search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்.
    • மிச்சாங் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்.

    மதுரை :

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

    * தி.மு.க. ஒரு கார்பரேட் கம்பெனி.

    * நான் தலைவன் அல்ல, தொண்டன். அ.தி.மு.க.வில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். தி.மு.க.வில் வர முடியுமா?

    * தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்.

    * எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் என்று இருப்பது வாரிசு அரசியல் அல்ல.

    * மிச்சாங் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்.

    * 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்வர்.

    * நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன்.

    * தமிழகத்தில் 35 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது.

    மதுரை:

    தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவிற்கான பணிகள் இன்று கொட்டகை முகூர்த்த நிகழ்வுடன் தொடங்கியது.

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சன்னதியில் இன்று காலை சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது. இந்த கொட்டகை மூகூர்த்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     இந்த நிகழ்ச்சியின் போது சித்திரை திருவிழா சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி என்பதை நிருபிக்கும் வகையில் கள்ளழகர் கோவில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களின் சார்பிலும் தனித்தனியாக அச்சிடப்பட்ட பத்திரிகைகள் தாம்பூல தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அழைப்பிதழ்களை நிர்வாக தரப்பில் ஒருவருக்கொருவர் அளித்து திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறக்கூடிய மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற உள்ளது.

    இந்த கொட்டகை மூகூர்த்தத்தை தொடர்ந்து சித்திரை பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும். 21-ந் தேதி மாலை 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும், 22-ந்தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும் இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 23-ந் தேதி காலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

    பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். இதனை தொடர்ந்து 24-ந் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும், 25-ந் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 26-ந்தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 27-ந்தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று விழா நிறைவுபெறும்.

    • மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது," தமிழகத்தின் கதையை எழுதுவதைப் போல நாட்டின் கதையையும் திமுக எழுத நினைப்பதாக" விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மக்கள் என்னை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றி பெறுவோம்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    இந்தியாவை காப்பாற்றுவதாக் கூறும் முதல்வர் முதலில் தமிழகத்தைக் காப்பாற்றட்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்கிறார்கள். அது காமெடியா இல்லை நிஜத்தில் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
    • ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

    ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடு அனைத்து துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு நாடு வந்ததற்கு பிரதமரின் தலைமை பண்பே காரணம்.

    ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி தமிழராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில், கையில் செங்கோலுடன் பிரதமர் மோடி சென்றார்.

    திமுகவும், காங்கிரஸூம் தமிழ்க் கலாச்சாரத்தை கலங்கடிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு.
    • இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    • கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
    • தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மதுரை:

    மதுரை சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 23-ந்தேதி சித்திரா பவுர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தர உள்ளனர். நடப்பாண்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக நடத்தி வருகிறது.

    இந்த சூழலில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், பானகம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்பேரில் இனிவரும் ஆண்டுகளில் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பிறகே நீர், மோர் பந்தல், அன்னதானம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வழங்க வேண்டும்.

    அதேபோல் கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர். இந்த நேர்த்திக்கடனின்போது தோல் பையில் நிரப்பிய தண்ணீரை துருத்தியின் மூலமாக பீய்ச்சி அடிப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிலர் தோல் பையில் சிறிய மோட்டார் பொருத்தி அதிவேகத்தோடு நீரை பீய்ச்சி அடிப்பதுடன் வாகனத்தில் வரும் அழகர், அழகருடன் பயணிக்கும் பட்டர்கள், பெண்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதையொட்டி அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (7-ந்தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே சமயம் உயரழுத்த மோட்டார் பம்பு, மின் மோட்டார்கள் ஆகியவற்றின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கள்ளழகர் அழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு வரும் வரை இடையில் உள்ள எந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என ஐகோர்டு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணா பேருந்து நிலையம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரகுராஜன் மனைவி லட்சுமி (வயது 53). இவர் கணவரை பிரிந்து 20 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.

