என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மதுரை
- அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.
- கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் காவல்துறையினர் எடுத்துச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் மீண்டும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொடிகம்பத்தை மீண்டும் வழங்கியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடனமாடி கொண்டாடினர்.
புதூர் பகுதியில் அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.
இதனால், கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், விசிக கொடுக்கம்பம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரேன் மூலம் எடுத்து வரப்பட்ட 62 அடி உயர கொடிக்கம்பத்தை நடுவதற்கான பணியில் விசிக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
விசிக கொடி ஏற்றுவதில் பல்வேறு காரணங்களை கூறி மதுரை ஆட்சியர் தடை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மூத்த அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என திருமாவளவன் கூறி இருந்த நிலையில் கொடிக்கம்பம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
- அன்னபூர்ணா உணவக உரிமையாளருக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் கருணாஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், "நான் நாட்டிற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறேன். நான் உட்பட பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரி நாட்டு மக்களின் நலன்களுக்கு செலவிடப்படுவதில்லை. மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்.
அன்னபூர்ணா முதலாளி சராசரி குடும்பத்தில் பிறந்து உழைத்து இந்த முன்னேறியுள்ளார்.நிதியமைச்சரிடம் அவர் பன்னுக்கு வரி இல்லை அதில் தடவுகிற ஜாமுக்கு 18% வரி போடுகிறீர்கள். இனிப்புக்கு ஒரு வரி காரத்துக்கு ஒரு வரி என குழப்பங்கள் இருப்பதாக கேட்கிறார். அவரை அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
- காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம்.
- டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா?
திருமங்கலம்:
மதுரை திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் உலகின் மூத்த மொழி தமிழ் என்று பேசி வருகிறார். முதல்-அமைச்சர் அமெரிக்கா சென்று அங்குள்ள தமிழர்களிடம் தமிழின் பெருமை பற்றி பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் என்றாவது பேசியதுண்டா. தன் தாய் மொழியை மீட்க தமிழ் பிள்ளைகள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகள் எல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளது.
காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம். உலகில் எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் ஒன்று தான் இறைவனால் பாடப்பட்டது. கீழடியில் 2 ஏக்கர் மட்டுமே தோண்டப்பட்டு உள்ளது. அங்குள்ள 100 ஏக்கர் நிலங்களையும் தோண்டி ஆய்வு நடத்த வேண்டும் அப்போதுதான் தமிழனின் முழுமையான வரலாறு தெரியும்.
தமிழகத்தில் எல்லோருக்கும் சிலை உள்ளது. ஆனால் வேலுநாச்சியாருக்கு சிலை இல்லை. நான்காம் தமிழ் சங்கம் வளர்த்த பாண்டித்துரை தேவருக்கு மரப்பாச்சி பொம்மை அளவில் தான் மதுரையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சீனர், ஜப்பானியர்கள் என அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். ஆனால் நம்மிடத்தில் தமிழ் இல்லை.
டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா? என கேட்க யாரும் முன்வரவில்லை. தாய் மொழி தமிழ் நம் கண் முன்னே அழிந்து போவதை வேடிக்கை பார்ப்பதா?
மலை, மணல் திருடினால் பரவாயில்லை-எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கும் நிலைதான் இங்கு உள்ளது. சீமான் வந்த பிறகு அனைத்தையும் தமிழில் தான் பேசுவார்கள். இந்தி படித்தால் எல்லா இடங்களிலும் வேலை கிடைத்து விட்டதா? இந்தி படித்தவன் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நுழைந்து விட்டான்.
அமெரிக்கா சென்ற முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்துக்கொண்டு மூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்து விடுவார். அதை நான் தான் சென்று இறக்க வேண்டும்.
திருமாவளவனுக்கு வந்த தைரியத்தை பாராட்டுகிறேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கருத்தை ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சில மணிநேரங்களில் வீடியோ எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
- வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது.
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் எக்ஸ் வலைதளத்தில் இன்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் திருமாவளவன் ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென பேசி இருந்தார். இந்த வீடியோ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சில மணிநேரங்களில் அந்த வீடியோ எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதற்கிடையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்த வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் ஆட்சி அதிகாரம் குறித்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய எக்ஸ் தளத்தில் தவறுதலாக பதிவு செய்திருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எங்களின் நிலைபாடு நீண்ட காலமாக உள்ளது என்றார்.
