search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு மாலை தாண்டும் திருவிழா
    X

    மாடு மாலை தாண்டும் திருவிழா

    • 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாடுகளுக்கு கன்னிப்பெண்கள் எலுமிச்சை பழத்தை பரிசாக கொடுத்தனர்

    கரூர்

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தொட்டியபட்டியில் கோணாத்தாதா நாயக்கர் மந்தையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் சலைத்எருது மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடைசியாக 2005-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 17 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இதையடுத்து இந்தாண்டு மாலை தாண்டும் திருவிழா நேற்று நடைபெற்றது.இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 14 மந்தைகளை சேர்ந்த சுமார் 300 மாடுகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு, வரவேற்பு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இதையடுத்து மாடுகள் அனைத்தும் ஊர்வலமாக 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு கோவிலுக்கு எதிரே எல்லைக்கோட்டியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.பின்னர் சமூக வழக்கப்படி எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அனைத்து மாடுகள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு மாலை தாண்டும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டன.இதில் சுமார் 150 மாடுகள் எல்லை கோட்டில் இருந்து கோணாத்தாதா நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்டிருந்த எல்லை கோட்டை நோக்கி சுமார் 3 கிலோ மீட்டர் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது கூடிநின்ற அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதில், திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடங்கிப்பட்டியை சேர்ந்த ராஜகோடங்கி நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற மாடுக்கு சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சல் பொடியை அந்த மாட்டின் மீது தூவி எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டன.பின்னர் மஞ்சல் பொடி தூவிய 3 கன்னி பெண்களும் எல்லை கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன், கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நாயக்கர் இனமக்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×