search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு அருவி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சம்
    X

    திற்பரப்பு அருவி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சம்

    • போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    • புறக்காவல் நிலையத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்

    கன்னியாகுமரி:

    தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி ஆரோக்கியபுரம், புதியம்புத்தூர், கூட்டாம்புளி ஆகிய இடங்களைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உள்பட ஒரு குடும்பத்தினர் நேற்று காலையில் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு வந்து விட்டு பிற்பகலில் திற்பரப்பு அருவிக்கு வந்தனர்.

    இவர்கள் திற்பரப்பு அருவியில் கார்கள் நிறுத்தும் இடத்தின் கடைசி எல்லைப் பகுதியில் தங்கள் காரை நிறுத்தியுள்ளனர். அவர்கள் குளித்து விட்டு காரில் வந்து பார்த்த போது காரில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.2000 த்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த திருமணி மனைவி பிரேமா (வயது 40) குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திற்பரப்பு அருவி குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள நிலையில், இங்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இங்கு நிலவும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக திருட்டு சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    கடந்த வாரம் இங்கு வந்த ஒரு சுற்றுலா குழுவினரிடமிருந்து 1 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப் போனது. அதே போன்று சில நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினரின் காரிலிருந்து 4 செல்போன்கள் திருட்டுப் போயின. தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் திற்பரப்பு அருவிப் பகுதிகளில் சக்தி வாய்ந்த கண்காணிப்புப் கேமராக்கள் வைப்பதுடன், கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை தீவிரப் படுத்த வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலிசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் சுற்றுலா பயணிகள் நிறுத்தி இருந்த வாகனத்தின் அருகில் இருந்த கார்களின் நம்பர்களையும் வைத்து அந்த டிரைவர்களிடமும் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் இந்த புறக்காவல் நிலையம் மூடி இருப்பதால் அந்த பகுதியில் உள்ள திருடர்களுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது. வெகு விரவில் திருடர்களை பிடிப்போம் என்று குலசேகரம் போலிசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×