search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
    X

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

    • வரதராஜ பெருமாளை குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.
    • மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்று திகழ்கிறது. அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான வைகாசி விழா கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-வது நாளில் நடைபெற்ற கருடசேவை உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றுகாலை கோலாகலமாக நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிக்கு தாடை கொண்டை அணிந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.

    ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை அங்கு குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.

    பின்னர் மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கியது. பக்தர்களுக் குதேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

    Next Story
    ×