    லட்சுமி களிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக வீட்டில் இருந்து தினமும் காலையில் பள்ளிக்கு ஷேர் ஆட்டோ மற்றும் அரசு பேருந்தை பயன்படுத்தி வந்துள்ளார். தினமும் வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் சிவகங்கை நான்கு வழிச்சாலை சந்திப்பு வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோ அல்லது பஸ் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பிய லட்சுமி ஆட்டோவில் விக்ரம் மருத்துவமனை சந்திப்பு அருகே வந்து அங்கிருந்து மற்றொரு ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பள்ளியில் வேலை செய்யும் இரண்டு ஆசிரியைகள் உள்ளிட்ட நான்கு பேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.

    மற்ற இரண்டு ஆசிரியர்களும் அவர்களது பள்ளி அருகே இறங்கிக் கொள்ள ஆட்டோவில் லட்சுமி மற்றும் அவருடன் பயணி ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவிற்கு டீசல் போடுவதாக லட்சுமியிடம் கூறிய ஆட்டோ டிரைவர் பெட்ரோல் நிலையம் செல்வதற்கு பதிலாக வேறொரு பாதையில் ஆட்டோவை ஓட்டியுள்ளார். ஏன் என்று கேட்ட லட்சுமியிடம் இது தான் குறுக்கு வழி என்று கூறிய ஆட்டோ டிரைவர் மறைவான காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஆட்டோவில் இருந்த இளைஞர் மற்றும் ஆட்டோ டிரைவரும் சேர்ந்து தலைமை ஆசிரியை லட்சுமியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். அவர் காதில் அணிந்திருந்த தோடு மாட்டலை கழட்டி தருமாறும் தராவிட்டால் காதை அறுத்து விடுவோம் என்று கூறியதாலும் உயிருக்கு பயந்த அவர் காது கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.

    ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமி அங்கிருந்து தப்பி அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நகைக்காக பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வெட்டி நகையை பறித்து சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து பெரும்பாலும் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். சாலை விதிகளை சில ஆட்டோக்கள் மதிக்காமலும் சாலை விதிகளை மீறுவதாலும் அதிக நபர்களை ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் பல்வேறு விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆட்டோவில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு நடந்த சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    • 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.
    • சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    மதுரை:

    சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். சித்திரை திருவிழாவால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்களில் முதன்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறும்.

    அன்று மாலை கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் 4 மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

    2-ம் நாள் (13-ந்தேதி) திருவிழாவில் காலையில் சுவாமி-அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்-அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    3-ம் நாள் (14-ந்தேதி) காலையில் 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

    4-ம் நாள் திருவிழாவான 15-ந் தேதியன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

    5-ம் நாள் 16-ந் தேதி காலையில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயணச்சாவடி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். இரவு 7 மணிக்கு அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு சுவாமி-அம்பாள் திரும்புகிறார்கள்.

    6-ம் நாள் (17-ந் தேதி) திருவிழாவில் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 7-ம் நாளான 18-ந் தேதி காலை தங்கசப்பரத்திலும், இரவு நந்திகேசுவரர்-யாளி வாகனத்திலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    விழாவில் 8-ம்நாளான 19-ந் தேதியன்று காலையில் தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7.35 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும். கோவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி, செங்கோல் வழங்கி மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கும். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) வீதி உலா நடக்கும்.

    20-ந் தேதி காலை மரவர்ண சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வந்து அஷ்டதிக்கு பாலகர்களை போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் திக்கு விஜயம் நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந்தேதி) விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்த ராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தோரோட்டம் நடக்கிறது. 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    • மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
    • சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    மதுரை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41-வது வணிகர் தினத்தையொட்டி, வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை விமான நிலையம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான கால் கோள் விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார். நிகழ்ச்சியில் மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்துத்து, மாநில தலைமைச் செயலாளர் பேராசியர் ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல், கூடுதல் மாநில செயலாளர் வி.பி.மணி உள்பட பல முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாவட்டச் செயலாளர் அழகேசன், பொருளாளர் லட்சுமி காந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மே மாதம் 5-ந்தேதி 41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கு லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டுக்கு பின்பு அமையக்கூடிய புதிய மத்திய அரசு எந்த அரசாக இருந்தாலும் வணிகர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். மேலும் இந்த மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், மும்பை, கேரளாவை சேர்ந்த முதலாளிகள் தமிழகத்தின் வணிகத்தை ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் வணிகர் மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாடு வணிகர்களின் பாதுகாக்கும் முயற்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டம் என்னும் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு முயற்சி எடுக்கும்.

