search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி முருகன் கோயிலில் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும்-  அமைச்சர் சேகர்பாபு தகவல்
    X

     அமைச்சர் சேகர்பாபு      பழநி தண்டாயுதபாணி கோயில்

    பழனி முருகன் கோயிலில் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    • நெல்லையப்பர் திருக்கோயிலில் 500 பேருக்கு அன்னதானம் திட்டம் நாளை துவங்கப்பட உள்ளது.
    • புதிய 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், இசைப் பள்ளிகள் துவக்குவது குறித்து ஆலோசனை.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

    2021-2021 அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் சுமார் 1800 பணிகளில் 40 சதவீதத்திற்கு மேலான பணிகள் நிறைவுற்று இருக்கின்றன. 50 சதவீதம் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 10 சதவீதப் பணிகள் துவங்கப்பட இருப்பதை கலந்தாய்வில் உறுதி செய்துள்ளோம்.

    தற்போது அறிவிக்கப்பட்ட 2600பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். அதில் 75 சதவீதம் அளவிற்கு அரசானைகள் பெறப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள பணிகளையும் முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதிகமாக பக்தர்கள் வருகின்ற 10 திருக்கோயில்களுக்கு மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 மருத்துவமனைகள் தொடங்குவது குறித்தும், நாள் முழுவதும் பிரசாதம் 5 திருக்கோயில்களிலே அறிவிக்கப்பட்டது.

    உடனடியாக இத்திட்டத்தை துவக்குவது குறித்தும், அன்னதானத் திட்டத்தில் புதிதாக 10 திருக்கோயில்களில் தொடங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு 2 திருக்கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டத்தில் இருந்ததை தொடர்ந்து கூடுதலாக 3 திருக்கோயில்கள் என ஐந்து திருக்கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    நெல்லையப்பர் திருக்கோயில் விழாக்களில் 500 பேருக்கு அன்னதானம் என அறிவிக்கப்பட்டிருந்தோம் நாளை இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. 13 திருக்கோயில்களுக்கு பேட்டரி கார்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்களிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும், தொடங்கப்பட்டு இருக்கின்றது. மீதமுள்ள 11 திருக்கோயில்களில் அடுத்த மாதத்திற்குள் அறிவிப்பின்படி துவங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    சுமார் 1500 திருக்கோயில்கள் ரூ.1000 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் பணிகள் குறித்தும், 1000 ஆண்டு பழமையான திருக்கோயில்களுக்கு ரூ.100 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதில் 80 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக ஒப்புதல் பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், இசைப் பள்ளிகள் துவக்குவது குறித்தும், அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்து அறிவுரைகளை வழங்கி பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×