமராஜர் வாழ்ந்த இல்லத்தில் அவரது திருவுருப்படத்திற்கு கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள காமராஜரின் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மேலும், சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடார் மகாஜன சங்க நிர் வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விருதுநகரில் உள்ள காமராஜரின் இல்லத்தில், கைத்தறி சங்கம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது. இதில் ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் பெண்கள் நூல் நூற்று வேள்வி நடத்தினர்.

    மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காம ராஜரின் இல்லத்திற்கு வருகை தந்த நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோட்டு புத்தகங்களைக் கொண்டு வந்து காணிக்கையாக அளித்து காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.

    காமராஜர் பிறந்த பிறந்த ஊரில் அரசு மற்றும் பல் வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருவதால் விருதுநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×