- அரசு எந்திரத்தையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.
- உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து அதை வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்துகிற நாடகம்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் கூறியதாவது:-
தமிழக இளைஞர் நலம் விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு திட்ட செயலாக்குத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மதுரையில் கடந்த 9-ந்தேதிஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே அமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அரசு செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டிருந்தது .
குறிப்பாக இதுபோன்ற ஆய்வு கூட்டத்திலே மனுக்களின் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே அலுவலர் அவர்களின் செயல்பாடுகளை நிர்ணயிப்பது என்பது ஏற்புடையதாகாது.
இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வளர்ச்சி திட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் என்ற பெயரிலே அவர்களுடைய மரபுகளை மீறி அனைத்து துறைகளுடைய அலுவலகங்களிலும் அவர் ஆய்வு செய்வதாக அரசு ஊழியர் சங்கத்தினர் முகம் சுளிக்கின்றனர். பொதுவாக அனைத்து துறைகளுடைய அலுவலர்கள் ஆய்வு செய்கின்ற அந்த அதிகாரம் என்பது நாம் அறிந்த வகையிலே முதலமைச்சர் மட்டும்தான் அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரம் பெற்றவராக உள்ளார் என்பதை நாம் அறிகின்றோம்.
உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் எல்லாம் அமைச்சரவையில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் அவரை முன்னிலைப்படுத்தி ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.
முதலமைச்சருக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் விளையாட்டு துறை அமைச்சரின் கீழே கொண்டு வருவது என்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கண்டிராத கேட்கிறாத பார்த்திராத ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்திருக்கிறது.
அதோடு தன் ஆய்வுகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரிலே அவசரக்கதியிலேயே முழுமையான விசாரணை செய்யாமல் போதிய விளக்கத்தை பெறாமல் நடவடிக்கை எடுப்பது என்பது முழுக்க முழுக்க ஒரு அரை வேக்காட்டுத்தனமான நடவடிக்கையாக தான் அரசு ஊழியர்கள் பார்க்கிறார்கள்.
ஆகவே இன்றைக்கு முதலமைச்சராக அமெரிக்காவில் இருக்கின்ற போது அறிவிக்கப்படாத முதலமைச்சராக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் அரசின் முழு நிர்வாகத்தையும் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து அதை வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்துகிற நாடகம்.
எது எப்படி ஆயினும் கலெக்டர் தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பாக மதுரையிலே வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை முதலமைச்சர் கவனத்தில் எடுத்து இது போன்ற மரபு மீறி நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை தடுத்து நிறுத்தி ஒரு தவறான முன்உதாரணம் அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தி விட கூடாது என்பதை உரிய விளக்கத்தோடு இதற்கு ஒரு தீர்வு காண அமெரிக்காவில் இருக்கின்ற முதலமைச்சர் முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.
- ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான நபர்களை சந்தித்து பேசி உள்ளார். இந்தியாவில் உள்ள பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக் கீட்டை ரத்து செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.
ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து சாதி, மத கலவரங்களை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.
இந்தியா குறித்து மிக தவறான கருத்துக்களை ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசி உள்ளார். ராகுல் காந்தியின் செயல்பாடுகள் தேச விரோத செயலாகும்.
இந்தியா முழுதும் 16,000 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.4,000 கோடிக்கு மேலாக நிதி தர வேண்டும். திட்டத்தின் விதிகளின் படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும்.
முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து பிடிவாதம் செய்கிறது. அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி குடும்ப பிள்ளைகளுக்கு மும்மொழி வேண்டும், தமிழக மக்களின் பிள்ளைகளுக்கு இருமொழி கற்றுக் கொடுக்கிறார்கள். 1985 -ம் ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்.
தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மறுநாள் காலை மத்திய அரசின் கல்வி நிதி வந்தடையும்.
நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தப்பட் டது, நீட் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்.
பா.ஜ.க. மது அருந்ததாத உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பதால் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என திருமாவளவன் நினைத்து இருக்கலாம்.
மகாவிஷ்ணு எந்தவொரு தவறும் செய்யவில்லை. மகாவிஷ்னுவை மிரட்டும் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி திருச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளி மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொது பட்டியலுக்கு கொண்டு வருவதாகும்.
