search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோடை மழை- வைகை ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு செல்லும் தண்ணீர்
    X

    கோடை மழை- வைகை ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு செல்லும் தண்ணீர்

    • புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.
    • பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிகழ்ச்சிக்காக வருடம் தோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். திருவிழா முடிந்த பின்னர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும்.

    இப்படி சிறப்பு வாய்ந்த வைகை ஆற்றை தூர்வாராமலும், சில சமூக விரோதிகள் ஆற்றில் உள்ள மணலை அள்ளிச் சென்றதாகவும் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வைகையில் நிரந்தரமாக தண்ணீர் ஓடினால் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் நாளடைவில் தண்ணீர் ஓடாமல் சாக்கடை கழிவுகள், வீடுகளில் இருக்கும் குப்பைகள் தான் வைகையில் மிதக்கிறது. புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வைகை வறண்ட நிலையில் அழகர் மலையானே தீயணைப்பு துறை உதவியால் தொட்டிக்குள் இறங்கி, ஆற்றில் இறங்கும் வைபவம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடந்த வரலாறும் உண்டு. அதற்கு முன் திறந்து விடப்பட்ட வைகை நீர், வைகையில் மணல் இல்லாததால் மணல் அள்ளிய பள்ளத்தில் நீர் தேங்கி, மதுரைக்கு கூட வைகை நீர் வர முடியாத பரிதாபமான சூழல் நிலையும் இருந்தது. .

    வைகை ஆறு நீர்தாங்கிச் செல்லும் என்ற நிலை மாறி கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது. இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர் நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக காணப்படுகிறது. வைகை கரையோரம் முள் புதர் செடிகளும், ஆற்றுக்குள் நீரை அதிக அளவு உறிஞ்சும் கருவேல மரங்களும், மணல் அள்ளிய திருட்டு கும்பலிடம் தப்பித்த பகுதிகள் சிறு குன்று போலவும், மணல் அள்ளிய இடங்கள் அபாயகரமான பள்ளப்பகுதி என அறிவிக்கும் நிலையிலும் வைகை உள்ளது. கழிவு நீர் சாக்கடைகள் சங்கமிக்கும் வைகையை அழகர் ஆற்றில் இறங்கும் போது மட்டுமே கவனிக்கும் அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதுரையை வந்தடைந்தது. நேற்று மதியம் பெய்த கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இன்று இரண்டாவது நாளாக வைகையின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் வைகையாற்றில் கலந்து வீணாகிறது. தண்ணீரை தேக்கி வைக்க கூடுதல் தடுப்பணைகளை கட்டவும் பாரம்பரிய மிக்க வைகை ஆற்றில் நிரந்தரமாக தண்ணீர் போடவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×