search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மேலும் ஒரு டாக்டர்- 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா
    X

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மேலும் ஒரு டாக்டர்- 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா

    • வீட்டை விட்டு வெளியே வரும்போது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் கலெக்டர் வேண்டுகோள்
    • 403 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 60 பேருக்கு கொரோனா உறுதி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளான முஞ்சிறை, மேல்புறம் ஒன்றியங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நாகர்கோவிலில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே இரண்டு மருத்துவ மாணவர்கள் மற்றும் இரண்டு டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு டாக்டருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

    மேலும் மருத்துவ மாணவர்கள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் நாகர்கோவில் மாநகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று 403 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் முன்சிறை ஒன்றியத்தில் 20 பேரும், அகஸ்தீஸ்வரத்தில் 3 பேரும், கிள்ளியூரில் 5 பேரும், குருந்தன்கோட்டில் 7 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 2 பேரும், திருவட்டார், தக்கலை ஒன்றியங்களில் தலா நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 60 பேரில் 26 பேர் ஆண்கள், 34 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் நான்கு குழந்தைகளும் அடங்கும். கடந்த 25 நாட்களில் மற்றும் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் கொரோனா வேக மாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட எல்லையான களியக்காவிளையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகர பகுதியிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மேயர் மகேஷ் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது அங்கு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பள்ளிகளிலும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்புடன் மாணவர்கள் யாராவது வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களுக்கு செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    எனவே வீட்டை விட்டு வெளியே வரும்போது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×