search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை- பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
    X

    கோத்தகிரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை- பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது

    • மழையால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    • இரவு நேரத்தில் தடுப்புச்சுவர் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பருவமழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது.

    அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.

    சில மணி நேரங்கள் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அதனை தொடர்ந்து விடிய, விடிய விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் குன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் கடும் குளிரும் நிலவியது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொடர் மழைக்கு குன்னூர் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் இன்று அதிகாலை 5 மணியளவில் குன்னூர்-மஞ்சூர் சாலையிலும் மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொடநாடு, கீழ்கோத்தகிரி, கட்டபெட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    இந்த மழைக்கு, கோத்தகிரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் தடுப்புச்சுவர் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர்.

    இந்த சாலை வழியாக தான் மாணவர் நல விடுதி, வனத்துறை அலுவலக குடியிருப்பு, அரசு ஊழியர் மற்றும் காவலர் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும். பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த சாலையில், தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதிக்கு செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து அதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், பள்ளி வளாகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ரூ.70 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. கடந்த மே மாதம் 19-ந் தேதி பெய்த மழைக்கு இந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. பின்னர் மீண்டும் இடிந்து விழுந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, வர்ணம் பூச்சு பணி நடந்து வந்தது.

    இந்தநிலையில் தான் 2-வது முறையாக ஏற்கனவே இடிந்த பகுதியின் அருகே மீண்டும் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

    Next Story
    ×