search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது: ஆய்வுக்கு பின்னர் துணைக்குழு தகவல்
    X

    கோப்பு படம்

    முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது: ஆய்வுக்கு பின்னர் துணைக்குழு தகவல்

    • தற்போது பருவமழை யால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • கசிவுநீர் அளவு 62 லிட்டர் என நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனை அணை மிகுந்த பலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

    தற்போது பருவமழை யால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வள ஆணையர் செயற்பொறி யாளர் சதீஷ் தலைமையில் தமிழக பிரதிநிதிகள் பெரியாறு சிறப்பு கோட்ட பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகள் கட்டபணை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அணில்குமார், உதவி பொறியாளர் அருண்ராஜ் உள்ளிட்ட குழுவினர் மெயின் அணை, பேபி அணை, கேலரிபகுதி மதகு பகுதிகளை ஆய்வு செய்த னர்.

    கசிவுநீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாலையில் ஆலோசனை க்கூட்டம் குமுளி 1ம் மைலில் உள்ள மத்திய கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இதன் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில்,

    அணையில் உள்ள 13 மதகுகளில் 2,4,5வது மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்பட்டது. மேலும் கசிவுநீர் அளவு 62 லிட்டர் என நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனை அணை மிகுந்த பலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அணையில் வழக்க மான பணிகளை மேற்கொள்ள பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கோரி குழு தலைவரை வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.75 அடியாக உள்ளது. அணைக்கு 1324 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. 635 கனஅடி நீர் வருகிறது. 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 124 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. 30 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 21, பேக்கரி 27.4, கூடலூர் 2.8, சண்முகாநதி அணை 0.8, உத்தமபாளையம் 1 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×