search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார்.
    • வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்காளை. இவர் மதுரை பழங்காநத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது55). பக்கவாத நோயால் அவதிப்பட்டு பரமேஸ்வரி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேங்கல்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பரமேஸ்வரி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் சிவன்காளை மனைவியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரமேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமேஸ்வரியின் மகள் சிவரஞ்சனி (31) கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி இறந்தது அறிக்கையில் தெரிய வந்தது. இதனால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர்.

    மேலும் கொலை தொடர்பாக மகள் சிவரஞ்சனி, இவரது கணவர் ஜெயபிரகாஷ் (30), அவரது நண்பர்கள் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுசூதனன் (30), மதனகோபால் (29), அழகுபாண்டி (34) ஆகியோர் ஆ.கொக்குளம் வி.ஏ.ஓ., சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    தேங்கல்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சிவன்காளையுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சிவன்காளைக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி இறந்து விட்டார்.

    சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். பரமேஸ்வரிக்கு இரண்டு சொந்த வீடுகள் உள்ளது. இந்த நிலையில் தேங்கல்பட்டியில் சொந்த வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது. வீடு கட்டுவதால் பண நெருக்கடியில் இருந்த பரமேஸ்வரி வீட்டின் பெயரில் வங்கியில் கடன் பெற முயன்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

    இதனால் வேறுவழியின்றி மகள் சிவரஞ்சனியின் உதவியை நாடியுள்ளார். அப்போது மகளிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கி தருமாறு கூறி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மகள் சிவரஞ்சனி தனது தாய் இரண்டாவதாக சிவன்காளையை திருமணம் செய்தது பிடிக்காமலும், சொத்துக்களை தன்னிடம் இருந்து வாங்கி அவருக்கு கொடுத்து விடுவார் என்ற எண்ணத்திலும், ஏற்கனவே உள்ள வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு சிவரஞ்சனி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மூன்று பேரும் தேங்கல்பட்டியிலுள்ள பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்று சொத்தை சிவரஞ்சனி பெயருக்கு மாற்றி தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதிலிருந்து தப்பித்து கொள்ள பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், தன் தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து மகள் சிவரஞ்சனி, அவரது கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கூட்டாளிகள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சொத்துக்காக பெற்ற மகளே தனது தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.
    • மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    மதுரை:

    2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பெரும்பாலான மாநிலங்களில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான தி.மு.க. முதலிடத்தை பிடித்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.

    இதற்கிடையே தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏராளமான சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது ஆதரவினை அளித்த போதிலும் பெரிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதில் இழுபறி நிலையே தற்போது வரை நீடிக்கிறது. இருந்தபோதிலும் வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜெயல லிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்த அ.தி. மு.க. தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் தனித்துவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். 10 தொகுதிகள் வரை பா.ஜ.க. மேலிடத்தில் கேட்டு வரும் நிலையில் இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை வைத்து தான் தனக்காக பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி அதற்கேற்ப ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்டார்களா? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது தலைமையிலான அ.தி.மு.க.வின் பயணத்தை இந்த தேர்தலில் வெற்றியுடன் தொடங்க வியூகம் வகுத்து வருகிறார்.

    அதேவேளையில், தென் மாவட்டங்களில் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பா. ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளார். பா.ஜ.க.வுடன் அமைத்துள்ள கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அவ்வாறு நிறுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார், அந்த தொகுதியில் செல்வாக்கு மிகுந்த மகேந்திரனை களமிறக்க முடிவு செய்து அதற்கான வேலை களையும் தொடங்கியுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த தேர்தலில் கொடுக்கும் 'அடி' தங்களுடன் மீண்டும் மோதக்கூடாது என்பதை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. ரவீந்திரநாத்தை தோற்கடித்து அதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வரும் அ.தி.மு.க. அதற்கேற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறது.

    இதுபோன்ற காரணங்கள் அறிந்த ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் இருந்து மாறி தனது மகன் ரவீந்திரநாத்தை மதுரை தொகுதியில் போட்டியிட வைக்கவும் திட்டம் வகுத்து வருகிறார். இதுபற்றி தான் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. மேலிடத்திலும் இதுபற்றி ஆலோசித்து வருகிறார்.

    மதுரையில் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்டால் சவுராஷ்டிரா மக்கள் பேராதரவுடன் மற்ற சமு தாய வாக்குகளையும் எளிதாக பெற்றுவிடலாம் என்ற கணக்குடன் இந்த முயற் சியை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக தனது மகனுக்கே ஓட்டுப்போட வாய்ப்புள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி களமிறங்குவதால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்றும் கணித்துள்ளார்.

    அதேபோல் செல்வாக்கு மிகுந்த ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக காய் நகர்த்தி அவரை எப்படியாவது வெற்றி பெறச்செய்து எம்.பி.யாக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அவரது ஆதரவாளர்களும் வரவேற்று உள்ளனர்.

    • ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வரி ஏய்ப்பு செய்து அதிக அளவில் தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

    அவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 மதிப்பிலான 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பசை வடிவிலும், பவுடராகவும் மாற்றி கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திய விமான பயணியிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.

    உசிலம்பட்டி:

    தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் மார்நாடு கருப்பசாமி கோவில் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருந்தது கண்டறியப்பட்டது.

    அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இந்த கடத்தல் தொடர்பாக வருசநாடு அருகே உள்ள கும்மணந்தொழுவை சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த வீரமணி மற்றும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கர மையிலா என்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.

    இதில் கும்மணந்தொழுவைச் சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இருவரும் கோவை 110 பட்டாலியன் பிரிவில் பிராந்திய ராணுவ படை வீரர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

    மேலும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கரமையிலா 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவில் வசித்து வருவதாகவும், அவர் மூலம் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் வைத்து பிரித்து எடுத்து செல்ல முயன்றபோது பிடிபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம்.
    • பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன.

    பசும்பொன்:

    மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம். அதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் 19 கிராமங்களுக்கு சொந்தமான பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து அய்யனார் கோவில்கள் களை கட்டின.

    இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு, ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 கிராம மக்கள் சார்பில், பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன. இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை கிடா வெட்டு நடைபெற்றது.

    ஒரே வெட்டில் தலை வேறு, உடல் வேறாக ஆடுகள் வெட்டப்பட்டன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரட்டை கிடா வெட்டுவது வழக்கம். பலியிடப்பட்ட ஆடுகள் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின் அவரவர் சமைக்க கொண்டு சென்றனர்.

    இந்த திருவிழாவில், கமுதியை சுற்றிலும் உள்ள ஏராளமான கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    • பாசக்கார ஊர் என்றால் அது மதுரை தான்.
    • கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திரைப்பட சூட்டிங் இல்லாமல் இருந்தால், வாய்ப்பு கிடைக்குமேயானால் நிச்சயம் ஒரே கட்சி, ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அ.தி.மு.க.விற்கு தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். எனது பிரசாரம் பிற கட்சியினரையோ அல்லது பிற நபர்களையோ வசைபாடுவது குறித்து இருக்காது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்கள் மற்றும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தமிழக மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தல் பிரசாரம் செய்வேன்.


    பாசக்கார ஊர் என்றால் அது மதுரை தான். மேலும் நான் பிறந்த சொந்த ஊர் மதுரை அருகே தேனி இருப்பதால் இங்கு நடைபெறக் கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் கலந்துகொள்கிறேன்.

    தற்போதுள்ள சூழலில் வில்லன் மற்றும் கதாநாயகியின் தந்தையாக அது போன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நிச்சயமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். வில்லன்கள் காமெடியன் ஆகி விட்டார்கள், காமெடியர்கள் வில்லன்கள் ஆகி விட்டனர்.

    இந்த நிலையில் கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகனாக நடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
    • இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று காலை பா.ஜ.க. சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை மத்திய மந்திரி எல். முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    இதனையடுத்து திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில், மாவட்ட பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட பிரதமரின் கருத்து கேட்பு முகாமில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பிரதமருக்கு வழங்கும் வகையில் அதற்கான வைக்கப்பட்ட பெட்டியில் அளித்தனர். இதனை மத்திய மந்திரி எல்.முருகன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி, வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன டிப்படையில் பா.ஜ.க. சார்பில் கருத்துக் கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    எனவே பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், அனைத்து தரப்பு மக்கள் இந்த முகாம்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த கருத்துக்களை ஆலோசனைகளை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள்.
    • 3 ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக திகழ்ந்து வருகிறார். மகளிர் உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள். அப்படி இருந்தும் சிறப்பான நிதி நிலை அறிக்கையை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

    தமிழகத்திற்கு பிரதமர் மோடி மாதந்தோறும் வருகிறார். தேர்தலுக்கு பின் தி.மு.க. இருக்காது என மோடி கூறி உள்ளார். மோடி மட்டுமல்ல, தி.மு. க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.

    மதுரைக்கு விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 3 ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கட்டு வருகிறது.

    மத்திய அரசு லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை என தமிழக அரசை மிரட்ட பார்க்கின்றார்கள். ஆனால் முதலமைச்சர் அதை எதிர்த்து போராடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது கூட பணம் கொடுக்காமல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை வெற்றி பெற வைத்தோம்.

    மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், மகளிர் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பெண்கள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளனர். மதுரை புறநகர் தொகுதியான திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள் விருதுநகர் பாராளுமன்றத்திலும் சோழவந்தான், உசிலம் பட்டி உள்ளிட்ட தொகுதிகள் தேனி தொகுதியிலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றார்.

    • 1008 தீபங்களை லிங்க வடிவில் ஏற்றி பக்தர்கள் தரிசனம்.
    • ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    ராஜபாளையம்:

    தென் மாவட்டங்களில் பஞ்ச ஸ்தலங்கள் என்று அழைக்கப்படும் ராஜபாளையம் அருகே உள்ள சிவாலயங்களில் விடிய, விடிய பூஜைகள் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்தலங்களுக்கு சென்று விடிய, விடிய தரிசனம் செய்தனர்.

    நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஸ்தலங்கள் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களை அடங்கியதாக இருந்து வருகிறது.

    நீரை அடிப்படையாகக் கொண்ட கோவில் தென்காசி மாவட்டம் தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் குழல்வாய் மொழியம்மை சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இங்கு ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் மற்றும் சிவனடியார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிலத்தை அடிப்படையாக கொண்ட கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்-கோமதி அம்மன் சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் 1008 தீபங்களை லிங்க வடிவில் ஏற்றி வைத்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நெருப்பை அடிப்படையாகக் கொண்ட கரிவலம் வந்தநல்லூர் பகுதியில் உள்ள பால் வண்ண நாதர் ஒப்பனை அம்மன் சமேத ராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பாலில் தேங்காய் கலந்து சர்க்கரை சேர்த்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    காற்றை அடிப்படையாகக் கொண்ட தென்மலை திரிபுர நாதேஸ்வரர், சிவபரி பூரணி அம்மாள் சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சிவபெருமான் முன்பு உள்ள தீபங்களில் அனைத்து தீபங்களும் அமைதியாக இருக்க மேலே உள்ள ஒரே ஒரு தீபம் மட்டும் காற்றில் லேசாக ஆடிக்கொண்டே இருப்பது இந்த கோவிலில் சிறப்பபாகும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ஆகாயத்தை அடிப்படையாகக் கொண்ட விருதுநகர் மாவட்டம் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி-தவம் பெற்ற நாயகி சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஏராளமான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து அதிகாலை வரை தொடர்ச்சியாக பூஜை நடத்தப்பட்டு தரிசனம் செய்தனர். அன்ன தானமும் வழங்கப்பட்டது.போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • பாலாறு அணை கட்ட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார். இப்படி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிபோகிறது.
    • முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது அதற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டினுடைய திட்டங்களால் பயனடைந்தவர்களை தொடர்பு கொள்ள கருத்துக்களை கேட்க 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    எடப்பாடியார் இது குறித்து, தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களை எடுத்து வைத்துள்ளார். 'நீங்கள் நலமா' என்று கேட்கும் முதல்வரே, அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேறாமல் போச்சு, சட்டம் ஒழுங்கு சீரழிந்து போச்சு, சொத்து வரி, குடிநீர்வரி, மின் கட்டணம் உயர்ந்து போச்சு, விலைவாசி விண்ணை தொடுகிற அவல நிலைக்கு தமிழகம் ஆளாச்சு, போதை பொருள் அதிகமாச்சு, தமிழக வாழ்வாதார உரிமை பறிபோச்சு என்று இப்படி வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை.

    தேர்தலுக்கு, தேர்தல் மட்டுமே 'நீங்கள் நலமா' என்று கேட்கிற முதல்வரே, இன்றைக்கு மக்கள் நீங்கள் கொடுத்த 520 வாக்குறுதிகளில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் எத்தனை என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மனித நேயம் உள்ள, மனசாட்சி உள்ள மனிதராக இருப்பவர்களிடம் 'நீங்கள் நலமா' என்று கேட்டால் அவர்கள் எப்படி நலம் என்று சொல்லுவார்கள்.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் நிதி ஒதுக்கீடு செய்தார்கள் அது குறித்து வாய் திறக்கவில்லை. முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது அதற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

    பாலாறு அணை கட்ட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார். இப்படி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிபோகிறது. அது காப்பாற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    தமிழகத்திலேயே கெட்டுப்போன சட்ட ஒழுங்கை காப்பாற்றவில்லை, போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தவில்லை, கொலை கொள்ளை கற்பழிப்பு என்று தமிழகம் இன்றைக்கு அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

    அரசின் நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் ''நீங்கள் நலமா'' என்று கேட்டால் எப்படி மக்கள் பதில் சொல்வார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தக்க பதிலடியை மக்கள் தருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
    • 4 கால பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் 8 நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆடி, தை, அமாவாசை நாட்களிலும், மகா சிவராத்திரி அன்றும் சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதன்படி இன்று சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதலே சென்னை, திருச்சி, கோவை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் மலையேற அனுமதித்தனர்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர். மலைப்பாதையில் உள்ள சங்கிலிப்பாறை, வழுக்குபாறை, மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்ததால் அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் 4 கால பூஜைகள் விடிய, விடிய நடைபெறுகிறது. ஆனால் இந்த பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையேறிய பக்தர்கள் இன்று மாலை 4 மணிக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து விட வேண்டு மென வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு மலையடி வாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கி ஆடுகளை பலியிட்டு அன்னதானம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறை, சதுரகிரி கோவில் பகுதிளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மகா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்துவார்கள். ஆனால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி வழங்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது
    • அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அதில், பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான் என் அவர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.

    இதனை அடுத்து, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களுடன், வாக்களிப்போம் தாமரைக்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×