    வணிகர் சங்க மாநாட்டில் அமைச்சர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு வேண்டிய பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வகையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட உள்ளது. அதற்காக தனிக்குழுவும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த கால்கோள் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு மாநாடு சிறப்பு பெற தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சி நிறைவில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    • ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    • தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.

    திருமங்கலம்:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் மிக முக்கிய ஆட்டுச் சந்தையான திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் விற்பனையாகும் ஆடுகளின் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம், ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளதாகவும், ரம்ஜான் பண்டிகையால் வரத்து குறைவு என்பதால் வேறு வழியின்றி வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அதிக பணத்தை கொண்டு வர முடியாததால் பகிர்ந்து கொண்டு செல்வதாகவும், ஏற்கனவே எங்களை நம்பி ஆடுகளை கொடுத்து விடும் மக்களுக்கு நாங்கள் உரிய முறையில் பணத்தைக் கொண்டு செலுத்த வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் அதிக தொகையை கொண்டு செல்வதில் அச்சம் நிலவுவதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகாலை 2 மணி முதல் ஆடு விற்பனை களை கட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.

    • நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
    • டிடிவி தேவையில்லா வம்பு செய்கிறார்.

    மதுரை:

    மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கே: நேற்று இதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பாஜக கூட்டணியில் இருக்கும் எல்லா தலைவர்களும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை எல்லாம் போட்டியிடுகிறார்கள். சேலத்து சிங்கம் என்று அழைக்கப்படும் எடப்பாடியாரோ, தங்கமணியோ ஏன் போட்டியிட பயப்படுகிறார்கள். வேறு ஒருவரை களத்தில் இறக்கிவிட்டு பலிகடா ஆக்குகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    பதில்: எதிர்க்கட்சி தலைவராக, சட்டசபை உறுப்பினராக எங்களுடைய அருமையான அண்ணன் எடப்பாடி இருக்கிறார். அவர் மிகச்சிறந்த அரசியல்வாதி. அவரை பொறுத்தவரை அவர்கள் செய்த தவறை நியாயப்படுத்த பார்க்கிறார்கள்.

    ஒரு சட்டசபை உறுப்பினர் 2 தொகுதியில் ஒரு எம்.எல்.ஏ.க்கள் நிற்க கூடாது என்பது இப்போது மக்கள் மத்தியில் பாலிசியாக இருக்கிறது. 2 பேர் பணம், அரசாங்க பணம் வீணாவது, ஒரே தொகுதியில் 2 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் நிற்பது தவறு என்பது மரபு என்பது போல் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம்.

    ஒரு காலத்தில எம்.பி. நின்றார்கள், எம்.எல்.ஏ. நின்றார்கள். அந்த மரபு இருந்தது.

    ஆனால் தற்போது தங்கமணி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். எடப்பாடி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். வேலுமணி, நான் சட்டசபை உறுப்பினராக இருக்கிறேன்.

    இன்னொரு பதவி பொறுப்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு என்ன அவசியம் உள்ளது. நீங்கள் இத்தனை சட்டசபை உறுப்பினர்களை வீணாக்குகிறீர்கள். நீங்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை.

    மத்திய அமைச்சர் நேற்று பதவி ஏற்கிறார். நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தோல்வியை சந்திப்போம் என்று முன்பே தெரியும்.

    ஓபிஎஸ்-க்கு நன்கு தெரியும் நாம் ஜெயிக்க முடியாது, இருக்கும் எம்.எல்.ஏ.வை கொஞ்ச நாள் வைத்திருப்போம் என்று.

    அவர் கட்சி மாறி இருக்கிறார். சட்டசபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடப்போகிறது.

    அருமை அண்ணன் நாவலர், மிகப்பெரிய திறமையாளர், பேச்சாளர், கட்சி பொதுச்செயலாளராக இருந்தவரே தென்னை மர சின்னத்தில் நின்றுபடாதபாடு பட்டார்.

