search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடை கட்டிடத்தை சீரமைக்காததால் வினோத பேனர் வைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி
    X

    ரேசன் கடை கட்டிடத்தை சீரமைக்காததால் வினோத பேனர் வைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி

    • ரேசன் கடை குறித்த மனுவை எங்கெல்லாம் எந்தெந்த தேதியில் அனுப்பி உள்ளார் என்ற விவரத்துடன் பேனர் ஒன்று வைத்துள்ளார்.
    • ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் கீழத்தெரு மற்றும் தடிவீரன் கோவில் மேல தெரு ஆகியவை உள்ளன. இந்த 2 தெருக்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இவர்கள் ரேசன் அரிசி வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள கால்வாய் அருகே ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழையில் இந்த ரேசன் கடைக்குள் வெள்ளம் புகுந்து முட்புதர்களும் அடித்து வரப்பட்டது. இதனால் அந்த கட்டிடம் சேதமடைந்ததோடு அங்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் கோடீஸ்வரன் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இங்கு சென்று வருவதற்கு ஆட்டோவில் தான் செல்ல வேண்டும் அல்லது பஸ்சில் பயணம் செய்தால் நீண்ட தூரம் நடக்க வேண்டி இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

    இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேசன் கடையை உடனடியாக புதுப்பித்து தர கோரி நாம் தமிழர் கட்சியின் நெல்லை சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் மாரி சங்கர் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 4 முறை கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் ஒரு முறை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது.

    இதுவரை அதிகாரிகள் அந்த இடத்தை கூட வந்து நேரில் ஆய்வு செய்யவில்லை. வேறு இடம் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் ஒருவர் கூட அந்த பக்கம் வரவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் கோடீஸ்வரன் நகருக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர் என்று கூறியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மாரி சங்கர் காட்சி மண்டபம் அருகே உள்ள தடிவீரன் கோவில் தெருவில் வினோதமான பேனர் ஒன்று வைத்துள்ளார்.

    அதில் இதுவரை ரேசன் கடை குறித்த மனுவை எங்கெல்லாம் எந்தெந்த தேதியில் அனுப்பி உள்ளார் என்ற விவரத்துடன் பேனர் ஒன்று வைத்துள்ளார். இதனை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து செல்கின்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. செலவில் அந்த ரேசன் கடையில் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×