search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பழனி முருகன் கோவிலில் இன்று நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது
    X

    பழனி முருகன் கோவிலில் இன்று நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது

    • சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.
    • பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.

    பின்னர் மதியம் உச்சிகால பூஜைக்குப் பின்பு மலைக்கோவிலில் உள்ள முருகபெருமான், துவார பாலகர்கள், வாகனம் ஆகியவற்றிற்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    இதேபோல் உப கோவில்களிலும் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது.

    கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு இதில் சிறுவர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

    10ம் நாளாக வருகிற 12ம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து முத்துக்குமார சாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்களம் சென்று வில், அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் முத்துக்குமார சாமி பெரியநாயகி அம்மன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×