search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகநூலில் பழக்கம் ஏற்படுத்தி பெங்களூரு மூதாட்டியின் படத்தை மார்பிங் செய்து பணம் பறித்த குமரி என்ஜினீயர்
    X

    முகநூலில் பழக்கம் ஏற்படுத்தி பெங்களூரு மூதாட்டியின் படத்தை மார்பிங் செய்து பணம் பறித்த குமரி என்ஜினீயர்

    • தொடர்ந்து மிரட்டிய புகாரில் போலீசார் கைது செய்தனர்
    • மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில் :

    முகநூலில் பெண்கள் படத்தை பதிவிட்டால், சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். எனவே படத்தை பதிவிடாதீர்கள் என பலமுறை போலீசார் எச்சரித்தாலும் அதனை கேட்காத சிலர் முகநூலில் படத்தை வெளியிட்டு வம்பில் சிக்குவது தொடர் கதையாகவே உள்ளது.

    மேலும் அவர்கள் பணத்தையும் இழந்து வருவது தான் வேதனையான விஷயம். இளம்பெண்கள் மட்டுமல்லாமல் 60 வயதான மூதாட்டி ஒருவரும் இந்தப் பிரச்சினையில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். அவரிடம் குமரி மாவட்ட வாலிபர் பணத்தை பறித்த நிலையில், தற்போது போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 30), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவருக்கு முகநூல் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே உள்ள கொடிப்பாடி புத்தூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பழக்கமானார். நாளடைவில் அருள் பேச்சை நம்பி, தனது போட்டோக்களை அந்த மூதாட்டி பகிர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் மூதாட்டியிடம் போனில் பேசிய அருள், உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போகி றேன் என்று கூறி உள்ளார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அப்படி செய்ய வேண்டாம் என்று அருளிடம் கூறி உள்ளார்,

    இதனை அருள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி மூதாட்டியிடம் இருந்து பணம் பறித்துள்ளார். கூகுள் பே மூலம் ரூ.12 ஆயிரம் பெற்ற அவர், கூடுதலாக ரூ.50 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். பணம் தராவிட்டால், மார்பிங் படத்தை உங்கள் கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரூ புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்மைக்கு களங்கம் விளைவித்தது, பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து கர்நாடக போலீசார் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அவர்கள், இரணியல் போலீசார் உதவியுடன் நெய்யூர் சென்று என்ஜினீயர் அருளை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக பெங்களூரூ அழைத்துச் சென்றனர்.

    Next Story
    ×