search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கு; சி.பி.ஐ குழு மீண்டும் விசாரணை
    X

    விசாரணை நடத்த வந்த சி.பி.ஐ அதிகாரிகள்.

    மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கு; சி.பி.ஐ குழு மீண்டும் விசாரணை

    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை தொடரலாம் என உத்தரவிட்டது.
    • குழுவினர் மைக்கேல்பட்டி பள்ளி மற்றும் விடுதிக்கு வந்து தங்கள் விசாரணையை தொடர்ந்தனர்.

    பூதலூர்,:

    திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் மைக்கேல் பட்டியில் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி 12ம்வகுப்பு படித்து வந்தவர் அரியலூர் மாவட்டம் வடுதபாளையம் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மகள் லாவண்யா (17).

    மாணவி லாவண்யா கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி விஷம்குடித்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார்.

    மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டு ப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சூழ்நிலையில் விடுதி வார்டன் மற்றும் பள்ளி காப்பாளர் தன்னை மதம் மாற வலியுறுத்தியதால் விஷம் குடித்ததாக லாவண்யா பேசியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மதுரைஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த ஜனவரி 31ஆம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் மைக்கேல் பட்டி பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர் அன்றைய தினம் மதுரைஐகோர்ட் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சிபிஐ விசாரணை தொடரலாம் என கூறியது.

    இதனை அடுத்து சிபிஐ தரப்பில் 24 பக்கம் கொண்ட முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

    கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி சிபிஐ துணை இயக்குனர் வித்தியா குல்கர்னி தலைமையிலான குழுவினர் மைக்கேல்பட்டி பள்ளி மற்றும் விடுதிக்கு வந்து தங்கள் விசாரணையை தொடர்ந்தனர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு நாட்களில் சிபிஐ அதிகாரிகள் குழு, பள்ளி விடுதி பள்ளி மற்றும் வடுகர்பாளையம் ஆகிய இடங்களிலும், தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் விசாரணையை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் குழு துணை சூப்பிரண்ட் சந்தோஷ் குமார், இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் மைக்கேல் பட்டி மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் விசாரணையை மேற்கொண்டனர்.

    பள்ளியில் படிக்கும் மாணவியர், மாணவியின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொ ண்டதாக கூறப்படுகிறது.

    நேற்று பகல் 12 மணிக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழு 2 மணிக்கு திரும்பி சென்று விட்டு, மீண்டும் மாலை 3 மணிக்கு வந்து விசாரணை தொடர்ந்து 5 மணிக்கு திரும்பி சென்றனர்.

    உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நடைபெற்று வரும் சிபிஐ விசாரணை இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×