search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்-ஜெயராமன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்-ஜெயராமன் எம்.எல்.ஏ. பேச்சு

    • இந்த ஆண்டு 668 கோவில்களுக்கு திருப்பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்.
    • ரூ.17 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசியதாவது:-

    கிணத்துக்கடவு பேரூராட்சியில் பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் திருப்பணி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியோடு நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி, கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால், உபயதாரருடைய பணி அனைத்தும் ஓரளவுக்கு முடிந்துவிட்டது. எனவே இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் திருப்பணியை மீண்டும் தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    அதேபோல, மாசாணியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 2010 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் நேதி நடைபெற்றது. இப்போது 14 ஆண்டுகளாகிவிட்டன. அந்த மாசாணியம்மன் கோவில் திருப்பணிக்கும் உரிய கும்பாபிஷேகப் பணியை தொடங்கி சிறப்பாக நடத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது:-

    வேலாயுதசுவாமி திருக்கோவில் என்பது உபயதாரர்கள் மற்றும் ஆணையர் பொது நல நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உபயதாரர்கள் நிதியில் மேற்கொள்ளப்படுகிற பணிகள் 80 சதவீதம் அளவிற்கு நிறைவுற்றிருக்கி றது. அதேபோல, சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி தொடங்கப்பட்டு, பணிகள் எவ்வளவு முடிவுறுகிறதோ, அதற்கேற்றாற் போல் ஆணையர் பொதுநல நிதியில் வழங்கப்பட்ட அந்தத்தொகைக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகின்றது. இன்னும் போர்க்கால அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுத்து, அந்த சுற்றுச்சுவர் பணியை வேகப்படுத்துவோம்.

    ஆகம விதிப்படி 12 ஆண்டுகளில் எந்தெந்த கோவில்களில் எல்லாம் திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டுமோ, அவற்றையெல்லாம் கணக்கெடுத்து, இந்த ஆண்டு 668 கோவில்களுக்கு திருப்பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். எனவே மாசாணியம்மன் கோவிலுக்கு மண்டலக் குழு, தொல்லியல் குழு, அதேபோல், மாநிலக் குழு ஆகிய மூன்றும் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.17 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×