search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
    X

    சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை

    • 18-ந்தேதி வரை சூறாவளி காற்று வீசக் கூடும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை எதிரொலி
    • மீன்பிடி தடை காலம் முடிவடைந்த முதல் நாள் அன்றே தடை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வரு கிறது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

    இதற்கிடையில் வருகிற 18-ந்தேதி வரை 3 நாட்கள் கடலில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன் பேரில் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் இன்று முதல் 3 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என்று சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா விசைப்படகுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராக நின்ற விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையில் மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நேற்று முதலே சின்னமுட்டம் துறை முகத்தில் வந்து குவிந்திருந்த மீன்வியாபாரிகள் ஏமாற் றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் மீன்பிடி தடைகாலம் முடிந்து 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்த விசைப்படகு மீனவர்களும் சூறாவளி காற்றினால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து முதல் நாள் அன்றே சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் தடைக்காலம் முடிந்த முதல் நாள் அன்றே களைஇழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×