search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பேச்சு திறமை உள்ளது - ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சு
    X

    குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பேச்சு திறமை உள்ளது - ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சு

    • மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களின் கைகளில் உள்ளது
    • கொரோனா தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் தயாரித்தார்கள். நாடு வளர்ந்து வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியின் 130-வது ஆண்டு விழா இன்று தொடங்கியது. கல்லூரி செயலாளர் பைஜூ நிசித்பால் தலைமை தாங்கினார்.

    முதல்வர் எர்வர்ட் அறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ஐரின் ஷீலா வரவேற்று பேசினார். தெலுங்கானா, பாண்டிச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலின் அடையாளமாக ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி விளங்கி வருகிறது. நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போது மாணவர்கள் அளித்த வரவேற்பை பார்க்கும்போது மாணவர்கள் எவ்வளவு எழுச்சியுடன் உள்ளார்கள் என்பதை காட்டுகிறது. இளம் வயது ஆளுநராக என்னை தேர்வு செய்தார்கள்.

    தெலுங்கானாவில் பதவியேற்ற போது இவர் எப்படி அந்த மாநிலத்தை சமாளிக்க போகிறார் என்று கூறினார்கள். புதிதாக உருவான மாநிலத்தை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு தெரியும்.குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பேச்சு திறமை உள்ளவர்கள்.

    நான் ஒரு மகப்பேறு டாக்டர். பிறந்த குழந்தையை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதே போல தெலுங்கானா மாநிலத்தை சிறப்பாக கையாண்டு வருகிறேன்.

    இதைத் தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராக எனக்கு பதவி வழங்கினார்கள். மகப்பேரின் போது இரட்டை குழந்தை பிறந்தால் எப்படி கையாள வேண்டுமோ அதே போல் தான் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை இரண்டு குழந்தைகளை வளர்ப்பது போல் வளர்த்து வருகிறேன்.

    ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு கல்வி அளித்த இந்த ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியை பாராட்டுகிறேன். இந்த கல்லூரி இந்தியாவில் 56-வது இடத்தை பிடித்திருப்பது பாராட்டுதலுக்குரியதாகும். ஆசிரியர்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் மாணவர்கள் சாதிக்க முடியாது.

    மாணவர்களை மாணிக்கங்களாக உருவாக்குவதும் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. மாணவர்கள் நாட்டின் தூண்களாக உள்ளார்கள். மாணவர்கள் தனது மொழியை கற்றுக் கொள்வதுடன் இன்னொரு மொழியும் கற்றுக்கொள்ள வேண்டும். கடின உழைப்பே வெற்றிக்கு காரணமாகும். உழைப்பதற்கு குறுக்கு வழி கிடையாது. உழைத்தால் மட்டுமே சாதிக்க முடியும். மாணவர்களை சமாளித்து சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியரின் கையில் தான் உள்ளது.

    ஆசிரியர்களுக்கு நன்றி சொல்வது மட்டு மின்றி பெற்றோரின் தியாகங்க ளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் படித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும். மாணவர்கள் தான் நாட்டின் சொத்து. கொரோனா தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் தயாரித்தார்கள். நாடு வளர்ந்து வருகிறது. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி தான் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியை தொலைத்து விடக்கூடாது. சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் மாணவர்கள் அனைவரும் படித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு தமிழிசை சவுந்திரராஜன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் என்றாலே சவாலை சந்தித்தாக வேண்டும். அரசியல் தலைவராக இருந்தால் அதிக சவால்களை சந்திக்க வேண்டும். என்னைப் பற்றி என்னென்ன கருத்துக்களை கூறினார்கள். நான் எம்.பி.பி.எஸ். டாக்டர் படித்தவர். கவிதை எழுதுவேன். நிர்வாக திறமை என்னிடம் உள்ளது. அதை எல்லாம் கூறாமல் நான் கருப்பாக இருக்கிறேன். குட்டையாக இருக்கிறேன் என்றெல்லாம் கூறினார்கள். அதை மனதில் கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு இருந்ததன் காரணமாகத்தான் சாதிக்க முடிகிறது. இந்தியா பல துறைகளில் முன்னேறி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை உடன் ஒப்பிடும் போது இந்தியா பல்வேறு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜி 20 மாநாட்டை நாம் நடத்துவது நமது இந்தியாவிற்கு பெருமை ஆகும். மாணவர்கள் தங்களது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் பெஞ்ச் மாணவர்களிடம் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு ஆசிரியர்கள் கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கவர்னர் தமிழிசை சௌந்தர்ரா ஜனுக்குகல்லாரி செயலாளர் பைஜூ நசித்பால் நினைவு பரிசு வழங்கினார்.

    முடிவில் ஆசிரியர் அலுவலக சங்க செயலாளர் ஹெனிராஜா நன்றி கூறினார். விழாவில் கலந்து கொள்ள வந்த கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜனை கலெக்டர் ஸ்ரீதர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் ஆகியோரும் வரவேற்றனர்

    Next Story
    ×