search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நெடுஞ்சாலை விபத்துகளில் 12 ஆயிரம் பேர் மரணம்
    X

    கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நெடுஞ்சாலை விபத்துகளில் 12 ஆயிரம் பேர் மரணம்

    • விபத்துகளால் படுகாயம் அடைந்தவர்கள் உடல் உறுப்புகளை இழந்து இருக்கிறார்கள்.
    • சுமார் 42 சதவீத விபத்துகள் 2 சக்கர வாகனங்களால் நடந்திருக்கிறது.

    சென்னை :

    தமிழக எல்லைக்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் போக்குவரத்து துறை கடந்த 2022-ம் ஆண்டு பதிவாகிய விபத்து தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த 17 ஆயிரம் கோர விபத்துகளில் 12 ஆயிரத்து 32 பேர் மரணம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆயிரத்து 893 பேரும், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலையில் 952 பேரும், மாநில நெடுஞ்சாலையில் 6 ஆயிரத்து 187 பேரும் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,045 பேர் விபத்தில் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 929 பேரும், திருப்பூரில் 877 பேரும், சேலத்தில் 827 பேரும், மதுரையில் 788 பேரும் விலை மதிப்பற்ற தங்களது உயிர்களை விபத்துகளில் இழந்திருக்கிறார்கள்.

    2 சக்கர வாகனங்களால் 7 ஆயிரத்து 392, கார், ஜீப் மற்றும் இலகு ரக வாகனங்களால் 2 ஆயிரத்து 927, லாரிகளால் 2 ஆயிரத்து 210, வேன், டெம்போக்களால் 1,424, அரசு பஸ்களால் 853, தனியார் பஸ்களால் 545, ஆட்டோக்களால் 403 மற்றும் பிற வாகனங்களால் 1,719 விபத்துகளும் நடந்துள்ளன. சுமார் 42 சதவீத விபத்துகள் 2 சக்கர வாகனங்களால் நடந்திருக்கிறது.

    விபத்துகள் அதிகரிப்பதற்கு, குண்டும், குழியுமான சாலை, மோசமான வடிவமைப்பு மற்றும் சாலையை முறையாக பராமரிப்பு செய்யப்படாதது ஆகியவை தான் முதன்மையான காரணமாக கூறப்படுகிறது. சாலைகளில் சாகசம் செய்யும் முனைப்பில் அதிக வேகமாக ஓட்டுவதால், சாலைகளில் விழுந்து மற்றும் தடுப்பு சுவரில் மோதி என இளைஞர்கள் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதேபோல விபத்துகளால் படுகாயம் அடைந்தவர்கள் உடல் உறுப்புகளை இழந்து இருக்கிறார்கள். சிலர் காயம் அடைந்து, குணமாகியிருக்கிறார்கள்.

    அடிக்கடி விபத்து நடப்பதாக கண்டறியப்பட்டுள்ள, கருப்பு பட்டியலில் இடம்பெற்ற இடங்களில், விபத்தை நிரந்தரமாக தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு நீண்ட கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவும், மோட்டார் சைக்கிள்களுக்காக நெடுஞ்சாலைகளின் வடிவமைப்பில் திருத்தம் கொண்டுவரவும் மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் செயல்படும் மாநில சாலை போக்குவரத்து கவுன்சில் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

    நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்ற, மாநில சாலை போக்குவரத்து கவுன்சில் உத்தரவிட்டு இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழகத்தில் நடந்த 15 ஆயிரத்து 384 சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 373 ஆக இருக்கிறது.

    விபத்து தரவுகளை மறு ஆய்வு செய்யும்போது சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்படும். அந்தவகையில், கடந்த 2017 மற்றும் 2020-ம் ஆண்டுக்கு இடையே விபத்து தொடர்பான தரவுகளை மறு ஆய்வு செய்தபின்னர் 22 ஆயிரம் உயிரிழப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×