search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரிசிக்கொம்பன் யானை நடமாட்டம் தீவிர கண்காணிப்பு
    X

    அரிசிக்கொம்பன் யானை நடமாட்டம் தீவிர கண்காணிப்பு

    • சின்னக்கானல் முதல் முண்டந்துறை வரை 38 நாட்கள் பரபரப்பை ஏற்படுத்தியது
    • குமரி வனத்துறையினர் ½ மணி நேரத்திற்கு ஒருமுறை ஆய்வு

    நாகர்கோவில் :

    கேரளாவில் அரிக்கொம்பன்... தமிழகத்தில் அரிசிக்கொம்பன்.. இது தான் கடந்த சில நாட்களாக இரு மாநில மக்கள் அச்சத்துடன் உச்சரித்த பெயர்கள். ஆரம்பத்தில் ரேஷன் கடைகளை குறிவைத்து தாக்கி அரிசியை சாப்பிட்ட யானை முதலில் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் நாளடைவில் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட பெரும் பேசு பொருளாக மாறியது அரிக்கொம்பன் யானை.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த யானை, மக்களுக்கு தொல்லை கொடுத்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையி னரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் யானை விடப்பட்டது.

    ஆனால் அரிசி ருசி கண்ட அரிக்கொம்பன் யானை அடர்ந்த வனப்பகுதி வழியாக தமிழகத்தின் வண்ணாத்திப்பாறை வழியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மலைப்பகு திக்கு வந்தது. கடந்த மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் குமுளி பகுதியில் யானை மக்கள் நிறைந்த பகுதிக்கு வர பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கம்பம் நகருக்கு ள்ளும் அரிசிக்கொம்பன் யானை வலம் வர பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து ஒரு வார கால போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசிக்கொம்பன் யானையை பிடித்தனர். பின்னர் கும்கி யானைகள் உதவியுடன், வனத்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனமான பிரத்யேக லாரியில் அரிசிக்கொம்பன் ஏற்றப்பட்டது. அந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட முடிவு செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பயணம் தொடங்கியது.

    உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று (ஜூன் 5-ந்தேதி) மணிமுத்தாறு வன சோதனை சாவடியை கடந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல்கோதையாறு பகுதிக்கு லாரி சென்றது. அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானையை வனத்துறையினர் இறக்கி விட்டனர்.

    யானை இறக்கிவிடப்பட்ட வனப்பகுதி கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி என கூறப்படுகிறது. இதன் காரணமாக குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏனென்றால், குமரி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை, அங்கிருந்து கீழ் இறங்கி வந்தால், பேச்சிப்பாறை உள்ளிட்ட குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் காணியின மக்கள் உள்ளிட்ட பலர் வசிக்கின்றனர்.

    எனவே அரிசிக்கொம்பன் யானை இங்கு வந்தால், இவர்களுக்கு ஆபத்து என தகவல் பரவ அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் குமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், யானையின் நடமாட்டம் பற்றி கண்காணிக்க அதன் கழுத்தில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனை வைத்து ½ மணி நேரத்திற்கு ஒருமுறை யானை எங்குள்ளது?அது எந்த பகுதியை நோக்கி செல்கிறது? என்பதை அறியமுடியும். இருப்பினும் அதுபற்றி தெரிந்து கொள்ளும் ஆப், குமரி மாவட்ட வனத்துறையிடம் இல்லை. அதனை அரசிடம் கேட்டுள்ளோம்.

    அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ள அரிசிக்கொம்பன், வனப் பகுதியில் தான் சுற்றி வரும். அப்படியே அது இடம் பெயர்ந்தாலும் முத்துக்குழிவயல், நெய்யாற்றின்கரை வழியாக கேரளா செல்லவே வாய்ப்புள்ளது. இருப்பினும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

    அரிசிக்கொம்பன் யானை சின்னக்கானல் முதல் மேல்கோதையாறு வரை 38 நாட்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பயணம் செய்துள்ளது. இதன் காரணமாக யானையின் உடல் நலத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது என யானையை கண்காணித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ள னர். யானை முதலில் வசித்த சின்னக்கானல் மிகவும் குளிரான சூழல் நிறைந்தது. அதன்பிறகு விடப்பட்ட பெரியார் புலிகள் காப்பக பகுதியிலும் இதே சூழ்நிலைதான். ஆனால் கம்பம், தேனி பகுதியில் பகலில் வெப்பமாகவும், இரவில் குளிர்ச்சியாகவும் இருந்தது. தற்போது யானை விடப்பட்ட முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் அதே சூழல் தான் உள்ளது. இருப்பினும் இன்னும் சில நாட்களுக்கு அரிசி க்கொ ம்பன் யானையின் உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    அரிசிக்கொம்பன் யானை விடப்பட்ட காடுகள், நிறைந்த செங்குத்தான மலைத்தொடர்களுக்கு எதிர்புறம் உள்ளது. அங்கு அடிமரம் இல்லை. இதனால் யானையை கவனிப்பது எளிதாக இருக்கும். மழை நிழலான பகுதி என்பதால் பகலில் வறட்சியான காலநிலைக்கு ஏற்ப யானைகள் பழகுவது முக்கியம் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×