ஆகவே விஜய் திராவிட கட்சிகளுக்கு தான் போட்டியாளராக இருப்பார். விஜய் அரசியலுக்கு வருவதால் பா.ஜ.க.விற்கு பாதிப்பில்லை, திராவிட கட்சிகளின் வாக்குகளைத் தான் விஜய் பிரிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது.
- நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே திண்டுக்கல்-காரைக்குடி சாலை உள்ளது. இந்த சாலையில் காரியேந்தல்பட்டி விலக்கு பஸ் நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறையால் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சிமெண்டால் ஆன பயணிகள் இருக்கையும், தகர செட்டால் ஆன மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த பஸ் நிறுத்தத்தை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகர செட்டை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனால் பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர்.
- போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- 2-வது மாடியில் தங்கியிருந்தவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று உயிர் பிழைத்தனர்.
- புகையில் சிக்கிக்கொண்ட ஆசிரியை பரிமளா சவுந்தரி மட்டும் அதிக புகையால் மூச்சுவிட முடியாமல் மயங்கினார்.
மதுரை பெண்கள் விடுதியின் முதல் மாடியில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் இன்று அதிகாலை வெடித்துச்சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அளவுக்கு அதிகமான கரும்பு புகை வெளியேறியதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது முதல் மாடியில் இருந்து இரண்டாவது மாடிக்கும் புகை பரவுவதை தடுக்க அங்கிருந்தவர்கள் கதவை பூட்டினர்.
2-வது மாடியில் தங்கியிருந்தவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று உயிர் பிழைத்தனர். இதற்கிடையே விபத்து ஏற்பட்ட பகுதியில் தங்கியிருந்த ஆசிரியை பரிமளா சவுந்தரி சுதாரித்துக்கொண்டு அந்த அறையில் தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி அங்கிருந்து கீழே செல்லுமாறு அப்புறப்படுத்தினார்.
உடனடியாக அவர்களும் புகை மண்டலத்துக்கு நடுவில், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தப்பினார்கள். ஆனால் புகையில் சிக்கிக்கொண்ட ஆசிரியை பரிமளா சவுந்தரி மட்டும் அதிக புகையால் மூச்சுவிட முடியாமல் மயங்கினார்.
ஒருசில விநாடிகளில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல்தான் மற்றொரு பேராசிரியையான சோழவந்தான் பகுதியை சேர்ந்த சரண்யாவும் உயிரை விட்டார். தன்னலம் கருதாமல் கடைசி நேரத்திலும் மற்றவர்களை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட ஆசிரியை பரிமளா சவுந்தரியின் செயலை எண்ணி சக பெண்கள் கண்ணீர் விட்டனர்.
- சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.
- விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த நாசரேத் துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரம் கிராமத்தில் நாலாயிர முடியார்குளம் மற்றும் நத்தகுளம் ஆகிய நீர்நிலைகள் அமைந்து உள்ளன. இந்த நீர்நிலை படுகைகளில் இருந்து மணல் அள்ளப்பட்டு கடத்தி வருகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. விவசாயத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.
இது தொடர்பாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் கேள்வி எழுப்பினால் மிரட்டி வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.
இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கந்தசாமிபுரம் கிராமத்தில் நத்தகுளம் மற்றும் நாலாயிர முடியார் குளத்தில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறதா? என மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் பலியானார்கள்.
- விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை:
மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் பலியானார்கள்.
விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்றத்தையும் சில பேர் அணுகி உள்ளனர். இடிக்காமல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஆலோசித்து 'சீல்' வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் அனுமதி என்று எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது. விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில் பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
- குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கலெக்டர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
- மதுரை முழுவதும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கட்ராபாளையத்தில் உள்ள விசாகா தனியார் விடுதியில் கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.
குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கலெக்டர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* விடுதியில் 2 பெண்கள் பலியானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
* விபத்து தொடர்பாக விசாகா தங்கும் விடுதி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கட்டடம் குறித்து வழக்கு இருப்பதாக கூறப்படுவதால் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.
* மதுரை மாவட்டங்களில் முறையான அனுமதியின்றி இயங்கும் விடுதிகளை கண்டறிந்து சீல் வைக்கப்படும்.
* மதுரை முழுவதும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* மதுரையில் பதிவு செய்யாத அனைத்து விடுதிகளையும் ஆய்வின் மூலம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்