search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறையில் 97-வது வாவுபலி பொருட்காட்சி
    X

    குழித்துறையில் 97-வது வாவுபலி பொருட்காட்சி

    • நாளை தொடங்கி 20 நாட்கள் நடக்கிறது
    • 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயார்

    கன்னியாகுமரி:

    குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வாவுபலி பொருட்காட்சி இந்த ஆண்டு நாளை (13-ம் தேதி) தொடங்குகிறது. 97-வது வாவுபலி பொருட்காட்சியின் துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு வி.எல்.சி மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்கிறார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி திட்ட உரையாற்றுகிறார். கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார்.

    தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பொருட்காட்சியை திறந்து வைக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் முன்னிலை வகிக்கிறார்.

    நிகழ்ச்சியில் பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பி னர்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி, பிரின்ஸ், எம். ஆர் காந்தி, தளவாய் சுந்தரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை 20 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் விவசாய கண்காட்சி, ராட்சத ராட்டினங்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பல தரப்பட்ட ராகன் ராட்டினங்கள், மரணக்கிணறு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், மாய க்கண்ணாடி, நாகக்கன்னி, மருத்துவத்துறை, விவசாயத்துறை உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் சம்பந்தமான அரங்குகள் ஆகியவை இடம் பெறுகிறது.

    வாவுபலி பொருட்காட்சியை முன்னிட்டு விவசாய பொருள்களான மா, பலா, தென்னங்கன்றுகள், கனி வகை கன்றுகள் மற்றும் காய்கறி செடிகள், பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகள் உட்பட ஏராளமான செடி, கொடி வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. வாவுபலி பொருட்காட்சி நடத்துவதற்கு ஏதுவாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×