    இனிமேல் அவரை ஓபிஎஸ் என்று சொல்லாமல் பலாப்பழம் என்று தான் மக்கள் அழைக்கப்போகிறார்கள்.

    தேவையில்லாத வேலையில் இறங்கி தன்னைத்தானே இழிவு படுத்திக்கொண்டார்.

    சட்டசபை உறுப்பினர்களாக இருப்பவர்கள் வீணாக அரசு பணத்தை வீணடிக்க முயற்சிக்கிறார்கள். தோல்வியை சந்திப்போம் என்று தெரிந்தே நிற்கிறார்கள். இதுதான் உண்மையான நிலைமையே தவிர, இதில் டிடிவி எங்களை ஏன் குறை சொல்ல வேண்டும்.

    எடப்பாடியார் ஏன் எம்.பி.யாக நிற்க வேண்டும் அவசியமே இல்லை.

    அதிமுக 40 தொகுதிகளிலும் வென்று, சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் இந்திய துணை கண்டத்திற்கு பிரதமராக வர வேண்டும் என்றால் அன்று பிரதமராக வந்து ராஜ்ய சபா எம்.பி.யாக வந்து விட்டு போகிறார். டிடிவி தேவையில்லா வம்பு செய்கிறார்.

    அனைத்து மாநில கட்சிகளும் சேர்ந்து எடப்பாடியார் ராஜதந்திரம் மிக்கவர், திறமையானவர் என்று உணர்ந்து தேவே கவுடா, சந்திரசேகர் எப்படி பிரதமர் ஆனாரோ அதுபோல் எடப்பாடியார் பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கும்போது, பிரதமர் ஆக்க நினைக்கும்போது ராஜ்யசபா எம்.பி. ஆகி விட்டு போகிறார்.

    அண்ணா முதலமைச்சராகும்போது ராஜ்ய சபை எம்.பி.யாக தான் வந்தார்.

    நீங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் மண்ணை வாரிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    கே: எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளார் என்று டிடிவி கூறுவது?

    பதில்: மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவங்க சொன்னது ஒரு புறம். டிடிவி சொன்னது ஒரு புறம். டிடிவிக்கு நல்லா தெரியும். திமுகவுடன் கள்ள கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. தேவையில்லாத வார்த்தைகளை பேசி வருகிறார்.

    இப்போது அதிமுக ஜெயிக்கப்போகிறது, வெற்றி பெறப்போகிறது என்று தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் குறைகளை சொல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

    நிச்சயமாக அந்த வாய்ப்புகள் இல்லை. அதிமுக தனித்து நிற்கிறது. தனி தலைவராக அண்ணன் எடப்பாடியார். இப்போது ஒப்பற்ற தலைமையோடு மிச்சிறந்த தலைமையோடு இன்று மக்கள் மத்தியில் எங்கே பார்த்தாலும் எடப்பாடியார் தான் பேச்சு.

    இன்றைய அரசியலில் மக்கள் மத்தியில் எடப்பாடியார் தான் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஈர்ப்பு சக்தியால், பேச்சாற்றலால், பணியாற்றலால், மிகச்சிறந்த உண்மையான உணர்வுகளோடு பேசுகிற காரணத்தால் இன்று மக்கள் பேசுகிறார்கள். அவர் உள்ளத்தில் இருந்து பேசுகிறார். அதனால் நடக்கிறது. வெற்றியோடு நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    • ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.
    • நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

    மதுரை:

    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகத்தில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகம் வருகை தரும் அவர் 3 இடங்களில் ரோடு-ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.

    அதற்காக அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு சிவகங்கை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவிற்கு வாக்குகளை கேட்டு ரோடு-ஷோ நடத்துகிறார்.

    முன்னதாக காலை 10 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழக ஹெலிபேட் தளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பெரியார் சிலை வந்தடைகிறார். தொடர்ந்து பெரியார் சிலை முதல் அண்ணாசிலை வரை சாலையில் நடந்து சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்கிறார். அவருடன் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

    இதையடுத்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். தொடர்ந்து தென்காசி ஆசாத் நகர் முதல் பழைய பஸ் நிலையம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று ரோடு-ஷோ மூலம் ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். முன்னதாக மதுரையில் இன்று இரவு பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பிரசார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×