search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் நாள் இரவு விற்கப்படாத உணவுகளை சுட வைத்து ஓட்டல்களில் மீண்டும் விற்பனை?
    X

    முதல் நாள் இரவு விற்கப்படாத உணவுகளை சுட வைத்து ஓட்டல்களில் மீண்டும் விற்பனை?

    • முதல் நாள் இரவு விற்கப்படாத உணவுகளை சுட வைத்து ஓட்டல்களில் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    இன்றைய காலகட்டத்தில் வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது. வேலைக்கு செல்வோர், சமைக்க நேரமில்லாத தம்பதிகள், வெளியூர்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் பெரும்பாலும் ஓட்டல்கள் மற்றும் கையேந்தி பவன்களில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி சில ஓட்டல்கள் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற உணவுப்பொருட்களை வைத்து உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

    மதுரையில் செயல்படும் ஓட்டல்களில் இதுபோன்ற நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மற்ற நகரங்களை காட்டிலும் மதுரையில் சாலையோர திண்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளது. திறந்த வெளியில் எந்த சுகாதாரமும் இல்லாத இடத்தில் இட்லி, தோசை, வடை, இறைச்சி, பழங்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பசிக்காக அவசர கதியில் வாங்கி உட்கொள்ளும் மக்கள் வயிற்று உபாதை, வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக எண்ணை பலகாரம் பயன்படுத்தும் வடை, புரோட்டா கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி உணவு சமைக்கப்படுகிறது. இதனால் அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    மதுரை நகரில் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள், பைபாஸ் ரோடு மற்றும் சாலையோரங்களில் செயல்படும் சில கடைகளிலும் முதல் நாள் விற்பனையாகாத உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதேேபால சில பெரிய ஓட்டல்களிலும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரை நகரில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவுகளை வழங்க வேண்டிய சேவை தொழிலை மேற்கொள்ளும் உணவகங்கள் அதனை மீறி வணிக நோக்கத்தில் செயல்படுகின்றன.

    குறைந்த விலையில் கிடைக்கும் ரேசன் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி அதன்மூலம் உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றன. இதனை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் உணவகங்கள் அடிக்கடி உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்து வருகின்றன. இதற்கு முறையான விலை பட்டியலை கடையில் வைப்பதில்லை. இதனால் சாப்பிட்டு விட்டு பலர் அதிக பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தூக்கத்தில் உள்ளனர். அவர்கள் இனிமேலாவது விழித்துக்கொண்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×